எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நமது சிறப்புச் செய்தியாளர்

மத்தூர், ஜூலை 30 நம் மக்களின் கல்வி உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்த தந்தை பெரியார் சிலை ஒவ்வொரு பள்ளியிலும் திறக்கப்பட வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

28.7.2018 அன்று காலை 11 மணியளவில் மத்தூர் கலைமகள் கலாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தருமபுரி - மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 28.7.2018 சனியன்று காலை 11 மணியளவில் அறிவாசான் - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா கோலாகலத்துடன் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பலத்த கரஒலிக்கிடையே சிலையைத் திறந்து வைத்தார். மூடப்பட்டிருந்த திரையை விலக்கி தந்தை பெரியார் சிலையைத் தமிழர் தலைவர் திறந்த போது தந்தை பெரியார் வாழ்க பகுத்தறிவுப் பகலவன் வாழ்க என்ற பொது மக்களின் ஒலி முழக்கங்கள் வளாகத்தையே கிடுகிடுக்க வைத்தன.

தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவுக்கு முன்னிலை வகித்தவர்கள். இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), ஊமை. ஜெயராமன் (அமைப்புச் செயலாளர்), கே.சி. எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், மகளிரணி மகளிர் பாசறை), அண்ணா. சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்), அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர், மகளிரணி மகளிர் பாசறை), பெரியார் பெருந்தொண்டர் கே.ஆர். சின்னராஜ்.

பள்ளித் தாளாளர் தலைமை உரை

நிகழ்ச்சிக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் இயக்குநரும் பள்ளியின் தாளாளருமான சிந்தை மு. இராசேந்திரன் தலைமை வகித்தார்.

அவர் தன் தலைமை உரையில் குறிப்பிட்டதாவது: என் வாழ்நாளின் கனவு இன்று நிறைவேறியது - இது என் கனவுத் திட்டமாகும்.

கற்பனைக் கடவுள் சரஸ்வதிக்கு சிலை திறக்கலாம் - பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்குச் சிலை திறக்கக் கூடாதா?

தந்தை பெரியார் சிலையை தமிழர் தலைவர் திறந்தார்

இந்த நாட்டில் கற்பனை மூடப் பாத்திரமான சரசுவதி சிலைகளைத் திறக்கலாம். ஆனால் நாட்டு மக்களின் கல்வி உரிமைக்காக, பெண்களின் உரிமைக்காக அயராது பாடுபட்ட தந்தை பெரியார் சிலையைத் திறப் பதற்கு ஏகப்பட்ட இடுக்கண்கள் முட்டுக்கட்டைகள் எதிர்ப்புகளை சந்தித்து சந்தித்து இறுதியில் தந்தை பெரியார் தான் வெற்றி பெற்று இருக்கிறார். இந்தச் சிலை திறப்பு விழாவும் அவ்வாறுதான் வெற்றி விழாவாக மலர்ந்திருக்கிறது.

நம் மூவேந்தர்கள் என்ன செய்தார்கள்?

நம் நாட்டை மூவேந்தர்கள் ஆண்டார்கள் வெளிநாடுகளுக்கெல்லாம் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றார்கள் என்று பெருமைப் பேசுகிறோமே, அந்த மூவேந்தர்கள் நம் மக்களுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தார்களா என்ற அர்த்தம் பொதிந்த கேள்வியை எழுப்பினார் பள்ளியின் தாளாளர்.

பார்ப்பனருக்கே படிப்பு

அவர் கூறிய கருத்து நூற்றுக்கு நூறு உண்மையே! பதினோராம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென் னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரம் என்னும் ஊரில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர், 140 மாணவர்கள் அங்குக் கல்விப் பயின்றனர். 14 ஆசிரியர்கள் பணியாற்றினர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நாள்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக்கல் லூரிக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் என்ன என்பதுதான் முக்கியம். வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும், மீமாம்ச வேதாந்த தத்துவங்களுமே அங்கு சொல்லிக் கொடுக் கப்பட்டன.

அப்படியென்றால் அங்கு யார் படித்திருப்பார்கள் என்பது எளிதில் புரிந்து கொள்ளலாமே! பார்ப்பன மாணவர்கள் கல்வி பயிலப் பாடுபட்டவர்கள்தான் நம் சோழ மன்னர்கள்.

பாண்டிச்சேரி அருகில் உள்ளது திருபுவனம் என்னும் கிராமம் அங்கும் சோழ அரசர்கள் ஒரு பள்ளியை ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்காக அளிக்கப்பட்டது. 260 மாணவர்கள் பயின்றனர். 12 ஆசிரியர்கள் அமர்த்தப் பட்டனர். அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன? இதிகாசங்களும், மனுதர்ம சாஸ்திரமும்தான் அதாவது பார்ப்பனர்களுக்குச் சொல்லிக் கொடுத்தது சமஸ்கிருதப் படிப்பே இதுதான் நமது தமிழ்  மன்னர்கள் ஏற்பாடு செய்ததாகும்.

எண்ணாயிரமும், திருபுவனமும்

இவ்வளவு எடுத்துகாட்டுகளைப் பள்ளியின் தாளாளர் இராசேந்திரன் அவர்கள் கூறவில்லை என்றாலும் அவர் தலைமை உரையில் குறிப்பிட்டாரே - நம் அரசர்கள் நம் மக்கள் கல்வி பயில என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கான விடைதான் எண்ணாயிரமும், திருபுவனமும் (எடுத்துக்காட்ட இன்னும் ஏராளம் உண்டு).

நம் அரசர்கள் செய்யத் தவறிய அந்தக் கல்வி வாய்ப்பை நம் மக்களுக்குத்திறந்து விட்ட வித்தகர் தான் தந்தை பெரியாரும்,  காமராசரும்  என்றார்   விழாவுக்குத் தலைமை வகித்த பள்ளியின் தாளாளர் சிந்தை மு. இராசேந்திரன்.

தமிழர் தலைவர் உரை

தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த திராவிடர் ககத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

கலைஞருக்கு வாழ்த்து!

என் உரையைத் தொடங்கும்முன், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முழு உடல் நலம் பெற்று மீண்டும், தன்பணியைத் தொடர வேண்டும் என்ற விழைவினை இவ்விழாவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். (பலத்த கரஒலி).

அதோ சிலையாகக் காணப்படுகிறாரே - தந்தை பெரியார் யார் - இவர் யார்?

பேதங்களை ஒழிக்க வந்தவர் பெரியார்

மனித சமூகத்தில் எந்த வகையில் பேதம் இருந்தாலும் அதனை ஒழிக்கப் புறப்பட்டவர் ஒழித்தவர். கல்விக் கண்களை நமக்கெல்லாம் தந்தவர் என்று தொடங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாணவர்களைப் பார்த்து சில கேள்விகளை எழுப்பினார்.

'உங்கள் பாட்டனார் பாட்டியாரில்

பட்டதாரிகள் உண்டா?'

உங்கள் தாத்தா பாட்டியர் எத்தனைப் பேர் பட்ட தாரிகள்? கை தூக்குங்கள் என்றார்.  7 பேர்கள் கை உயர்த் தினார்கள் உங்கள் அப்பா, அம்மாக்களில் பட்டதாரிகள் எத்தனைப் பேர்? 87 பேர்கள் கை உயர்த்தினர்.

ஆனால் நீங்கள் இந்தப் பள்ளியில் படிப்பவர்கள் எத்தனைப் பேர்? (1200 பேர்கள்) என்று இருபால் மாண வர்களும் பதில் அளித்தனர்.

இவ்வளவுப் பேர் நம் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால் இதற்குக் காரணமானவர் தான் இதோ இங்கே சிலையாக நிற்கும் நாம் திறந்த தந்தை பெரியாரும் மற்றும் கல்விவள்ளல் காமராசரும்.

கல்விக்குக் கடவுள் சரஸ்வதியாம்

நம் மதம் என்ன சொல்லுகிறது? கல்விக்குக் கடவுள் சரஸ்வதி என்று வைத்துள்ளோம். ஆண்டாண்டு காலமாக சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுவதில் ஒன்றும் குறைச்சலில்லை. நிலைமை என்ன? சரஸ்வதி  பாட்டியே கையெழுத்துப் போடத் தெரியாத தற்குறிதானே!

ஒவ்வொரு பள்ளியிலும் பெரியார் சிலை

பாட்டி சரஸ்வதி படிக்கவில்லை ஆனால் பேத்தி சரஸ்வதி இப்பொழுது டாக்டர், பொறியாளர், நீதிபதி! இந்த மாற்றத்துக்குக் காரணம் தான் தந்தை பெரியார். அதற்காகத் தான் இந்தப் பள்ளியிலே உங்களது தாளாளர் தந்தை பெரியார் சிலையைத் திறக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தப் பள்ளியில் மட்டுமல்ல - ஒவ்வொரு பள்ளி யிலுமே தந்தை பெரியார் சிலையைத் திறக்க வேண்டும் (பலத்த கரஒலி)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் அருமையான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

"தமிழன் அடிமையானது ஏன்? எப்படி?"என்பது அந்த நூலின் பெயராகும்.

அந்த நூலிலே ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்?

1901ஆம் ஆண்டில் வெள்ளைக்காரன் ஆட்சி செய்தபோது எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நம் நாட்டு மக்களில் படித்தவர் ஒரு சதவீதத்துக்கும் குறைவே!

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்கூடக் கல்வி கற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நிலைமையை மாற்றியது திராவிடர் இயக்கம் நீதிக்கட்சி  - தந்தை பெரியார் கல்வி வள்ளல் காமராசர் தொடர்ந்து வந்த திராவிட இயக்க ஆட்சிகள்.

கல்வி என்பது வெறும் மார்க் வாங்குவதல்ல - பகுத்தறிவை வளர்ப்பது - மூடநம்பிக்கைகளைத் துறப்பதாகும்.

மாணவர்கள் கைகளிலே வண்ண வண்ணமாகக் கயிறு கட்டுகிறார்கள். எங்களுடைய கோஷம் கயிறு கட்டாதே, கயிறு திரிக்காதே என்பதாகும்.

நாங்கள் ஆண்டுதோறும் வல்லத்தில் குழந்தைகள் பழகு முகாம் நடத்துகிறோம் பயிற்சிக்கு வரும்போது சிறுபிள்ளைகள் கையில் கயிறு கட்டியிருப்பார்கள் வலுக்கட்டாயமாக நாங்கள் அதனை அறுத்து எறிவதில்லை. மாறாக விஞ்ஞான ரீதியாக விளக்குகிறோம். ஒரு பிள்ளையிடமிருந்து அந்தக் கயிற்றைப் பெற்று திருச்சியில் உள்ள பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு அனுப்பி அதனை சோதனை செய்யுமாறு கூறுவோம். அந்த சோதனையின் முடிவு என்ன தெரியுமா?

"கயிறு கட்டாதே, கயிறு திரிக்காதே!"

அந்தக் கயிறுகளில் ஏராளமான கிருமிகள் இருப்பதை அந்தச் சோதனை சொல்லுகிறது. அதனை வெண் திரையில் சிலைடு போட்டுக் காட்டுவோம். கயிறு கட்டிய பிள்ளைகள் தானாகவே அந்தக் கயிறுகளை அறுத்து எறிந்து விடுவார்கள். நம் கல்வி என்பது பகுத்தறிவைப் போதிப்பதற்குப் பதிலாக மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது. இதிலிருந்து விடுபட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துஞற்று பவர்        (குறள் - 620)

என்பது குறள்; விதி என்று சொல்லப்படுவதையெல்லாம் அயராத உழைப்பால் வெற்றி கொள்ள முடியும் என்கிறார் நமது திருவள்ளுவர்.

யாரும் ஊரே யாவரும் கேளிர்

ஆகவே மாணவச் செல்வங்களே நன்றாகப் படியுங்கள் உழையுங்கள் - வெற்றிப் பெறுவீர்கள்.

உலகமே ஒரு குடும்பம் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது நமது தமிழர் பண்பாடு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

 

விழாவில் பங்கேற்ற மாணவர்கள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner