எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலைஞர் ஆட்சியில் அடுக்கடுக்கான நலத்திட்டங்கள் - என்னைக் கவர்ந்தது பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்!

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் புகழாரம்

சென்னை,செப்.6 கலைஞர் அவர்கள் ஆட்சியில் எத்தனை எத்தனையோ நலத் திட்டங்கள் செய்யப் பட்டன; அவற்றுள் என்னைக் கவர்ந்தது பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்கள், கலைஞர் முத்தமிழ் அறிஞர் அல்ல - முத்தமிழ் மூதறிஞர் என்று குறிப்பிட்டார்.

திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 31.8.2018 அன்று மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சில பேரை வரலாறு படைக்கிறது. ஆனால் மிகச் சிலர்தான் வரலாற்றைப் படைக்கிறார்கள்.

அத்தகைய மாமனிதர்களுள் விரலுக்கு முன்னிற்கும் முதல்வராக வாழ்ந்து வரலாறு படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

கருணாநிதி என்ற பெயர் அற்புதத் திருப்பெயர். எல்லையற்ற கருணையைச் செல்வமாக உடையவர் என்று பெயர். அதனால் அந்தப் பெயர் அவருக்கு முற்றிலும் பொருந்தும்.

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்களுக்கும் தமிழே மூச்சென்று வாழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர் களுக்கும் அணுக்கத் தொண்டராக வாழ்ந்து வரலாறு படைத்தவர் முத்தமிழ் அறிஞர் அவர்கள். பெரியாரது சமூகச் சிந்தனைகளையும் பேரறிஞர் அண்ணாவின் ஆறாத தமிழ்ப் பற்றையும் குழைத்துக் கலைஞர் கொடுத்த அமிழ்தைத் தமிழகம் 70 ஆண்டுகள் பரு கியது.

கலைஞர் அரசியல் களத்தில் இறங்கியபோது காங் கிரசு ஆட்சி வேரூன்றியிருந்த காலம். நாட்டு விடுதலைக் களத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்த தேசியக் கட்சியை யாரும் அசைத்துவிட முடியாது என்ற நம் பிக்கை ஆழமாகப் பதிந்திருந்த காலம்.

அப்போது ஒரு இளைஞராகக் களம் இறங்குகிறார் கலைஞர். நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியைக் குவிக்கிறார். அவர் தேர்தலில் தோற்றதாக வரலாறே கிடையாது.

ஒன்றல்ல இரண்டல்ல அய்ந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி பெற்றவர். பதவிகளை அவர் என்றும் தேடிப்போனதில்லை. பதவிகள்தான் என்றும் அவரைத் தேடிப் போய்ப் புகழ்பெற்றன.

கலைஞர் நிறைவேற்றிய திட்டங்கள்

அவ்வாறு அவர் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்கள் மக்கள் நலனையே முதன்மைப் படுத்தியவை. றீ பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவுத் திட்டம்.

* சமச்சீர்க் கல்வி.

* விவசாயத்திற்கு இலவச மின்சாரம்

* அவரது ஆட்சிக் காலத்தில்தான் தமிழத்தில் பல பாலங்கள் போடப்பட்டன.

* உழவர் சந்தை

* எல்லா இனத்தவரும் கூடிவாழும் சமத்துவபுரம்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் பாதியிலேயே நின்று போவதற்குக் காரணம் போதிய உணவில்லாத ஏழ்மை என்று கண்ட கலைஞர் குழந்தைகளுக்கு உணவு கொடுத்தால் மட்டும் போதாது அது சத்துணவாக இருக்கவேண்டும் என்று கருதிச் சத்துணவு கொடுக்க உத்தரவிட்டார்கள்.

விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று கண்டறிந்த கலைஞர் அவர்கள் சில நேரங்களில் மின் சாரக் கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத வறுமை நிலையில் உள்ளமையைக் கண்டு அவர்களுக்கு இலவச மாக மின்சாரம் வழங்கினார்.

நான் பலமுறை என்னுடைய காரில் பல நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்கிறேன். அப்போதெல்லாம் பெரிய பெரிய பாலங்களைக் கடக்கும்போது கலைஞரால் உருவானவை என்று நன்றியோடு நினைப்பதுண்டு.

’என்னைக் கவர்ந்த சமத்துவபுரங்கள்!'

என்னை மிகவும் கவர்ந்தவை ஊருக்கு ஊர் அவர் தோற்றுவித்த பெரியார் சமத்துவபுரங்கள். இந்த நாடு, பிரிவுபட்டுக் கிடப்பதற்கு ஜாதி மதப் பிரிவினைகள்தான் காரணம். இதை தம்மால் இயன்ற அளவு / குறைப்பதற்காக கலைஞர் அனைத்து இன மக்களும் ஒன்றுகூடி வாழ வகை செய்யும் வகையில் ஊருக்கு ஊர் சமத்துவ புரங்களை அமைத்தார். அவற்றிற்கு பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பெயரைச் சூட்டினார்.

அதேபோல விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நடுவே வியாபாரிகளும், தரகர்களும் கொள்ளை லாபம் பெற்று வந்தனர். விவசாயிகளுக்கு அவர்கள் விளை விக்கும் பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் போவதுடன் மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதை ஆராய்ந்த கலைஞர் உழவர் சந்தைகளையும் ஊர்தோறும் நிறுவினார். உழவர் தமது பொருள்களைத் தாமே விற்றுப் பயனடையவும் மக்கள் நேரில் காய் கனிகளை குறைந்த விலையில் வாங்கவும் இந்த உழவர் சந்தைகள் களங்களாயின. இவற்றிற் கிடையே தமது கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டார் கலைஞர்.

அவரது அரசியல் வாழ்க்கையில் இன்றைய தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

தோல்வியை ஒரு தலைவன் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சிலமுறை அவரது கட்சி தோல்வி கண்டபோது இது மக்கள் மன்றத்தின் தீர்ப்பு இதைக் கொஞ்சமும் மனங்கோணாமல் ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் இருந்த நிலை. இது எனக்கும் கூடப் படமாக அமைந்தது..

எனக்கும் - அவருக்கும் ஏற்பட்ட தொடர்பு!

கொஞ்சமும் அறிமுகமே இல்லாத என்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக 1989 இல் நியமித்தார்கள் கலைஞர் அவர்கள். தமிழகம், கேரளம், ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் விளங்கி நான் தமிழகத் திற்குப் பெருமை சேர்ப்பதற்கு அடித்தளமாக அமைந்தது இந்த முதல் நியமனம்தான். அதற்காக நான் என்றைக்கும் கலைஞர் அவர்களை நினைத்து வணங்குகிறேன்.

அதன்பிறகு என்னுடைய குடும்ப விழாக்களில் அவரும், அவரது குடும்பவிழாக்களில் நானும் கலந்து கொண்டிருக்கிறோம்.

அரசியல் தலைவர்களில் நான் படித்தவரை அமெ ரிக்க ஜனாதிபதியாக வாழ்ந்த ஆபிரகாம் லிங்கன்தான் மக்களால் உயிரினும் மேலாக நேசிக்கப்பட்டவர். ஏனென்றால் அவர்தான் மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் ஆட்சி என்று நிச்சயித்து அதுபோலவே ஆட்சி நடத்தி வாழ்ந்தவர்.

Democracy of the people, by the people and for the people. அப்படி வாழ்ந்தமையால்தான் அந்த ஆபிரகாம் லிங்கன் மறைந்தபோதும் மக்கள் வெள்ளம் கடல்போலக் கூடியது. உலகமே அழுதது. அதேபோன்று நமது கலைஞர் மறைந்தபோதும் மக்கள் வெள்ளம் கண்ணீர்க் கடலெனக் கடற்கரை நோக்கிச்சென்றது.

முத்தமிழ் மூதறிஞர்

வாழ்க்கை முழுவதும் ஒரு நீதிபதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு கலைஞரை வணங்கச் செய்வது, இறந்த பிறகும் நீதிமன்ற வழக்கில் அவர் வென்றதும், அவர் விரும்பியபடியே தன் தலைவன் அண்ணாவின் அருகில் துயில் கொள்வதும் தான். ஆகக் கலைஞர் பன்முக ஆற்றல் கொண்ட தமிழ்பெருமகன் என்பது தெளிவாகின்றது. ஆகவே, அவரை முத்தமிழ் அறிஞர் என்று சொல்வதோடு முத்தமிழ் மூதறிஞர் என்று வணங்கி மகிழலாம். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அன்னாருக்கு மரியாதை செலுத்துவதுடன் நன்றி கூர்கிறேன். அவரை நினைவுக்கூர்ந்து மீண்டும் எனது பணியைப் பண்படுத்திக்கொள்ள வாய்ப்பளித்த எனது இனிய நண்பர் கி.வீரமணி அவர்களுக்கு எனது நன்றி.

வாழ்க கலைஞர் புகழ்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner