எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டின் வெற்றி - கூட்டு முயற்சிக்கும் - கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி

மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு பொதுச்செயலாளர் பயனாடை அணிவித்துப் பாராட்டு

குடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டை சிறப்பாக நடத்தித் தந்தமைக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு குடந்தை மாவட்டக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்தனர். உடன் பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி கோ.தங்கராசு மற்றும் தோழர்கள். மாநாடு வெற்றிகரமாக அமைய உழைத்திட்ட திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலைமைக் கழகம் சார்பிலும், மாவட்டக் கழகம் சார்பிலும் பாராட்டி பயனாடை அணிவித்தார். மாவட்ட, மண்டல,  கழகப் பொறுப்பாளர்கள் உடன் உள்ளனர் (குடந்தை, 27.7.2018).

குடந்தை, ஆக. 15 குடந்தையில் நடைபெற்ற நன்றி நவிலும் கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், குடந்தை திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டின் வெற்றி என்பது கூட்டு முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த வெற்றி என உரையாற்றினார்.

திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டிற்கு உழைத்த பெருமக்களுக்கு நன்றி கூறும் கலந்துரையாடல் கூட்டம் குடந்தை பெரியார் மாளிகையில் 27.7.2018 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

குடந்தை மாவட்ட திராவிட கழகத் தலைவர் கு.கவுதமன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி யும், மாநாடு சிறக்க உழைத்த அனைவருக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உரையாற்றினார். மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் க.குருசாமி மாநாட் டின் வரவு, செலவு விவரங்களை வாசித்தார்.

தொடர்ந்து மேனாள் மாவட்டத் தலைவர் தாராசுரம் வை.இளங்கோவன், மேனாள் நகர செயலாளர் தி.மில்லர், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ச.அஜீதன், வலங்கைமான் ஒன்றிய தலைவர் சந்திர சேகரன், பாபநாசம் ஒன்றிய தலைவர் தங்க.பூவானந்தம், குடந்தை ஒன்றிய தலைவர் த.ஜில்ராசு, திருப்பனந்தாள் ஒன்றியம் சார்பில் பிழைபொறுத்தான், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மாவட்ட ப.க. செயலாளர் மோகன், மாவட்ட மாணவர் கழக தலைவர் அரவிந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக் குமார், மகளிரணி தோழியர்கள் திரிபுரசுந்தரி, அம்பிகா, மாவட்ட அமைப்பாளர் வ.அழகுவேல், மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம், தஞ்சை மாவட்ட கிளைச் செயலாளர் க.சந்துரு, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தஞ்சை மண் டலச் செயலாளர் மு.அய்யனார், மண்டலத் தலைவர் வெ.செயராமன், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன துணைத் தலைவர் இராஜகிரி கோ.தங்கராசு உள்ளிட்ட கழகத் தோழர்கள் மாநாட்டின் வெற்றியைப் பற்றியும், சிறப்பினையும் எடுத்துக் கூறினர். கூட்டத்தில் கராத்தே மாஸ்டர் டி.ஆ.வினோத், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக், நகரத் தலைவர் காமராசு, தஞ்சை மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர் சற்குணன், மணிகண்டன், அருண், அரவிந்த், தஞ்சை கி.சவுந்தரராசன் உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.

இறுதியாக திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்

திராவிட மாணவர் கழக பவளவிழா மாநாட்டின் சிறப்புகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கூறினீர்கள். மகிழ்ச்சி!

நமது வழக்குரைஞர் நிம்மதி மூலமாக இம்மாநாடு சாரட் புகழ் மாநாடாக மாறியது. தஞ்சை மண்டல செயலாளர் அய்யனார் அவர்கள் ஒரு கோரிக்கையினை முன் வைத்தார். இனி தமிழர் தலைவர் அவர்களை அய்ந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில்தான் ஊர் வலமாக அழைத்துவர வேண்டுமென்றார். அவர் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

சாரட் வண்டியில் ஊர்வலம்

தமிழர் தலைவர் அவர்களை இனி அய்ந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வருவோம்! இந்த குடந்தை மாநாட்டில் இரண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டி ஒரு முன்னோட்டம்தான். 2019 ஜனவரி திங்கள் தஞ்சையில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டில் அய்ந்து குதிரைகளை பூட்டி சிறப்பான சாரட் வண்டியை தயார் செய்து ஊர்வலமாக அழைத்து வருவோம் (பலத்த கைதட்டல்).

மக்களை கவர்ந்த ஊர்வலம்

நம்முடைய பெரியார் பெருந்தொண்டர் இராசகிரி தங்கராசு அவர்கள் ஒரு செய்தியினை குறிப்பிட்டார்கள். மாநாட்டின், மாணவர் கழக அணிவகுப்பு ஊர்வலம் ஒன்றரை மணி நேரம் குடந்தை கடைவீதியினையும், மக்களையும் கடந்து கவர்ந்து வந்தன என்றார். அழகாக, இராணுவ கட்டுப்பாடு போன்று பொதுமக்கள் வியக்கும் வண்ணம், நம் எதிரிகள் மிரளும் வண்ணம் நடந்தது. இவ்வளவு சிறப்பாக மாநாடு ஊர்வலம் நடைபெறக் காரணம், இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு தோழரின் கூட்டுமுயற்சியும், கடின உழைப்பும் தான்.

நாங்கள் திட்டமிடலாம், தலைமைக் கழகத்திலிருந்து சொல்லக்கூடிய அந்த திட்டங்களையெல்லாம் நீங்கள் தான் செயல்படுத்தி, வழி நடத்தினீர்கள். அதன் விளைவு தான் இந்த மாநாட்டின் வெற்றி! இந்த மாநாட்டின்மூலம் ஒவ்வொருவரும் சிறப்பான களப்பணியை செய்து இருக்கிறீர்கள். இடையில் கொஞ்சம் களப்பணியில் தொய்வு ஏற்பட்டிருந்தது. அந்தத் தொய்வு இம்மாநாட்டின் மூலம் நீங்கி இருக்கிறது.

இயக்கத்தின் முக்கிய பணி

நன்கொடை திரட்டும் பணி என்பது இயக்கத்திற்கு முக்கியமானது. அதன்மூலம் தான் நம் இயக்கத்தைப் பற்றி மற்றவர்கள் நம்மிடம் விவாதிக்க, நம்மை ஒழுங் குப்படுத்திக் கொள்ள, விளம்பரம் எளிதாக பெறமுடியும். அத்தகைய மகத்தான பணியை அனைத்து மாவட்ட கழக அனைத்து அணி பொறுப்பாளர்களும் தமிழகம் முழுவதும் சிறப்பாக போட்டி போட்டுக் கொண்டு செய்தனர். குறிப்பாக குடந்தை மாவட்டப் பொறுப் பாளர்கள் மாநாட்டிற்கு தேவைப்படும் செலவு தொகை களை திரட்ட பல்வேறு விதமாக ஒவ்வொருவரும் முயற்சித்து, உழைத்து ரூபாய் ஒன்பதரை லட்சம் திரட்டி மாநாடு சிறப்பாக நடைபெற வழிவகுத்தீர்கள். உண்மை யைச் சொல்ல வேண்டுமானால், சென்னையில்கூட இதுபோன்று வசூல் செய்து நடத்தியிருக்க முடியாது. இதற்குத் தலைமையேற்று சிறப்பாக தொண்டாற்றிய மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர், மாநில அமைப் பாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவட்டத் தலைவர் கவுதமன், செயலாளர் துரைராசு, வரவு, செலவு கணக்கு வாசித்த குருசாமி போன்ற ஒவ்வொரு தோழர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு அடிப்படையாகும்.

இங்கு உரையாற்றிய அம்பிகா அம்மா சொன்னது மாதிரி, நாம் அதிகமான மாணவர்களைத் திரட்டினோம். அடுத்த கட்டப் பணியாக தொடர்ச்சியாக பணிகளை மேற்கொண்டு இயக்கப் பணிகளை மேற்கொள்ள வேண் டும். அடுத்த தலைமுறைகளை உருவாக்க வேண்டும். மாணவர் மாநாட்டை அடுத்து அவர்களுக்கு அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் நோக்கில் நமது ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் பெரியார் பிஞ்சுகள் மாநாட்டை ஆகஸ்ட் 18 அன்று திண்டுக்கல்லில் நடத்த திட்டமிட்டு அதற்காக பணிகளும் செம்மையாக நடைபெற்று வருகின்றன. இதுதான் நம் கழகத்தின் தொடர்பணி. ஆசிரியர் மாணவர்களுக்கு சொன்னால் கடினமானதாக, சுமையாக தெரியும். அதைப்போன்றே நமது ஆசிரியர் அவர்கள் ஒரு திட்டத்தை, மாநாட்டை அறிவிக்கும்போது கடினமானதாகத் தோன்றும். அதை நடத்திக்காட்டிய பிறகே, அதன் பயனும், வலிமையும் தெரியும். இம்மாநாடு அனைவருக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

எவராலும் நடத்தமுடியாத அணிவகுப்பு ஊர்வலம்

எனக்கு முதலில் சந்தேகமாக இருந்தது. இவ்வளவு மாணவர்கள் வருவார்களா? என்று நினைத்தேன். ஒரு குறைவான எண்ணிக்கையில் திட்டமிட்டு இருந்தோம். அணிவகுப்பு மாணவர்களுக்கு சீருடை பனியன் மூவாயிரத்திற்கும் அதிகமாக கேட்டார்கள். குறைவாகத்தான் வழங்கினோம். பனியன் (டி சர்ட்) பற்றாக்குறையால் அதிகமான மாணவர்கள் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்க முடியவில்லை. பனியன் (டி சர்ட்) இருந்தி ருந்தால் இன்னும் பெரிய அளவில் ஊர்வலம் அமைந் திருக்கும். இந்த மாதிரியான அணிவகுப்பை தமிழ் நாட்டில் எந்த இடத்திலும் பார்த்திருக்க முடியாது. எந்த அரசியல் கட்சியினரும், இயக்கத்தினரும் நடத்திக்காட்ட முடியாது. இப்படிப்பட்ட சிறப்பானதொரு அணிவகுப்பு ஊர்வலத்தை காண வழிவகைச் செய்த உங்கள் அனை வருக்கும் நன்றி! ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி!

தேனீக்கள் போன்ற தோழர்களின் சுறுசுறுப்பு

குடந்தையில் திராவிட மாணவர் கழக மாநாடு நடத்த திருச்சியில் 4.3.2018 அன்று நடைபெற்ற மாணவர் கழக கலந்துரையாடலில் தான் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. முதலில் மாநில மாநாடாக அறிவித்து பின்னர், திராவிட மாணவர் கழக பவள விழா ஆண்டையொட்டி பவளவிழா மாநாடாக மாறியது. இம்மாநாடு சிறப்பாக நடைபெற குணசேகரன் அவர்கள் முழுக்காரணமாவார். அவர் நம் மாநாடு அறிவிப்பிற்கு முன்னதாகவே தமிழகமெங்கும் சந்திப்போம் & சிந்திப்போம்'' என்று திராவிட மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ச்சியாக நடத்தியும், அதனைத் தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி ஜூன் 12ஆம் தேதி காரைக்கால் வரை 60 கழக மாவட்டங்களிலும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி மாணவர் அமைப்பினை கட்டமைத்தார், அமைப்பை ஏற்படுத்தினார். அமைப்பை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. மிகவும் கடினமான காரியம், பெருமைக்குரிய ஒன்றாகும். தமிழர் தலைவர் அவர்களின் பெரும் விருப்பத்தினை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.

14.4.2018 அன்றுதான் குடந்தையில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வரவேற்புக்குழு அமைக்கப்பட்டு மாநாட்டுப் பணி தொடங்கியது. குடந்தை மாவட்டக் கழக தோழர்கள் பம்பரமாக தேனீக்கள் போன்று சுற்றிச்சுற்றி சுழன்று பணி செய்து, மாநாட்டுக்கு முன் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் மேலாக களப்பணி செய்து உழைத்திருக்கிறீர்கள். அந்தக் களப்பணிதான் வெற்றியாக அமைந்தது. தமிழர் தலைவர் அவர்கள் மாநாட்டில் உரையாற்றும்போது அனைவருக்கும் நன்றி நல்கினார்கள்.

எந்த இயக்கத்தினராலும், கட்சியினராலும் கடைப் பிடிக்க முடியாத பத்து உறுதிமொழிகளை நமது திராவிட மாணவர் கழகத்தினர் ஏற்றனர். பின்னர் பத்தொன்பது தீர்மானங்களை முன்மொழிந்தனர். இந்த உறுதி மொழி களை, தீர்மானங்களை நம் இயக்கத்தினரை தவிர எவ ராலும் ஏற்க முடியாது.

இதன் விளைவை எதிரிகளால், சில அரசியல் கட்சியினராலும், இயக்கத்தினராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த மாநாட்டின் வெற்றியை திசை திருப்பவே சாரட் வண்டி பற்றி பேச்சு, அதிகமான மாணவர்கள் கலந்துகொண்ட செய்தியினை எவரும் தெரிந்து கொள்ளக்கூடாது என மறைக்கவே சாரட் பற்றி விமர்சனங்கள் வேறொன்றுமில்லை.

அதிகாரிகளுக்கு ஆச்சரியமூட்டிய அணிவகுப்பு

காவல் ஆய்வாளர்கள், அதிகாரிகளே நம் கழகத்தின் கட்டுப்பாட்டை எண்ணி காவல்துறையினர் 25 பேர் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களோ, இவர்களுக்கு பாதுகாப்பு தேவையா? என்றி ருந்தனராம். புற்றீசல் போன்று மாணவர்கள் அதிகமாக வந்ததை எண்ணி இவ்வளவு மாணவர்களா? என்று வியந்ததாகவும் கூறினார்களாம். மேலிடத்திலிருந்து இவர் களை தொடர்பு கொண்டு குறைவாகத்தான் வருவார்கள் என்றீர்கள், இவ்வளவு பேர் என்பதை சொல்லவில்லை என்றார்களாம். ஆய்வாளர் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டா ராம், அது என்னவென்றால் இவ்வளவு மாணவர்கள் வந்தனர், ஒருவர் கூட டாஸ்மாக் பக்கமோ, எவ்வித ஒழுங்கீனமான செயல்களிலும் ஈடுபடாமல் வந்துள் ளார்களே, நான் எந்த கட்சி ஊர்வலங்களிலும் இதுபோன்று பார்த்ததில்லை'' என்று பாராட்டி வியந்தார்களாம் நம் கழகத் தோழர்களிடம்! அதை என்னிடம் தோழர்கள் கூறினார்கள்.

கோயில் நகரம் சாரட் புகழ் நகரமாக மாறியவை

எதிரிகள் இந்த மாநாட்டின் வெற்றியைக் கண்டு பொறுக்க முடியாமல்தான் சாரட் வண்டி பற்றி திசை திருப்பி பேசினார்கள். அவர்களுக்கு கிடைத்த ஆயுதம் சாரட் வண்டி. அதுவும் நமக்கு சாதகமாகத்தான் அமைந்தது. நம்மைப் பற்றிய ஒரு விளம்பரம், தொடர்ந்து நம் இயக்கத்தை நினைத்துக் கொண்டிருக்க கிடைத்த விளம்பரம். அதன் விளைவாகதான் தினந்தோறும் செய்தியாளர்கள் பெரியார் திடலுக்கு அணிவகுத்து முதல் கேள்வியே சாரட் வண்டிபற்றி கேட்கிறார்கள். நாம் குடந்தை நகரில் தமிழர் தலைவர் அவர்களை சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தது, சாரட்டை ஷேர் இட் மூலமாக குடந்தை நகரம், உலகெங்கும் ஷேர் செய்து நமது இயக்கத்திற்கு புகழ்மாலை சூட்டியது. கோயில் நகரம் இப்போது திராவிட மாணவர் கழகத்தின் சாரட் வண்டி பற்றி பேசும் நகரமாக மாறியது. இந்த வெற்றியை உங்கள் ஒவ்வொருவருக்கும் உரித்தாக்குகிறோம். எந்த மாநாட்டிலும் நிறைகள், குறைகள் இருக்கும். ஆனால் இந்த மாநாட்டில் நிறை, குறைகளை பேசாமல் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்தார்கள். கூட்டு முயற்சி எடுத்தீர்கள். அதுதான் இந்த மாநாட்டின் வெற்றி! வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் தலைமைக் கழகத்தின் சார்பிலும் என் சார்பிலும் பாராட்டையும், நன்றியையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்து கொள்கிறேன். நன்றி! நன்றி!! முடிவில் குடந்தை நகரச் செயலாளர் வழக்குரைஞர் பீ.இரமேசு நன்றி கூறினார். மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராசு இணைப்புரை வழங்கினார்.

மாநாட்டிற்கு உழைத்த பெருமக்களுக்கும், தோழர் களுக்கும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக பயனாடை அணிவித்து பாராட்டினார்.

வருகை தந்தை அனைவருக்கும் மாவட்ட ப.க. தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் சிறப்பான புலால் உணவு அளித்து சிறப்பித்தார்.

கழகப் பொதுச்செயலாளரிடம் நன்கொடை வழங்கியவர்கள்

தஞ்சை மண்டலச் செயலாளர் மு.அய்யனார் ரூ. 5,000, தி.மில்லர் (குடந்தை) ரூ. 1,000, தங்க பூவானந்தன் (பாபநாசம்) ரூ. 1,000, மேலக்காவேரி மாணவர் கழகம் சார்பில் ச.அஜீதன், அரவிந்தன் ரூ. 1,000, வ.அழகுவேல் (அய்யம்பேட்டை) ரூ. 1,000, உ.மதியரசி (குடந்தை) ரூ. 1,000, பா.இனியா (குடந்தை) ரூ. 500, பா.அகிலன் (குடந்தை) ரூ. 500.

ஒலி - ஒளி, மேடை அமைத்த ராஜசேகரன், அப்பு ஆகியோருக்கும், எல்.இ.டி. அமைத்துக் கொடுத்த கராத்தே மாஸ்டர் டி.ஆர்.வினோத் அவர்களுக்கும், குடந்தை நகர பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆகியோருக்கும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் (குடந்தை, 27.7.2018).

பாபநாசம் ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கும், வலங்கைமான் ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கும், குடந்தை ஒன்றிய பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆகியோருக்கும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் (குடந்தை, 27.7.2018).

குடந்தை உ.மதியரசி, பா.இனியா, பா.அகிலன் கழகப் பொதுச்செயலாளரிடம் நன்கொடை வழங்கினர். திருவிடைமருதூர் ஒன்றிய, நகர பொறுப்பாளர்களுக்கும், தஞ்சை பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கும் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பயனாடை அணிவித்துப் பாராட்டினார் (குடந்தை, 27.7.2018).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner