எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.மோகன் நெகிழ்ச்சியுரை!

சென்னை,செப்.5 எங்களைப் போன்றவர்கள் நீதிபதி களாக ஆனதற்குக் காரணம் பெரியார், அண்ணா, கலைஞர்தான் என்றார் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.மோகன்.

திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 31.8.2018 அன்று மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.மோகன் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

இந்த விழாவில் தலைமை தாங்குகின்ற என்னுடைய முன்னாள் மாணவர் ஆசிரியர் வீரமணி அவர்களே,

அய்யா சொல்வார், எல்லாரும் தூங்கிக்கொண் டிருக்கிறார்கள். 50 தடவை, 60 தடவை இங்கே வந்திருக் கிறேன். ஏன் எல்லாரும் சோர்ந்து போயிருக்கிறீர்கள்? டீ குடிக்கவில்லை என்று சொல்வார்கள். டீதான் பெரிதா? என்று சொல்வார்கள்.

கை தட்டும்போது நன்றாகத் தட்டுங்கள். என்னமோ ஓய்ந்து போனதுமாதிரி தட்டுகிறீர்கள்.

தமிழன் ஓய்ந்து போனதால்தான் இப்படி இருக்கிறது. ஆனால், விரைவிலே விடிவு காலம் வரும்.

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய இன்றைய தலைவர் நாளைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் (கைதட்டல் ஆரவாரம்).

அவர் மேயராக பொறுப்பேற்றவுடன் வாழ்த்துச் சொல்ல சென்றபொழுதே நீங்கள் அடுத்த முதல்வராக வருவீர்கள் என்று சொன்னேன்.

ஏனென்றால், அவர்பற்றி அவ்வளவு மரியாதை எனக்கு. என்ன காரணம் என்று சொல்கிறேன்.

பொன்முடி அவர்களே, என் தோழமை நீதிபதிகளே, பேரன்புமிக்க பெரியோர்களே, தாய்மார்களே இப்படித்தான் பெரியார் சொல்வார்.

இங்கே படத்திறப்புவிழாவுக்கு வந்து அந்த படத்தைத் திறந்துவைக்கும்போது என்னுடைய உள்ளமெல்லாம் உருகிவிட்டது.

பிரைடன் என்கிற ஆங்கிலக்கவிஞன் கூறுவதுபோல், நம்முடைய நினைவுக்கு உகந்தவன், நினைவிலே நிற்கின்றவன் இனிமையான குணங்கள் அவர் மாய்ந்த பின்தான்மலரும் என்றார்கள். அந்த மலர்கின்ற விழா தான் இந்த நினைவேந்தல் விழா என்று நினைக்கின்றேன்.

7.8.2018 கலைஞர் அவர்கள் வந்துவிடுவார் வந்துவிடுவார் என்று சொன்னார்கள். ஆனால், அவர் வரவே இல்லை. 8.8.2018 தெற்கு நோக்கி பார்த்தேன் தேடித் தேடிப் பார்த்தேன் சூரியன் உதிக்கவே இல்லை. அந்த தெற்கிலே உதிக்கின்ற சூரியன் உதிக்கவே இல்லை.

எங்கே என்று பார்த்தால், கடற்கரையிலே துயில் கொண்டிருக்கிறார்.

அவர் ஒரு கவிதைப் பெட்டகம்

கடற்கரையிலே துயில் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டிலும், அவர் கவிதைப் பெட்டகம், அந்த கவிதைப்பெட்டகம். அப்போதுதான் நினைத்தேன், இவர் ஒரு தனிப்பட்ட மனிதரல்ல. ஒரு மாபெரும் சக்தி. ஒரு இயக்கம். தேசியத் தலைவர். தமிழ்நாட்டு தலைவரே இல்லை. தேசியத் தலைவர். ரொம்ப பேருக்கு அவரைப்பற்றி தெரியாது

ஒருமுறை அவசரமாக டில்லிக்கு போகிறேன் என்றேன். தேவேகவுடா கூப்பிட்டிருக்கிறார் என்று.

தேவேகவுடா அருமையான மனிதர். நான் கரு நாடகத்திலே உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது ஒரு நாள் தேநீர் விருந்துக்கு அழைத் திருந்தார். அப்போது கீழே உட்கார்ந்திருந்தார். நீங்கள் தலைமை நீதிபதி. தலைமை நீதிபதிக்கு நான் தலைவணங்கவேண்டும் என்று சொன்னார். இதையேதான் கலைஞர் அவர்களும் சொன்னார்கள். அவருக்காக நான் கண்ணீர் விட்டேன் கதறினேன். அய்யா ஸ்டாலின் அவர்களை ராஜாஜி ஹாலில் பார்த்த உடனே என்னால் பொறுக்க முடியவில்லை. இரண்டு நிமிடம் பேசமுடியவில்லை. அவ்வளவு நெருக்கமாக பழகியிருந்தேன்.

1967 இலிருந்து அவரோடு இருந்தேன். இன்று நேற்றல்ல.

புதைக்கப்பட்டது தனி மனிதரல்ல!

அவர் புதைக்கப்பட்டடார் என்றால், அவர் தனி மனிதரல்ல. அவர் மாபெரும் தலைவர்.

இமயமலையே சாய்ந்ததுபோல் இருந்தது.

எனக்கு ஒரேயொரு அய்யம். இனிமேல் அவரைப்போன்றவர்கள் தோன்றுவார்களா என்பதுகூட தெரியவில்லை ஆனால், அவருடைய வழித்தோன்றல் ஸ்டாலின் இருக்கின்றார்.

அந்த நிம்மதிதான் எனக்கு. அந்த தெம்புதான் எனக்கு. என்னால் பொறுக்க முடியவில்லை. சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறேன் மன்னிக்க வேண்டும்.

ஏனென்றால், அவ்வளவு எங்களுடைய ஈடுபாடு. அவருடன் சில நேரங்களிலே கோபித்துக்கொண்டும் இருக்கிறேன். சிரித்து விளையாடிக்கொண்டிருந்தோம். எவ்வளவோ பேசுவோம். எத்தனையோ பேசுவோம். நாங்களெல்லாம் வக்கீலாக இருக்கிறபோது முதல்முதலாக உயர்நீதிமன்றத்துக்கு சென்றபோது, தந்தை பெரியார் ஒரு நாள் கேட்டார்கள், உயர்நீதி மன்றத்தில் எத்தனை நீதிபதி இருக்கிறீர்கள் என்று. 12 பேர் இருக்கிறோம் என்றோம். நம் ஆள் தமிழன் எவ்வளவுபேர்? ஒரேயொருவர் என்றோம். அப்படியா? 12பேரில் ஒரேயொருத்தர்தானா? ஆம் என்.சோமசுந்தரம் ஒருவர்தான் என்றோம்.

எம்.ஆர்.இராதா நாடகத்துக்கு

நீதிபதி போகலாமா?

என்.சோமசுந்தரம் நடிகவேள் எம்.ஆர்.இராதா டிராமாவுக்கு ஒற்றைவாடைத் தியேட்டருக்கு சென்றார்.  ஒரு நீதிபதி நாத்திகம் பேசுகின்ற நாடகத்துக்கு அய்க்கோர்ட் நீதிபதி போகலாமா? என்றார்கள். உடனே தந்தை பெரியாருக்கு கோபம் வந்துவிட்டது. ஏன்யா நீ எந்த இடத்துக்கெல்லாமோ போகிறாய், மடத்துக்கெல்லாம் போகிறாய், அதற்கு போகிறாய், இதற்கு போகிறாய், இங்கு போகக்கூடாதா? என்று விடுதலையில் எழுது வீரமணி என்று சொன்னார்.

நான் மீண்டும் சென்றபோது, தந்தை பெரியார் அவர்கள், வீரமணி, அய்யா எப்போது நீதிபதி ஆவார் என்றார். ஆவார் என்றார். அதேமாதிரி, அவர் சொன்னமாதிரி நான் நீதிபதி ஆகிவிட்டேன்.

ஆனால், ஒன்று சொல்ல விரும்புகிறேன். நானும், என்னுடைய தோழமை நீதிபதி மறைந்த அமரர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களும் இங்கே பெரியார் நினைவிடத்துக்கு வந்து வணங்கிவிட்டு அப்புறம்தான் போனோம். அதைப்பற்றி இரண்டு பாராட்டத்தக்க நியமனங்கள்' என்று விடுதலை எழுதியது.

உண்மையாகவே சொல்லுகிறேன். பெரியார் இல்லாவிடில், அண்ணா இல்லாவிடில், கலைஞர் இல்லா விடில் இப்போது இங்கு இருக்கிற அக்பர் அலியைத் தவிர எங்கள் எல்லாரையும் கலைஞர்தான் நியமித்தார் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்ளுகிறோம்.(கைதட்டல்)

நான் சொல்வதில் எந்த தப்பும் இல்லை. உண்மையைத் தான் பேசுகிறேன். நான் நீதிபதியாக இருந்து பொய் பேசக்கூடாது. 12 மணித்துளிகளுக்குள் பேசவேண்டும் என்கிற கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எங்களுக்கும் உண்டு.

வரதராஜன் அவர்களை நீதிபதியாக நியமித்தார்

இங்கே சொன்னதைப்போல், வரதராஜனை நீதிபதி யாக கலைஞர் நியமித்தார்களே அது மாபெரும் வெற்றி. யாருமே எதிர்பார்க்க முடியாதது. அதற்கு எத்தனை விமர்சனங்கள், எத்தனை கடுமையான சொற்கள், போயும், போயும் இவரை நியமித்தார்களே என்று. ஆனால், நேர்மைக்குப் பெயரானவர். அருமையான ஒரு நீதிபதி வரதராஜன். அவரும் நானும் சேர்ந்துதான் பெரியாருடைய தபால்தலையை வெளியிட்டோம் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ளுகின்றேன். (கைதட்டல்) இவ்வளவு பேரை வைத்துக்கொண்டு பேசுகிறோம்.  ஒரு மாபெரும் தலைவர், இன்றைய தலைவர், நாளைய முதல்வர் அவர். (கைதட்டல்) கலைஞரோடு நான் மிகமிக நெருங்கிப் பழகியிருக்கிறேன்.

அவருடைய அன்புக்கு உடையவன். என்னுடைய Singing Bird என்ற பாடும் குருவி ஆங்கிலக் கவிதை நூலை வெளியிட கலைஞர் வந்தார். கலைவாணர் அரங்கத்திலே நடந்தது. அப்போது எடுத்தவுடன் சொன்னார், அவர்தான் கலைஞர், பாடுகின்ற குருவியைப் பற்றி நண்பர் மோகன் எழுதியிருக்கின்றார். அவர் வீட்டுக்குருவி பாடுமோ, என்னவோ எனக்குத் தெரியாது. எங்கள் வீட்டுக்குருவியும் பாடாது, அவர் வீட்டுக் குருவியும் பாடாது. ஆனால், இங்கே குருவி பாடியிருப்பதாக எழுதியிருக்கிறார் என்றார்.

நான் சொன்னேன், நீங்கள் குயில், நான் குருவி. இந்த குருவி பாடியதுதான் இந்தப்புத்தகமே என்றேன்.

அப்போது என்னைப் பாராட்டினார். நீதிபதி நீதிபதி தான் என்று பாராட்டினார். அது இன்னும் என்னுடைய மனதிலே பசுமையாக இருக்கிறது. என்னுடைய வாழ்க்கைத்துணைவி இறந்தபொழுது, ஒரு அருமையான கடிதம் எழுதினார்கள். இதே நிலையில்தான் நான் பலகாலம் இருந்தேன். அந்த நிலையை நீங்கள் அனுபவிக்கின்றீர்கள். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று எழுதினார். அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு முறை நொண்டியாக இருக்க நேரிட்டது. நீதிபதிகள் நொண்டியாக இருந்தால் பரவாயில்லை, நீதி நோண்டியாக இருக்கக்கூடாது. இரண்டாவது, 20.8.2008 நன்றாக ஞாபகம் இருக்கிறது. கால் எப்படி இருக்கிறது என்றார், நான் கலைஞரைக்காட்டிலும் அறிவாளி என்று நினைத்துக்கொண்டு, முக்கால் நன்றாக இருக்கிறது என்றேன். ஏனய்யா பொய் சொல்லுகிறாய்? என்றார். மனிதனுக்கு எங்கே இருக்கிறது முக்கால்? அப்போதுதான் கலைஞர் எவ்வளவு பெரிய அறிவாளி என்று தெரிந்துகொண்டேன். உண்மையைச் சொல்லு கிறேன்.

பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் கலைஞர்!

கலைஞர் என்னிடம் அப்போது சொன்னார், இந்த மூன்று  என்பதைப்பற்றி உனக்குத் தெரியுமா? பாளையங்கோட்டை சிறையில் இருந்தேன். அப்போது ஒரு அணில் வந்தது. அதன்கால் சிறிது ஊனமாக இருந்தது. அதைப்பிடித்து, வளர்த்தேன், பழம் ஊட்டினேன், பால் ஊட்டினேன். இரண்டு நாள்களிலேயே சரியாகப்போனது. போகின்றபோது அதைத் தடவிக்கொடுத்தேன், மூன்று கோடுகள் போட்டேன். அது என்ன தெரியுமா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அணிலுக்கே இருக்கிறது என்றார். அப்படி சொல்லிவிட்டு அன்றைக்கு மிக மகிழ்ச்சியோடு இருந்தார்.

அன்றுதான் எனக்கு காலப்பேழையும், கவிதைச் சாவியும் என்ற அருமையான நூலைக் கொடுத்தார். அதிலே, அன்புநிறைந்த நீதியரசர் அவர்களுக்கு மிக்கப் பாசமுடன் மு.கருணாநிதி என்று எழுதினார்.

எதற்காக நான் சொல்லுகிறேன் என்றால், அவ்வளவு பாசம் எங்களிடத்திலே. எத்தனை வழக்குகள்? அத் தனையிலும் வெற்றி.  எத்தனையோ கமிஷன்கள் போட்டார். நான் மனமார சொல்லுகின்றேன்.

அவர் போட்ட கமிஷன்கள் எல்லாம் எனக்கு மிகமிக பிடித்திருந்தது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளிலே தமிழிலே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கமிஷன் அமைத்தார்.

அதில்தான் நான், முத்துக்குமரன், தமிழன்பன் போன்றவர்களெல்லாம் சேர்த்து கலைஞர் சொன்னார்.

இதையேதான் கருநாடக நீதிமன்றத்திலே சொன் னேன். கலைஞர் சொன்னார், செயலாக்க விரும்பினேன். உங்கள் ஒருவரால்தான் செய்ய முடியும் என்றார்.

படம் அல்ல, பாடம்!

இப்படி அருமையானவர் கலைஞர். இங்கே சொல்லுகின்றபோது படம் பாடமாகிவிட்டது. அதற்கு மேல் ஆசிரியரும் சொன்னார். அம்மையாரும் சொன்னார். படம் பாடமாகிவிட்டது. நான் சொல்லுகிறேன் எங்களுடைய வாழ்க்கையே கலைஞர்பற்றி கூறுவது தான். அவருடைய வாழ்க்கை மட்டுமல்ல, என்றைக்கும் எங்களுடைய வழிகாட்டியாகவும் இருப்பார் என்று நான் சொல்ல விரும்புகிறேன். அவ்வளவு பெருமைக்குரியவர்.

இறுதியாக ஒன்றே ஒன்று சொல்லுகிறேன். ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் சொன்னார்கள், இறவா வரம்பெற்ற என்றும் மிளிரும் அழகிய ரோஜாவே'' என்று சொன்னார்கள்.அப்படி எனக்கு தெரிந்த ஒரேயொரு தலைவர். இனிமேல் கலைஞ ரைப்போல் ஒருவர் இருப்பாரா என்று சொன்னால், முடியவே முடியாது.

ஆயிரம் ஆயிரம் சொல்லலாம்!

எத்தனைப் புத்தகங்கள்? அவரைப்பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஆயிரமாயிரம் சொல்லலாம். இருந்தாலும் காலத்தின் அருமை கருதி நான் நிறுத்திக்கொள்கிறேன். வணக்கம் உங்கள் அனை வருக்கும்!

இவ்வாறு நீதிபதி எஸ்.மோகன் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner