எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்ப்பனர் அல்லாத ஒருவர் தமிழ்நாட்டில் அர்ச்சகராக்கப்பட்டுள்ளார்- பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் செய்யவேண்டும்

திராவிடர் கழகம் எடுக்கும் முடிவுக்கு

எங்கள் கட்சி துணை நிற்கும்

சென்னை, செப்.8- தந்தை பெரியார் அறிவித்த போராட்டத்தின் ஒரு கட்டமாக முதன்முதலாகப் பார்ப்பனர் அல்லாத ஒரு தோழர் கோவில் அர்ச்சகராக்கப்பட்டுள்ளார். பயிற்சி பெற்றவர்கள் இன்னும் 200-க்கும் மேல் இருக்கிறார்கள். அவர்களும் பணி நியமனம் செய்யப்படவேண்டும் - அதற்காக திராவிடர் கழகம் எடுக்கும் முயற்சிகளில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும்  என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள்.

21..8.2018 அன்று சென்னை பெரியார் திடலில்,  ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை  முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்தோழர் முத்தரசன் அவர்கள் உரையாற்றினார்:

அவரது உரை வருமாறு:

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை  முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன? என்கிற வினாவோடு இங்கே மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கின்ற திராவிடர் கழகத்தினுடைய தலைவர் பெருமதிப்பிற்குரிய அய்யா ஆசிரியர் அவர்களே, வரவேற்புரையாற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

முன்னதாக இந்தப் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வாதாடியது - வெற்றி கிட்டியது - இதிலுள்ள பிரச் சினைகளையெல்லாம் மிக எளிமையான முறையிலும், நகைச்சுவையோடும் சிறப்பாக உரையாற்றிய மரியாதைக்குரிய அய்யா சக்திவேல் முருகனார் அவர்களே,

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு முன்வரிசையில் அமர்ந்து, நாங்கள் சொல்வதெல்லாம் சரியாக சொல்கிறோமோ என்று கண்காணித்துக் கொண்டிருக்கின்ற நம்முடைய இலக்கியச் செல்வர் பெருமரியாதைக்குரிய அய்யா குமரிஅனந்தன் அவர்களே,

திராவிடர் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து ஒரு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நிர் வாகிகளே, தோழர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

எனக்கு இந்த நிகழ்ச்சி, திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு நிகழ்ச்சியாகும். ஏனென்றால், திருநெல்வேலி அல்வாதான் சிறப்பான அல்வா என்று சொல்வதினால், அதைச் சொன்னேன்.

இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பான ஒரு நிகழ்ச்சியாகும். இந்நிகழ்வில் நம்முடைய கவிஞர் வரவேற்புரை நிகழ்த்துகின்றபொழுது, நிகழ்ச்சிகளைப்பற்றியெல்லாம் கூறுகிறபொழுது,

ஆசிரியரோடு ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்!

ஆடிட்டர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை சொன்னார். சோ பத்திரிகை அது முடிந்து போய்விட்டது. இப்பொழுது வந்து கொண்டிருப்பது ஆடிட்டர் பத்திரிகை. அதைச் சொல்லு கிறபொழுது, கிண்டல், கேலி, நக்கல் என்கிற முறையில் சொன்னார்.

ஆசிரியருக்கு உறுதுணையாக இருந்த ஆதரவாக இருந்த ஒரே ஒருவர் இருந்தார், அவரும் போய்விட்டார் என்கிற முறை யில் அந்தச் செய்தி இருப்பதாக இங்கே கவிஞர் சொன்னார்கள்.

ஆடிட்டருக்கு இருக்கிற அறிவு அவ்வளவுதான். ஆசிரியரோடு ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்; என்றென்றைக்கும் இருப்பார்கள். நாங்களும் இருப்போம். ஏனென்றால், அவர் மேற்கொண்டிருக்கின்ற பணி என்பது, வரப்போகிற சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை சீட் என்கிற போராட்டமல்ல. அல்லது வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலில், எத்தனை நாடாளுமன்ற சீட் என்கிற போராட்டமல்ல. அல்லது எப்படியாவது, எவன் தயவிலாவது அமைச்சராகி விடவேண்டும்; மத்திய அமைச்சராகி விடும் என்கிற நோக்கத்தில் அவர் செயல்படவில்லை.

தந்தை பெரியார் வழி நின்று தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்

என்னைக் காட்டிலும் மிகவும் மூத்தவர்; என் தந்தையின் வயதை ஒத்திருக்கிறார். அவர் உடல்நலம் எப்படி என்பதும் எனக்குத் தெரியும். அவர் வயதைப்பற்றியோ, உடல்நலம் குறித்தோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்த நேரத்திலும் இந்த சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை தந்தை பெரியார் வழி நின்று தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார். ஆகவே, அவர் மேற்கொண்டிருக்கின்ற பணி என்பது ஒரு மகத்தான பணியாகும், அது சாதாரண பணியல்ல.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்று பலரும் பேசிக்கொண்டிருந்தாலும், எழுதிக் கொண்டிருந்தாலும் அதுகுறித்து ஒரு தொடர்ச்சியான நடவடிக்கை - இந்த முதல் வெற்றி என்பதை மகிழ்ச்சியாகக் கொண்டாடவேண்டும், அதோடு முடிந்து போய் விடவில்லை. அடுத்தது என்ன? என்கிற கேள்வியை எழுப்பி, அதற்கு ஒரு விடையைக் காணுகிற இடமாக பெரியார் திடல் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கிறது. அந்த முயற்சியை ஆசிரியர் அவர்கள்தான் எடுக்கின்றார்கள். கவிஞர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல இந்நிகழ்ச்சி 7 ஆம் தேதி நடைபெற்று இருக்கவேண்டும். கலைஞர் அவர்களுடைய உடல்நிலை மிக மோசமாக இருந்த நிலையில், கவிஞர் அவர்கள் தொலைப்பேசியில் என்னை தொடர்பு கொண்டு, இந்தத் தேதியில் நாம் இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டாம், பிறகு நடத்தலாம் என்று சொன்னார்கள். நானும் சரியென்று சொன்னேன்.

ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள் என்று நான் கவிஞரிடம் சொன்னேன்

பிறகு 20 ஆம் தேதி நடத்தலாமா? என்று என்னிடம் கேட்டார்கள்; சரியென்று நானும் ஒப்புக்கொண்டு விட்டேன்.

பிறகு பார்த்தால், தவிர்க்க முடியாத - எங்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் தேதியை மாற்றிய காரணத்தினால், மிகுந்த தயக்கத்தோடு கவிஞரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, இந்த நிகழ்ச்சியின் தேதியை மாற்றி வைக்க முடியுமா? ஒருவேளை முடியவில்லை என்றால், பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். பார்த்துக் கொள்ளலாம் என்றால், அந்த நிகழ்ச்சிக்குப் போகாமல், இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிடலாம் என்கிற அர்த்தத்தில், அதை சொல்லாமல், ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள் என்று நான் கவிஞரிடம் சொன்னேன்.

சரி, நான் கேட்கிறேன் என்று சொல்லிய கவிஞர், மறுநாள் நல்லவேளையாக, இந்தத் தேதி எனக்காக மாற்றப்பட்டு இருக்கிறது.

கவிஞர் அவர்கள் நினைவுபடுத்தி ஆதாரத்தையும் கொடுத்திருக்கிறார்கள்

இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக் கொண் டிருக்கின்றோம். அதோடு கவிஞர் 1971 ஆம் ஆண்டு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை எனக்கு நினைவுபடுத்தியதற்கு நன்றி.

நான் நினைவு வைத்து சொல்லவேண்டிய செய்தி அது. அதற்கு மாறாக, கவிஞர் அவர்கள் நினைவுபடுத்தி, வெறும் வாய்ச் செய்தியாக மட்டுமல்லாமல், ஆதாரத்தையும் கொடுத் திருக்கிறார்கள்.

ஆகவே, இந்தப் பிரச்சினையில், திராவிடர் கழகமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்படுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2015 ஆம் ஆண்டிலேயே தீர்ப்பு பெறப்பட்டு இருக்கிறது - அதற்காக என்னென்ன முயற்சிகளையெல்லாம் செய்தார்கள் என்பதைப்பற்றியெல்லாம் இங்கே விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் அய்யா சத்தியவேல் முருகனார் அவர்கள்.

நல்ல முயற்சி. தனித்து நின்று போராடியமைக்கு நம்முடைய அனைவரின் சார்பிலும் நம்முடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆக, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதில், நீதிமன்றம் தடையாக இல்லை. நபர்கள்தான் தடையாக இருக்கிறார்கள். மனிதர்கள்தான் தடையாக இருக்கிறார்களே தவிர, நீதிமன்றம் இதற்குத் தடையாக இல்லை.

அதேபோல, ஆகம விதி என்று சொல்கிறார்களே, அதனுடைய ரகசியத்தையும் இங்கே சொன்னார்கள். நம்முடைய ஆசிரியர் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசியதோ அல்லது விடுதலையில் எழுதியதோ என்று எனக்கு சரியாக நினைவில்லை. அந்தச் செய்தியை மட்டும் சொல்கிறேன்.

மக்களிடம் கொள்கையை சொல்லாதவர்கள்தான் இன்றைக்கு மத்தியில் ஆட்சி இருக்கிறார்கள்

எல்லா அரசியல் கட்சிகளும், தங்களுடைய கொள்கைகளை பகிரங்கமாக மக்களிடம் சொல்லி, இந்தக் கொள்கை வெற்றி பெற எங்களுக்கு ஆதரவு தாருங்கள் அல்லது இயக்கத்தில் சேருங்கள் என்று கேட்கிறார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் அதைத்தான் செய்கின்றன. ஆனால், ஒரே ஒரு அரசியல் கட்சி தனது சொந்தக் கொள்கையை இதுவரை வெளிப்படையாக தெரிவித்ததில்லை. அந்தக் கட்சிதான் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. கொள்கையை வெளிப்படையாகச் சொன்னவர்கள் ஆட்சியில் இல்லை.

மனுதர்மக் கொள்கையை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்

கொள்கையை மூடி மறைத்து, மக்களிடம் கொள்கையை சொல்லாதவர்கள்தான் இன்றைக்கு மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். தங்களுடைய சொந்த கொள்கையை சொல்வது கிடையாது. ஆகம விதிகள் மாதிரிதான். ஆகம விதியை முழுவதுமாக சொன்னால், ஏற்றுக்கொள்வார்களா? என்றால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்.சினுடைய சொந்தக் கொள்கை - மனுதர்மக் கொள்கையை வெளிப்படையாக, பகிரங் கமாக சொன்னால், அதனை நிராகரித்துவிடுவார்கள் என்பதினால், அதனை பகிரங்கமாக சொல்லமாட்டார்கள். ஆனால், அதுதான் அதிகாரத்தில் இருக்கிறது.

அர்ச்சகருக்கு பணி ஓய்வு உண்டா?

எண்ணிக்கையில் குறைவானவர்கள், ஆனால், அவர்கள் நினைத்ததை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தபொழுது, இட ஒதுக்கீடு வேண்டும், அந்தக் கோரிக்கையை நாம் வலியுறுத்தவேண்டும் என்று நான் சொன்னேன். ஏனென்று சொன்னால், கோவிலில் இருக்கின்ற அர்ச்சகர், அவர் குருக்களா? அய்யங்காரா? அய்யரா? என்பதல்ல - அர்ச்சகர். அவர் எந்த வயதில் அந்தப் பணியில் சேரவேண்டும் என்றோ அல்லது எந்த வயதில் அந்தப் பணியிலிருந்து விடுபடவேண்டும் என்று வயது வரம்பு இருக்கிறதா?

மாநில அரசு பணி என்றால், 58 வயது வரையிலும், மத்திய அரசு என்றால், 60 வயது வரை என்று வயது வரம்பு இருக்கிறது. ஆனால், அர்ச்சகர் பணியில், வயது வரம்பு என்பது கிடையாது. அவரால் மணியைப் பிடித்து ஆட்ட முடியாது என்ற நிலையில், அவரே அந்தப் பணியிலிருந்து சென்றால்தான் உண்டு. அவர் அந்தப் பணியில் இருக்கும்பொழுதே அவருடைய மகன் உதவியாளராக வந்துவிடுவார்.

அர்ச்சகருடைய மகன், தட்டு எடுத்துக் கொடுக்க, தாம்பூலத்தை எடுத்துக்கொடுக்கின்ற உதவிகளை செய்துகொண்டிருப்பார். அந்த அர்ச்சகருக்கு வயதானவுடன், அந்தப் பொறுப்புக்கு அவருடைய மகன் இயல்பாகவே வந்துவிடுவார்.

மக்களுக்கும் சின்ன அய்யா வந்து இருக்கிறார் என்று சொல்லி ஏற்றுக்கொள்வார்கள். பெரிய்யாவுக்கு முடியவில்லை என்பதினால், சின்ன அய்யா வந்துட்டார் என்று சொல்வார்கள். நாம் சொல்வது வேறு? அவர்கள் சொல்வது வேறு? இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது வேறு விஷயம்

எல்லாவற்றிற்கும் இட ஒதுக்கீடு என்று சொல்கிறபொழுது, அர்ச்சகர் பணியும் ஒரு வேலைதானே!

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது வேறு விஷயம். அதனுள் செல்லவேண்டிய அவசியமில்லை.

சத்தியவேல் முருகனார் அவர்கள் பெரிய கடவுள் பக்தர்; இங்கே வந்திருக்கிறார். இங்கே இருக்கிற இரண்டு, மூன்று பேரை பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டு பெரியார் திடலுக்கு வருகிறார்களே என்று.

கடவுள் இருக்கா - இல்லையா என்பது வேறு விஷயம். பூஜை செய்வது, அர்ச்சனை செய்வது என்பது அது ஒரு பணி. அந்தப் பணியை, நீங்கள் சொல்கின்ற ஆகம விதிகளைக் கற்றுக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் செய்யலாம் அல்லவா!

இந்த ஜாதியினர்தான் அந்தப் பணியை செய்யவேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? அதில் எந்த நியாயமும் கிடையாது.

நீதிமன்றம் தடையாக இல்லை. எப்படியோ ஒருவருக்கு அந்தப் பணி கிடைத்துவிட்டது.

அண்மையில் கேரள மாநிலத்தில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக சட்ட ரீதியான ஒரு ஏற்பாட்டினை செய்திருக்கிறார்கள். அது வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது.

இதற்காக தமிழ்நாட்டில்தான் முன்பே முயற்சிகளை தந்தை பெரியார் அவர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், தோற்றதில்லை. ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால்,

சமூகநீதிக்கான போராட்டத்தில் ஒருபோதும் நாம் தோற்றது கிடையாது

சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில், சமூகநீதிக்கான போராட்டத்தில் ஒருபோதும் நாம் தோற்றது கிடையாது. காலதாமதம் ஆகலாம்; சூழல் காரணமாக, காலதாமதம் ஆகலாம். இப்பொழுது இங்கே அய்யா சொன்னார்கள், தற்போது இருக்கின்ற அரசிடம் சென்று நாம் முறையிடலாம்  என்று சொன்னார்கள்.

ஒரு அரசிடம் கோரிக்கையை முறையிடுவது என்பது தவறில்லை. அதை செவிமடுத்து கேட்கின்ற அல்லது அதைப் புரிந்துகொள்கிற அல்லது இந்தப் பிரச்சினையில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் நாம் சென்று பேசலாம்.

ஆட்சியில் சம்பந்தமில்லாதவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தந்தை பெரியார் படம் தேவை. அதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

பெரியார் படத்தை நீங்கள் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்

நான் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்பொழுது சொன்னேன், பெரியார் படத்தை நீங்கள் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். அந்தப் படத்தைப் போடுவதற்குரிய தார்மீக தகுதியோ, உரிமையோ உங்களுக்குக் கிடையாது என்று சொன்னேன். பெரியாருடைய படத்தை மட்டும்தான் உங்களால் போட்டுக்கொள்ள முடியுமே தவிர, அவருடைய கொள்கைகள் குறித்து கவலைப்படக்கூடியவர்கள் இன்றைக்கு ஆட்சி நடத்துபவர்களிடம் இல்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் வேறொன்றில் இருக்கிறது. அதை மிகச் சரியாக செய்துகொண்டிருக்கிறார்கள். எத்தனை நாள்கள் முடியுமோ அத்தனை நாள்களுக்குப்பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆகவே, இதனை வலியுறுத்தி அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?

சட்ட ரீதியாக, சட்ட திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பதற்காக அல்லது இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக - ஏற்கெனவே ஆகம விதிப்படி படித்து, கற்று தேர்ச்சி பெற்று இருக்கிறவர்களை உடனடியாக அந்தப் பணிகளில் அமர்த்தவேண்டும் என்பதற்காக, அதற்காக நன்கு யோசித்து, ஆசிரியர் அவர்கள் ஒரு போராட்டத்தை அறிவிக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

தந்தை பெரியார் அறிவித்த போராட்டம் ஒன்று மீதி இருக்கிறது!

அந்தப் போராட்டம் எந்த வடிவத்தில் இருந்தாலும் சரி. ஏற்கெனவே தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த போராட்டம் ஒன்று மீதி இருக்கிறது.

மன்னார்குடி இராஜகோபாலசாமி ஆலயப் பிரவேசப் போராட்டம் இருக்கிறது. இந்தப் போராட்டம் அய்யா அவர்களால் அறிவித்த போராட்டம் இன்னும் நடைபெறவில்லை.

அது ஒரு பெரிய கோவில். அங்கே இருந்த வைர நகைகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. அது வேறு விஷயம். ஆனால், அந்த சாமி அதைக் கேட்கவில்லை.

ஆசிரியர்தான் மிகவும் பொருத்தமானவர்

அந்தப் போராட்டம் எந்த வடிவம் என்பதை முடிவு செய்யவேண்டும். ஏனென்றால், இந்தக் கூட்டத்தில் அடுத்தது என்ன? என்கிற கேள்விக்கு நாம் விடை காணவேண்டும். அந்த விடை சொல்கின்ற பொறுப்பு, உரிமை, கடமை அனைத்தையும் நான் ஆசிரியரிடம் ஒப்படைத்து விடுகிறேன். ஏனென்றால், அதற்கு ஆசிரியர்தான் மிகவும் பொருத்தமானவர். நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை. எதார்த்தமான உண்மைகளைத்தான் சொல்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உங்களோடு தோளோடு தோள் கொடுத்து நிற்கும்!

அவ்வாறு நீங்கள் முடிவு எடுக்கும்பொழுது, நீங்கள் எந்த வடிவத்தில் எந்த வகையில் போராட்டத்தை அறிவிக்கிறீர்களோ, அந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உங்களோடு தோளோடு தோள் கொடுத்து நிற்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும்  கிடையாது.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் நாம் தீர்வு காணாமல், சமூக மாற்றத்தை நோக்கி நாம் வேகமாக முன்னேறிவிட முடியாது. பல பிரச்சினைகள் இருக்கிறது நமக்கு. அதில் இதை ஒரு முக்கியமான பிரச்சினையாகக் கருதி, யோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நடவடிக்கை எடுப்பதற்கு ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்று நான் இந்த சந்தர்ப்பத்தில், இந்திய கம்யூனிஸட் கட்சியின் சார்பில் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இன்னும் இதற்கு யார் யாரெல்லாம் ஒத்து வருவார்களோ, அவர்கள் எல்லோரையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். தேர்தல் வேறு; இது வேறு. இந்தக் காரியத்தைச் செய்வதன்மூலமாக தேர்தலில் வாக்குக் கிடைக்காது என்றால், அந்த வாக்குகள் கிடைக்காமல் போகட்டும்.

கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல்களில் போட்டு போடுகின்ற கட்சி. சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி நாங்கள் போட்டி போடுவோம். தோல்வியடைவோம்; டெபாசிட்டும் இழப்போம்; சில நேரங்களில் வெற்றியும் பெறுவோம். அது மாறி மாறி நடைபெறுகின்ற விஷயம்.

ஆனால், இந்தப் பிரச்சினையை எடுத்தால், தேர்தலில் தோற்றுப் போவோம் - வெற்றி கிடைக்காது என்றால், பரவாயில்லை.

ஆகவே, இதற்குரிய காலத்தில் நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர் குடியரசுத் தலைவராக

வர முடியும்; அர்ச்சகராக முடியாதா?

ஒரு தாழ்த்தப்பட்டவர் அர்ச்சகராக வர முடியாது; ஆனால், ஒரு தாழ்த்தப்பட்டவர் நம் நாட்டில் குடியரசுத் தலைவராக வர முடியும். அதை மிகப் பெருமையாக சொல்வார்கள். ஒரு நாட்டினுடைய முதல் குடிமகன் என்று குடியரசுத் தலைவர் போற்றப்படுவார். அவருக்கு பெரிய பெரிய மாளிகையெல்லாம் கொடுப்பார்கள். உயரிய சம்பளம் கொடுப்பார்கள்; உரிய மரியாதையைக் கொடுப்பார்கள். முப்படைக்கும் தளபதி என்பார்கள்; இன்னும் என்னென்னவோ சிறப்பை சொல்வார்கள்.

இந்திய நாட்டின் அந்த முதல் குடிமகன் கோவிலுக்குள் போக முடியாது; அப்படிச் சென்றால், தண்ணீர் ஊற்றி கழுவுவார்கள்.

குடியரசுத் தலைவரையே

கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை!

இப்பொழுது குடியரசுத் தலைவராக இருக்கின்றவரை கோவிலில் நுழைய அனுமதிக்கவில்லையே! வாசலிலேயே நின்று பார்த்துவிட்டுப் போ என்றார்களே! கோவிலுக்குள் அனுமதிக்கத் தயாராக இல்லை என்றார்கள். இதுதான் நம்முடைய தேசமாகும்!

பெரும்பான்மைபற்றியும், சிறுபான்மைபற்றியும் பேசுவார்கள். ஜனநாயகத்தில், பெரும்பான்மையினர் முடிவுக்கு சிறுபான்மையினர் கட்டுப்படவேண்டும். இது நல்ல ஜனநாயகம்தான். 33 சதவிகிதம் ஓட்டு வாங்கினாலும், பெரும்பான்மை மக்கள் வாக்களிக்கவில்லை என்று சொன்னாலும்கூட, இப்பொழுது இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் முறைப்படி, அந்த எண்ணிக்கையின்படி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஆகவே, பெரும்பான்மை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.

அய்யர் பெரும்பான்மையா?

சூத்திரன் பெரும்பான்மையா?

அப்படியென்றால், பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படவேண்டும் என்றால், அதுதான் ஜனநாயகம் என்றால், இந்திய நாட்டில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.  இந்துவா? முஸ்லிமா? கிறித்துவர்களா? இந்து மதத்தையே எடுத்துக்கொள்வோம். அதில் பெரும்பான்மையாக யார் இருக்கிறார்கள்? அய்யர் பெரும்பான்மையா? சூத்திரன் பெரும்பான்மையா?

யாருக்கு யார் கட்டுப்படவேண்டும்; ஆனால், யாருக்கு யார் கட்டுப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், நடைமுறையில் - காலங்காலமாக, இன்றைக்கு நேற்றல்ல, காலங்காலமாக, பல ஆயிரம் ஆண்டுகாலமாக சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையாக உள்ள மக்கள் கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

‘கீதையின் மறுபக்கம்’ முன்னுரையில்...

ஆகவே, இந்த பெரும்பான்மையாக இருக்கின்ற மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும். அதனால்தான், ‘கீதையின் மறுபக்க’த்தில், ஆசிரியர் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் குறிப்பிடுகின்றபொழுது, நாம் விடுதலை பெற்றுவிட்டது உண்மைதான்; ஆனால், நம்முடைய மூளை இன்னும் விடுதலை பெறவில்லை என்று அதில் எழுதியிருப்பார்கள். அதுதானே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார் தந்தை பெரியார்

ஆகவே, அந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்கிற முறையில், தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்.

மக்களிடம் இருக்கின்ற மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள், ஜாதியின்மீது, மதத்தின்மீது இருக்கின்ற பற்று எல்லாம் ஒழியவேண்டும் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் அவர்கள் போராடினார்.

அதே முறையில், அவருடைய மாணவராக இருந்து, அய்யா ஆசிரியர் அவர்கள் அந்தப் பணியை மேற்கொண்டு இருக்கிறார். சிறுபான்மையாக இருப்பவர்கள், தங்களுடைய சூழ்ச்சியால், சகல விதத்திலும் அடக்கி ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிகிறது. தெரிந்தாலும்கூட அதனை தலைவிதி, கடவுள் விட்ட வழி என்று ஏதேதோ சொல்லி அதனை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

சிறுபான்மையாக இருப்பவர்கள், தங்களுடைய சூழ்ச்சிகளால், தங்களுடைய அதிகாரத்தை பெரும்பான்மையினர்மீது தொடர்ந்து செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சின்னக்குத்தூசி யார் என்பது எல்லோருக்கும் தெரியும்

நம்முடைய சின்னக்குத்தூசி விருது வழங்குகின்ற விழாவில், ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டுவிட்டு, வேறு பணியின் காரணமாக அவசரமாக செல்லவேண்டிய நிலைமை இருந்தது.

அது ஒரு நல்ல நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. சின்னக்குத்தூசி யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அது ஒன்றும் ரகசியம் இல்லை. அவர் யார்? அவர் எந்தக் குலம்? என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அவர் அந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும், அந்தச் சூழ்ச்சிகளை அவர் மேற்கொள்ளவில்லை. மாறாக, அதற்கு நேர்மாறாகவும், எதிராகவும் இருந்தார், செயல்பட்டார்.

என் அய்ம்புலன்கள் எதை ஏற்றுக்கொள்கிறதோ, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்

பார்ப்பன சூழ்ச்சி என்று சொன்னால், சிலர் கோபப்படலாம். ஒரு உதாரணத்திற்காக இதை சொல்கிறேன். இங்கே சில பக்தர்களும் இருக்கிறீர்கள். மேடையில் இருக்கின்ற அய்யாவும் பக்தர்தான். நான் பக்தன் கிடையாது. கடவுள்மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. எனது உடலில் உள்ள அய்ம்புலன்கள் எதை ஏற்றுக்கொள்கிறதோ, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

என் அய்ம்புலன்களால் எதை உணர முடிகிறதோ, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். என் அய்ம்புலன்களால் உணர முடியாத எதையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அது எதுவாக இருந்தாலும் சரி.

கோவிலில் தேங்காயின் எந்தப் பகுதியை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள்

பக்தர்கள் எல்லாம் கோவிலுக்குப் போகிறார்கள் - அர்ச்சனை தட்டு கொண்டு போகிறீர்கள். தேங்காய், பூ, வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி எல்லாம் கொண்டுபோய் அர்ச்சனைக்காகக் கொடுக்கிறீர்கள். அங்கே தேங்காய் உடைக்கப்பட்டு, ஒரு மூடி தேங்காயை அய்யர் எடுத்துக்கொண்டு, இன்னொரு தேங்காய் மூடியைக் கொண்டு வந்து பக்தனிடம் மிகவும் மரியாதைதோடு பூ வைத்துக் கொடுக்கிறார்.

அவர் எந்த மூடியைக் கொடுக்கிறார்? பக்தர்கள் யாராவது சொல்லுங்கள் பார்ப்போம்.

தேங்காயை உடைத்தால் இரண்டு மூடிதான். அதில் எந்த மூடியைக் கொடுத்தால் என்ன? தேங்காயில் உள்ள கண்கள் இருக்கிற பகுதிதான் கொடுக்கப்படும். அடிப்பகுதியை கொடுக்கமாட்டார்கள். அப்படி கொடுத்தால், அது அவமரியாதை என்று அவர்களே சொல்கிறார்கள்.

தேங்காய்க் கண்கள் இருக்கிற மூடியைக் கொடுப்பதுதான் மரியாதை என்கிற நம்பிக்கையை உருவாக்கி விட்டார்கள். எங்கள் பகுதியில் உள்ள கோவிலில், நான் சிறிய வயதாக இருக்கும்பொழுது, அய்யர் தவறுவதலாக அடி மூடியைக் கொடுத்துவிட்டார்.

தேங்காயை வாங்கியவோ செல்வாக்கு மிக்கவர். அவரோ, என்னை அய்யர் அவமரியாதை செய்துவிட்டார் என்று கோபப்பட்டார்.

அடிமூடியைக் கொடுத்தால் அவமரியாதை!

அடிமூடியைக் கொடுத்தால் அவமரியாதை; கண் மூடியைக் கொடுத்தால் மரியாதை. ஆனால், சரக்கு எதில் இருக்கிறது, தேங்காயில். அடி மூடியில்தான் சரக்கு இருக்கிறது. ஆகவே, சரக்கு இருப்பது அய்யருக்கு. சரக்குக் குறைவாக இருப்பது பக்தனுக்கு.

இதுபோன்று நிறைய சூழ்ச்சிகள் இருக்கிறது. அதனை ஒவ்வொன்றாக நாம் பார்க்கவேண்டும். இதை ஒரு பெரிய விஷயமாக நாம் எடுத்துக்கொள்வதில்லை. தேங்காயின் அடிபக்கத்தில்தான் எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். தண்ணீர் அடியில்தானே இருக்கும். பருப்பும் அங்கே தடிமனாக இருக்கும்.

நாம் வெற்றி பெற்றுவிடுவோமேயானால், அநேகமாக கடவுளே விடைபெற்று சென்றுவிடுவார்

இந்தச் சூழ்ச்சிகளில் இருந்து மக்களை விடுவிப்பது என்பது எளிதான ஒன்றல்ல. மிகக் கடினமான பணி. அந்தக் கடினமான பணியை, எல்லோரைக் காட்டிலும் தந்தை பெரியார் அவர்கள் மேற்கொண்டு, வாழ்நாள் முழுவதும் அதற்காக அர்ப்பணித்துக் கொண்டு, ஒரு மகத்தான சேவையை செய்திருக்கிறார். விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது; ஏற்படவேண்டியது இன்னும் பல மடங்கு இருக்கிறது. ஏற்படுத்தப்பட வேண்டிய பணிகளில், இதுவும் ஒரு பணி. அய்யர் அல்லாத பிற ஜாதியினரை அர்ச்சக பணியில் அமர்த்துவது என்பதில் நாம் வெற்றி பெற்றுவிடுவேமோயானால், அநேகமாக கடவுளே விடைபெற்று சென்றுவிடுவார்.

எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் பணிக்கு வந்துவிட்டீர்கள். நான் வந்த வேலை முடிந்துவிட்டது, ஆகவே நான் போகிறேன் என்று அவரே போய்விடுவார்.

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு மாற்றத்திற்கான போராட்டத்தில் ஒரு முக்கியமான போராட்டமாக நான் இதைக் கருதுகிறேன்.

அடுத்து நாம் என்ன செய்யவேண்டும்?

இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாம் வலியுறுத்தலாம்

நீதிமன்றத்திற்கும் செல்லலாம்

கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தலாம்

அரசைப் போய்ச் சந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பது எனது கருத்து. இந்த அரசை சொல்கிறேன். ஒருவேளை வேறு ஒரு அரசு மாறி வந்தால், அதுபற்றி நாம் யோசிக்கலாம்.

இதைப்பற்றிச் சிந்திப்பவர்களாக, இந்தக் கருத்தில் உடன்பாடு உள்ளவர்களாக, இது ஒரு நல்ல கருத்து என்று ஆதரிக்கக் கூடியவர்களாக ஒருவேளை வரப்போகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றம் வந்தால், அதுபற்றி நாம் யோசிக்கலாம்.

செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான்...

இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களிடம் நாம் சென்று சொன்னால், அது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும். அதனால், பயன் கிடைக்காது.

ஆகவே, நேரிடை களத்தில் இறங்குகிற ஒரு மகத்தான இயக்கத்தை நாம் மேற்கொள்ளலாம். அதற்கு ஆசிரியர் அவர்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டு,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்!

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் அவர்கள் முயற்சி எடுத்து, பெரியார் திடலில், இது ஒரு தொடக்கமாக - ஒரு முதல் வெற்றி - ஒரே ஒரு நபர் கோவிலுக்குள் நுழைந்திருக்கிறார் அர்ச்சனை செய்ய என்கிற முறையில் - அது வெற்றியாகவும் - அந்த வெற்றி போதுமானதல்ல - பெறவேண்டிய வெற்றி இன்னும் அதிகமாக இருக்கிறது என்று மக்களிடத்தில் எடுத்துச் சொல்லக்கூடிய விதத்தில், இந்த நிகழ்ச்சியை சரியான காலத்தில் ஏற்பாடு செய்த நம்முடைய ஆசிரியர் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner