எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோடி கோடி வணக்கங்களை உங்கள் திசைநோக்கி செலுத்துகிறேன்!

மு.பெ.சத்தியவேல் முருகனாரின் உருக்கமான உரை

சென்னை, செப்.11-   அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையில் நியாயமாக ஆத்திகர்கள்தான் போராடி இருக்கவேண்டும், கொண்டாடவும் வேண்டும். ஆனால், இங்கே நாத்திகர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்காக நாத்திகர்களின் திசை நோக்கி கோடி கோடி வணக்கங்களை செலுத்துகிறேன் என்றார் இந்தப் பிரச்சினைக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடிய மு.பெ.சத்தியவேல்முருகனாரின் அவர்கள்.  21..8.2018 அன்று சென்னை பெரியார் திடலில்,  அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை  முதல் கட்ட வெற்றி - அடுத்த நிலை என்ன? என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் வாதாடிய மு.பெ.சத்தியவேல்முருகனார் அவர்கள் உரையாற்றினார்:

அவரது உரை வருமாறு:

சமூகநீதி செங்கோலில் ஏற்பட்ட ஒரு வளைவு இன்றைய தினம் நீங்கி இருக்கிறது

இந்த அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொள்ளும் பேறு எனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி நான் மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட சமூகநீதி செங்கோலில் ஏற்பட்ட ஒரு வளைவு இன்றைய தினம் நீங்கி இருக்கிறது என்பதே மிகப்பெரிய வெற்றி. இதை நாம் எத்துணை சிரமத்திற்கிடையே அடைந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது, அந்தப் போராட்டங்களுடைய நினைவுகள் எல்லாம் என் முன்னே வந்து நிழலாடுகின்றன.

இதை நமது அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள், எண்ணி எண்ணி நீண்ட நாள்களாக அந்தப் போராட்டங்களில் எல்லாம் தந்தை பெரியாருடைய இறுதி விருப்பத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்று, மிகவும் ஆர்வத்தோடு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் வெளியில் இருந்தே கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

இங்கே நம்முடைய அய்யா முத்தரசன் அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் எளிமையான ஆனால், உயர்ந்த ஒரு தலைவர். அடித்தட்டு மக்களுக்கான சிந்தனைகளிலேயே ஆழ்ந்து போனவர். அவர்கள் இங்கே வந்திருப்பது எவ்வளவு சிறப்பானது என்பதை நம்முடைய கவிஞர் அவர்கள் மிக அழகாக சொன்னார்கள்.

ஏற்கெனவே, அவர் சார்ந்த அந்தக் கட்சி இதற்காக மிகப்பெரிய அளவில் ஒரு தீர்மானத்தை, நெடுநாட்களுக்கு முன்பே அதனை செய்திருந்தார்கள் என்பதை அவர் நினைவூட்டினார்.

பெரிய ஒரு வெற்றியை நாம் இப்பொழுது அடைந்திருக்கிறோம்

ஆக, இத்தனை பெரிய ஒரு வெற்றி என்பதை நாம் இப்பொழுது அடைந்திருக்கிறோம்.

இங்கே எனக்குமுன் அமர்ந்திருக்கின்ற என்னுடைய மிக நெருங்கிய நண்பரான இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்கள், இரண்டு மாதங்களுக்குமுன், என்னோடு இணைந்து தமிழ் வழிபாட்டுப் பயணம் என்கிற ஒரு பயணத்தில், அவருடைய 86 அகவை விழாவினை முழுமையாக தமிழ் வழிபாட்டுக்கு அர்ப்பணித்து  பயணித்திருந்தார்கள்.

இன்றைக்கு அவர்கள் இங்கே வருவார் என்று எனக்குத் தெரியாது. சில நாள்களுக்குமுன்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமையில் முதற்கட்ட வெற்றி என்று நான் அறிவித்தபொழுது, இலக்கிய செல்வர் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வந்து, அடுத்து நாம் என்ன செய்யலாம்; அதற்காக நாம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை ஆர்வத்தோடு கேட்டதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

பன்மடங்கு ஆர்வத்தோடு நம்முடைய ஆசிரியர் அவர்கள் இருக்கிறார்

அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதைப்பற்றி அவர் எவ்வளவு ஆர்வத்தோடு கேட்டாரோ, அதைவிட பன்மடங்கு ஆர்வத்தோடு நம்முடைய ஆசிரியர் அவர்கள் இருக்கிறார் என்பது இந்தக் கூட்டத்திற்கான அடிப்படையான ஒரு அமர்வு என்று சொல்லவேண்டும்.

மிக அற்புதமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி - இதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், இதற்கு எதிராக என்னென்ன எழுதுகிறார்கள் என்பதை நினைத்தால், மனம் மிகவும் வேதனைப்படுகிறது. இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து எழுத முடியுமா? என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். சமூக வலைத்தளங்களில் அவர்கள் எழுதுகிற தகுதியற்ற வார்த்தைகளைப் பார்க்கும்பொழுது மனம் வருத்தமடைகிறது, துயரப்படுகிறது, வேதனைப்படுகிறது.

உண்மையிலேயே நான் சொல்கிறேன் அதனையெல்லாம் சமூக வலைத்தளமாக நான் கருதவில்லை. குறிப்பிட்ட' சமூக வலைத்தளம் என்றுதான் அதனை சொல்லவேண்டும். அவர்கள் வயிறு எரிகிறார்கள் என்று சொன்னால், அது நல்ல விஷயமாகத்தான் இருக்கும் என்று அர்த்தம். ஏதோ நமக்கெல்லாம் நல்லது நடந்திருப்பதினால்தான் அவர்களுக்கு வயிறு எரியும் என்று நான் நம்புகிறேன்.

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்வது நான் இல்லை; தந்தை பெரியார் சொன்னார். இதை எடுத்து எழுதுகிறார்கள் அந்த சமூக வலைதளத்தில், கடவுள் இல்லை என்று சொல்கிறவர்களுக்கு கோவில்களில் யார் பூஜை செய்தால் என்ன? யார் அர்ச்சகர்களாக வந்தால் என்ன? என்று பதிவிடுகிறார்கள்.

பிறப்பைக் காரணம் காட்டி தடை செய்கிறானே, அதை எப்படி நாம் விட்டு வைப்பது?

கோவில்களில் யார் அர்ச்சகர்களாக வந்தால் என்ன என்று கேட்கிறீர்களே, கோவிலுக்குப் போவது என்பது அவரவர்களுடைய விருப்பம். தந்தை பெரியார் அவர்களுக்கு விருப்பம் இல்லை, அதனால் அவர் போகவில்லை. ஆனால், அவர் என்ன நினைக்கிறார், என்னுடைய சகோதரன் கோவிலுக்குப் போகும்பொழுது, அங்கே அவனுடைய பிறப்பைக் காரணம் காட்டி தடை செய்கிறானே, அதை எப்படி நாம் விட்டு வைப்பது? என்கிறார்.

இதுதான் அவர் பெரியார் என்று சொல்வதற்கு அடிப்படையானது.

யார், பிறருடைய துன்பத்தைத் தன்னுடைய துன்பமாக எண்ணுகிறார்களோ, அவர்தானே பெரியவர். தந்தை பெரியார் அவர்கள், எல்லா இடங்களிலும் அந்த உணர்வைக் காட்டியவர்.

எங்களுக்கும், தந்தை பெரியாருக்கும் உள்ள ஒரு சிறிய வேறுபாடு என்னவென்றால், நாங்கள் கடவுளை ஒப்புக்கொள்கின்றோம் என்பதைத் தவிர, வேறு எந்த வேறுபாடுகள் எங்களுக்குள் இல்லை.

நடுநிலையான ஆன்மிகவாதிக்கு எதிரானதல்ல

பெரியாருடைய நூல்களையெல்லாம் நான் ஏற்கெனவே வாங்கிப் படித்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், இங்கே பல முறை வந்து பேசும்பொழுது, ஆசிரியர் அய்யா அவர்கள் கொடுத்த நூல்களையெல்லாம் முழுமையாகப் படித்திருக்கிறேன். அவர் சொல்லுவதில் ஒன்றுகூட, நடுநிலையான ஆன்மிகவாதிக்கு எதிரானதல்ல.

அதனால்தான், குடிஅரசு பத்திரியைத் தொடங்கும் பொழுது, திருப்பாதிரிபுலியூர் ஞானியார் சாமிகளை வைத்துத் தொடங்கினார்.

அப்பொழுது ஞானியார் அடிகள் சொன்னார், நாங்கள் இந்த ஆன்மிகத்தில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக் கைகளையெல்லாம் துடைத்தெறிவதற்கு என்ன பாடுபடுகின் றோமோ, அதையெல்லாம் நாங்கள் மேடைகளில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதைக் களத்தில் சந்தித்து, அதைத் துடைத்து எறிவதற்கு வந்திருக்கின்ற ஒரே பெரியவர், பெரியார்தான் என்று ஞானியார் பேசியிருக்கிறார்.

நான் எதையும் புதிதாக சொல்லவில்லை. நான் வாரியாருடைய பேரன். அவர் சொல்வார், என்னிடம் நெருக்கமாகப் பேசும்பொழுது சொல்வார்,

இந்தத் தமிழ்நாட்டிற்கு ஒரு பெரியார் போதாது என்று.

இந்த நாட்டை சீர்திருத்துவதற்கு அவரைப் போல பல்லாயிரக்கணக்கானோர் வரவேண்டும் என்று என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்.

விபூதி வைத்த தி.க. சார் இவர்!

நான் இதுபோன்ற கூட்டங்களில் மேடையில் அமரும்பொழுது, நான் நெற்றியில் விபூதி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன் - ஓரமாக அமர்ந்திருக்கும் ஒருவர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார். என்னடா, இந்தக் கூட்டத்திற்கு இவர் இப்படி வந்திருக்கிறாரே என்று. அதேபோல, நான் ஆத்திகக் கூட்டங்களுக்குச் சென்றால், என்னைப் பார்த்தவுடன் வேறு மாதிரி நினைக்கிறார்கள். அது என்னவென்றால், விபூதி வைத்த தி.க. சார் இவர் என்கிறார்கள்.

உண்மையில் சொல்லப்போனால், பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த  முள் என்று கலைஞர் அவர்கள் சொன்னார். அதை 1970 ஆம் ஆண்டில், ஆட்டி அசைத்து பாதி முள்ளை எடுத்துவிட்டார். முதலமைச்சர் கலைஞர் ஒரு சட்டத்தை இயற்றினார். அந்த சட்டம் சிலரால் எதிர்க்கப்பட்டது. அந்த சட்டத்தில் குறை இருக்கிறது என்று 13 பேர் வழக்காடினார்கள். ஆனாலும், அந்த சட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திரும்பப் பெறவில்லை. அதுகுறித்து வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபொழுது, பாரம்பரியமாக வரும் அர்ச்சகர்களை நியமிக்கவேண்டும் என்று இருந்தது. அது அந்த சட்டத்தால் தூக்கி எறியப்பட்டது. அடுத்து இந்த வெற்றி இரண்டு தவணைகளாக வந்தது. 1971 ஆம் ஆண்டு பாதி தவணையாக வந்தது. அடுத்து 2015 இல் முழுமையாக ஒரு வெற்றி வந்துவிட்டது.

பரம்பரையாக அர்ச்சகரை நியமிக்காமல் யாரை அர்ச்சகராக நியமிக்கவேண்டும் என்று கேட்டபொழுது, சேஷம்மாள் வழக்கில் என்ன சொன்னார்கள் என்றால், பரம்பரையில் அர்ச்சகராக நியமிக்கக்கூடாது. ஆனால், ஆகமம் என்ன சொல்கிறதோ, அதுபடிதான் நீங்கள் நடக்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் சொன்னார்கள்.

ஆபரேசன் வெற்றி; நோயாளியை உயிரோடு கொண்டு போய் கோவிலில் சேர்த்திருக்கிறோம்

அன்றைக்குப் பெரியார் அவர்கள் இருந்த காலம், இந்தத் தீர்ப்பைப்பற்றி பெரியார் அவர்கள் என்ன சொன்னார் என்றால், ஆபரேசன் வெற்றி - நோயாளி செத்தார் என்று.

அது இப்பொழுது இந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு என்ன ஆகியிருக்கிறது என்றால், ஆபரேசன் வெற்றி - அதுமட்டுமல்ல, நோயாளியை உயிரோடு கொண்டு போய் கோவிலில் சேர்த்திருக்கிறோம். இதனால் யாருடைய மனம் மகிழும் என்கிறீர்கள்? மற்றவர்களுடைய மனம் மகிழாது - நிச்சயமாக பெரியாருடைய மனம் மகிழும். நடுநிலையாளர்கள் யார் யாரோ அவர்களுடைய மனங்கள் எல்லாம் மகிழும்.

ஆகவே, இது ஒரு மிகப்பெரிய வெற்றி என்று நாம் கருதுகிறோம். நாம் எப்படி இந்த வெற்றியை அடைந்தோம் என்பதை நாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியம்.

இந்தக் கூட்டத்தினுடைய முக்கிய நோக்கமே அடுத்து என்ன? என்பதுதான்

நாம் சிங்க நோக்காகப் பார்க்கவேண்டும்

இதை எல்லோரும் இணைந்து செய்யவேண்டிய ஒரு அற்புதமான பணியாகும்.

நாம் எப்படி வந்தோம்? எப்படி இதை சாதிக்க முடிந்தது? இப்பொழுது பெற்றது ஒன்றும் பெரிய வெற்றியல்ல - இன்னும் சாதிக்கவேண்டியவை நிறைய இருக்கிறது. அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்றால், நாம் சிங்க நோக்காகப் பார்க்கவேண்டும்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்குக்கூட இதுவரை என்று போட்டு, இனிமேல் என்று போடுகிறார்கள்.

அதைப்போல, ஒரு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து தொடங்கிய ஒரு மிகப்பெரிய கேடு - சமூகநீதிக் கேடு - அதை சாய்த்திருக்கிறோம் எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து. அந்த நிலையில், இந்த வெற்றி எப்படி வந்தது என்று பார்க்கவேண்டும்.

நம்முடைய பெரியார் போன்றவர்கள் எல்லாம் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார்கள்.

ஆத்திகர்கள் கொண்டாடவில்லை; மகிழ்ச்சியோடு நாத்திகர்களாகிய நீங்கள் கொண்டாடுகிறீர்கள்!

ஒரு அரசாங்கம் கூட்டணியில் அமையவேண்டும் என்றால், நாங்கள் எல்லாம் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கிறோம் என்று சில கட்சிகள் சொல்லும். அதைப்போல, எங்களுக்கு வெளியில் கிடைத்த ஆதரவு எங்களுக்கு அய்யா போன்றவர்களிடம் இருந்து கிடைத்தது. ஆனால், களத்தில் இருந்தது அடியேன். இன்னும் சொல்லப்போனால், இலக்கியச் செல்வருக்குத் தெரியும், என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும், என்னுடைய சீடர்கள் சிலர் இங்கே வந்திருக்கிறார்கள் அவர்களுக்கும் தெரியும். நான் தன்னந்தனியனாகப் போராடினேன். இப்படி ஒரு பெரிய வெற்றி கிடைத்தது என்று சொன்னால், அதை மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டியது யார்? ஆத்திகர்கள் கொண்டாடி இருக்கவேண்டும். ஆனால், ஆத்திகர்கள் கொண்டாடவில்லை. மகிழ்ச்சியோடு நாத்திகர்களாகிய நீங்கள் கொண்டாடுகிறீர்கள்.  இதற்கு கோடி கோடி வணக்கங்களை திசை நோக்கி வணங்குகிறேன்.

ஆகவே, எங்கேயோ கோளாறு இருக்கிறது. ஆத்திகர்களாக இருப்பவர்கள் மிகவும் சாதுவாக இருக்கிறார்கள். நான் உள்பட. அவர்களுக்கு எல்லா அநீதியும் தெரியும். ஆனால், அவர்கள் என்ன சொன்னார்கள், எல்லாம் அவன் செயல் என்றார்கள்.

பெரியார்தான் சொன்னார், எல்லாம் சிவன் செயல் அல்ல, எல்லாம் அவன் செயல் யார் தெரிகிறதா அவன் என்றால்? விடாதே, என்று நம்மையெல்லாம் உந்தித் தள்ளியவர் தந்தை பெரியார் அவர்கள். ஆகவேதான், இந்த வெற்றி கூட்டம் முதலாவதாக இங்கே நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் நடந்து இருக்கவேண்டியது எங்கே? ஆனால், அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே, இங்கே நடக்கிறது.

40 ஆண்டுகளாக அடியேன் தனித்துப் போராடினேன்!

நான் சொன்னதுபோல, 1978 இல் இந்தப் பணியைத் தொடங்கினேன். முதன்முதலாக தமிழ் வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றை பல எதிர்ப்புக்கிடையே நடத்தினேன். முழுக்க முழு தமிழால் எல்லா வழிபாடுகளையும் செய்யலாம் என்று நான் முதன்முதலாக செய்தபொழுது, எனக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் அங்கே தொடங்கியது - அது எங்கே முடிந்தது என்றால், 1978 லிருந்து இப்பொழுது 2018 வரை 40 ஆண்டுகளாக அடியேன் தனித்துப் போராடியதினுடைய அற்புதமான வெற்றிக்கனி இப்பொழுது கிடைத்திருக்கிறது. அதனால் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும் நான். ஆனால், இதை நோக்கிப் பார்க்கும்பொழுது, நான் பட்ட போராட்டங்கள்தான் எனக்கு நினைவிற்கு வருகிறது.

பெரியார் திடலிலிருந்து எனக்குக் கடிதங்கள் வரும். அந்த கடிதத்தின் முகவரியில், என்னுடைய பெயரை போட்டுவிட்டு, அடுத்ததாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரகலாம் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நேர் நின்று வாதாடியவர் என்று அந்தக் கடிதத்தின் முகவரியில் எழுதியிருப்பார்கள்.

டாக்டர் பட்டம் எதுவும் தேவையில்லை!

எனக்கு இரண்டு டாக்டர் பட்டங்கள் கொடுத்திருக்கிறார்கள். பாரத் பல்கலைக் கழகம் எனக்கு ஒரு டாக்டர் பட்டத்தை வழங்கியிருக்கிறது. தமிழ் இண்டர்நேஷனல் யுனிவர்சிட்டி என்ற அந்தப் பல்கலைக் கழகம் எனக்கு டாக்டர் பட்டத்தைக் கொடுத்திருக்கிறது. நன்றாகக் கவனிக்கவும், டாக்டர் பட்டத்தை கொடுத்திருக்கிறது - வாங்குவது இல்லை.

அந்த டாக்டர் பட்டங்களைவிட, நான் ஒன்றைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன் என்று சொன்னால், இந்தப் பெரியார் திடலிலிருந்து வருகின்ற அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரகலாம் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நேர் நின்று வாதாடியவர் என்ற வரியில்தான். இதைவிட வேறு டாக்டர் பட்டம் எதுவும் தேவையில்லை என்று நான் நினைப்பேன்.

நான் எடுத்த முயற்சிகள் அத்தனையும் அந்த ஒரு வரியில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் நேர் நின்று வாதாடியது எனக்கு நினைவிற்கு வருகிறது.

ஒரு மாலை வேளையில், எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு  டில்லியிலிருந்து வந்தது. அந்த தொலைப்பேசி அழைப்பில், உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று நாள்களில் அதுகுறித்த விசாரணைகள் முடிந்துவிடும். ஆனால், அங்கே என்ன நடக்கிறது என்று சொன்னால், பராசரன் அவர்கள், வாதிகளுக்கு ஆதரவாக வாதாடுகிறார். அவர் எவ்வளவு பெரிய வழக்குரைஞர் என்பது என்று எல்லோருக்கும் தெரியும். அவர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

அவர் மிக வேகமாக ஆகமத்தைப்பற்றியெல்லாம் வழக்கில் வாதாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதுபற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. எங்கள் சார்பாக அமர்த்தப்பட்ட வழக்குரைஞர் ஒரு கிறித்துவர். ஆகவே, இவருக்கு ஆகமத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆகவே, என்னை வரச் சொல்லி தொடர்பு கொண்டார்கள்.

ஆகம புத்தகத்தைப் பார்த்தவுடன்,  ஆகமத்தைப்பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டார்.

மாலை 6 மணி விமானத்தில் டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்கே பார்வையாளர் மாடம் இல்லை. வழக்குரைஞர்கள் அமரும் இடத்தில் நான் சென்று அமர்ந்தேன். காரணம் என்னவென்றால், நம்முடைய வழக்குரைஞருக்கு ஆகமத்தைப்பற்றி தெரியாது. பராசரன் நான் அமர்வதைப் பார்த்துக்கொண்டிருந்தார். என்னுடைய கைகளில் ஒரு தடிமனாக உள்ள ஆகம புத்தகத்தைப் பார்த்தவுடன், அவர் அதற்குப் பிறகு ஆகமத்தைப்பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டார்.

மனு போட்டவர்கள், மதுரையில் இருக்கின்ற ஏழு பட்டாச்சாரியார்கள். அவர்கள் எல்லாம் பார்வையாளர் மாடத்தில் இருந்தார்கள். அவர்கள் எல்லாம், இவர் மட்டும் எப்படி உள்ளே சென்று அமரலாம் என்று கேட்டார்கள்.

அரசு தான் முதல் ரெஸ்பாண்டண்ட்

நான் இரண்டாவது ரெஸ்பாண்டண்ட்

முதல் ரெஸ்பாண்டண்ட்டுக்கு உரிய வழக்குரைஞர் வரவேயில்லை. நீதிமன்றத்தில் இருக்கிறார், அவருடைய பெயர் பி.டி.ராய். ஆனால், அவர் அந்த வழக்கு விசாரணை நடைபெறும்பொழுது வரவேயில்லை. ஏனென்றால், அவருக்குக் கொடுத்த இன்ஸ்ட்ரக்சன். யார் கொடுத்திருப்பார்கள் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அதை நான் சொல்ல விரும்பவில்லை.

அந்தக் கட்டளைப்படி அந்த வழக்கு விசாரணைக்கு அவர் வரவேயில்லை.

ஆகவே, இந்த வழக்கில், வாதிகளுக்கு எதிராக வாதிட்ட ஒரே ஆள், அடியேனைத் தவிர வேறு யாரும் இல்லை.

நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களைத்தான் போற்றவேண்டும்

நம்முடைய வழக்குரைஞர் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் நான் எடுத்துக் கொடுத்தேன்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தீர்ப்பு கொடுத்த நீதிபதியை யாராவது நாம் பாராட்டவேண்டும் என்று சொன்னால், உண்மையிலேயே காலாகாலத்திற்கும் எங்களை வாழ வைத்தீர்களே என்று  அனைவரும் யாரைப் போற்றவேண்டும் என்றால், நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களைத்தான் போற்றவேண்டும். மிக அற்புதமான தீர்ப்பைக் கொடுத்தார். யாருமே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டை செய்ய முடியாது.

அவர் என்னைப் பார்த்து, நீங்கள் இங்கே வந்து அமர்ந்திருக்கிறீர்கள் என்று அவர்கள் அப்ஜெக்ஷன் செய்கிறார்கள் என்றார்.

நான் உடனே அவரிடம் சொன்னேன், நான் ஏன் இங்கே அமர்ந்திருக்கிறேன் என்றால், என்னுடைய வழக்குரைஞர் அவர்களுக்கு ஆகமத்தைப்பற்றி தெரியாது. அதனால், நான் இங்கே அமர்ந்து அவருக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் எடுத்துக் கொடுக்கிறேன் என்றவுடன்,

சரி என்று சொல்லிவிட்டார்.

ஆகமத்தில் ஜாதியே இல்லை என்பதை ஒவ்வொரு பகுதியாக எடுத்துக்காட்டினேன்

மூன்று நாள்களும் நான் அங்கே இருந்து நம்முடைய வழக்குரைஞருக்கு உதவி செய்தேன்.

ஆகமத்தில் ஜாதி என்பது உண்டா? என்று வரும்பொழுது,

ஆகமத்தில் ஜாதியே இல்லை என்பதை ஒவ்வொரு பகுதியாக எடுத்துக் காட்ட காட்ட, பராசரன் அவர்கள் பேசவேயில்லை, அப்படியே அமர்ந்துவிட்டார்.

நான் சொல்லும்பொழுது ஒவ்வொரு வரியாக ரஞ்சன் கோகாய் அவர்கள் குறித்துக்கொண்டே இருந்தார். கூடவே நீதிபதி ரமணன் அவர்களும் குறித்துக்கொண்டார்.

அவை அத்தனையும் தீர்ப்பில் மிகத் தெளிவாக அவர்கள் சொல்லியிருந்தார்கள்.

அதனால்தான், அரசு ஆணை என்பது ஒரு நிர்வாகத் திற்காகப் போடுகிற ஒரு ஆணை. அதை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய சமூக சீர்திருத்தத்தை செய்ய முடியாது; இது நிற்காது என்று தீர்ப்பில் சொல்லியிருந்தார்.

ஆனால், இது மிகப்பெரிய சமூகநீதியை உள்ளடக்கி இருக்கிற காரணத்தினால், இது இருக்கட்டும் என்று சொல்லி, அதை ரத்து செய்யாமல் விட்டாரே, அதை அவரைத் தவிர வேறு யாரும் செய்திருக்கமாட்டார்கள்.

பல நீதிபதிகளுக்கு ஆகமம் என்றாலே என்னவென்று தெரியாது

சேஷம்மாள் வழக்கில் சும்மாவே சொன்னார்கள், ஆகமத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று சொன்னார்கள்.

பல நீதிபதிகளுக்கு ஆகமம் என்றாலே என்னவென்று தெரியாது. ஆனால், அவர்கள்தான் நீதி வழங்குகிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள்.

ஆகமம் என்றால் என்னவென்று தெரியாது

இந்து என்றால் என்னவென்று தெரியாது

இந்து ரிலிஜியன் என்றால் என்னவென்று தெரியாது

அவர்களுக்கு அதிகபட்சமாக என்ன செய்வார்கள் என்றால், வடநாட்டில் என்னென்ன புத்தகங்கள் இருக்கிறதோ, அதை வைத்து அவர்கள் பேசுவார்கள்.

மனம் நொந்து நான் சொல்கிறேன், அந்தப் புத்தகங்களில் ஒரு புண்ணாக்கும் கிடையாது.

புண்ணாக்காக இருந்தால், எருமை மாட்டுக்காவது பயன்படும் என்று ஆசிரியர் அய்யா சொல்கிறார்.

சிந்தனை வறட்சி அங்கே முழுவதுமாக இருக்கிறது.

ஆகமம் என்றால் என்னவென்று தெரிந்தால்தானே தீர்ப்பு சொல்ல முடியும். உனக்கு கோவிலும் தெரியாது - ஆகமம் தெரியாது. ஆனால், அதை நான் நிலை நிறுத்துகிறேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்.

நீங்கள் எதிலேயும் ஆகம மீறல் செய்யவில்லையா?'

ஒரு சிறிய விஷயத்தை உங்களுக்கு சொல்கிறேன்:

ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், இதெல்லாம்  ஆகம மீறல் இல்லை என்று சொல்கிறார்கள். நான் எதிர் நிலையில் இருக்கிறேன்.

நான் கேட்டேன், நீங்கள் எதிலேயும் ஆகம மீறல் செய்யவில்லையா? என்று கேட்டேன்.

இல்லை என்றார்கள்.

நான் சொல்கிறேன், நீங்கள் ஆகம மீறல் செய்கிறீர்கள் என்று.

எப்படி? என்று கேட்டார்.

நான் அடுத்த நிமிடம் சொன்னேன், தினந்தோறும் நீங்கள் பல் துலக்குகிறீர்களா? என்றேன்.

உடனே அவர்கள் இதெல்லாம் சரியில்லை, இப்படி யெல்லாமா கேள்வி கேட்டீர்கள் என்றார்கள்.

நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என்றேன்.

ஆமாம், பல் துலக்குவோம், மாதம் 30 நாளும் பல் துலக்குவோம் என்றார்கள்.

காரனா ஆகமத்தில்...

நான் உடனே, காரனா ஆகமத்தில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறேன் என்று சொல்லி, மாதத்தில் 30 நாள்களில் 17 நாள்கள் பல் துலக்கக் கூடாது என்று ஆகமத்தில் இருக்கிறது என்றேன்.

ஆகவே, நீங்கள் மாதத்தில் 30 நாள்களும் பல் துலக்குகிறேன் என்று சொன்னீர்கள். ஆகவே, நீங்கள் ஆகமத்தை மீறுகிறீர்கள் அல்லவா! என்றேன்.

அவர்களால் மேற்கொண்டு எதையும் பேச முடியவில்லை.

அதேபோன்று ஆகமத்தில் ஜாதி இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகமப் முறைப்படி இதெல்லாம் இல்லை. ஆகமப் முறைப்படி இல்லாத ஒருபுறம் போக,

ஜாதி என்பதை வைத்து, தடை சொல்ல முடியாது என்பதை தெரியாமலேயே என்ன சொல்லிவிட்டார்கள் என்றால், பரம்பரையை மட்டும் எடுத்துவிட்டார்கள். அய்யர் பிள்ளை பாரம்பரியமாக அர்ச்சகராக வரவேண்டும் என்று இருந்ததை, கலைஞர் புண்ணியத்தில் சேஷம்மாள் வழக்கில் அதை எடுத்துவிட்டார்கள். அப்படியென்றால், யாரை அர்ச்சகராக நியமிக்கவேண்டும் என்றவுடன், ஆகமப்படி நியமிக்கலாம் என்றார்கள்.

ஆகமத்தில் ஜாதி என்ற தடை இருக்குமானால், அந்த ஆகமத்தை தூக்கி எறி!

ஆகமப்படி என்றவுடன், அதை அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள். அதை சரி செய்தவர் நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள்.

அவர் என்ன சொன்னார் என்றால், நீ  ஆகமப்படிதான் நியமிக்கவேண்டும். ஆனால், ஆகமத்தில் ஜாதி என்ற தடை இருக்குமானால், அந்த ஆகமத்தை தூக்கி எறி. நம்முடைய அரசியல் சட்டத்தை அதற்குப் பயன்படுத்து என்றார்.

இன்னும் சொல்லப்போனால், நம்முடைய அரசாங்கம் பயந்து போய், ஒரு ஆர்டினஸ் போட்டார்கள். 23.5.2006 ஆம் ஆண்டு ஒரு அரசாணை போட்டார்கள். அதற்குப் பிறகு, கர்வனர்மூலம் ஆர்டினஸ் போட்டார்கள். அப்படி கர்வனர் ஆர்டினஸ் போட்டது தவறு.

என்ன செய்திருக்கவேண்டும் என்றால், சட்டப் பேரவையில் வைத்து ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கவேண்டும். நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் கேட்டார்கள், ஏன் நீங்கள் ஒரு சட்டத்தைக் கொண்டு வரவில்லை என்று. நீங்கள் சாதாரண ஒரு எக்ஸிக்யூட்டிவ் பிளிட்டை வைத்து செய்ய முடியுமா? என்றார்.

கஸ்டம்ஸ் அன்ட் யூசேஜ் என்பதை நீங்கள் இனிமேல் காட்ட முடியாது

கஸ்டம்ஸ் அன்ட் யூசேஜ் என்று பயமுறுத்தினார்கள். இதில் ஒன்றில்தான், நம்முடைய அனைத்து வழக்குகளும் மாறிப் போயின. அதைத் தூக்கி எறிந்தவர், நீதிபதி ரஞ்சன் கோகாய் ஒருவர்தான்.

இனிமேல் கஸ்டம்ஸ் அன்ட் யூசேஜ் என்று சொல்லி ஏமாற்ற முடியாது. கஸ்டம்ஸ் அன்ட் யூசேஜில் கண்டிஷனைப் போட்டிருக்கிறார்கள். அதை எடுத்துக்காட்டி, இந்தக் கண்டிஷன்படி எதுவுமே இதற்கு ஒத்துவராது என்று எடுத்துக்காட்டினார்.

கஸ்டம்ஸ் அன்ட் யூசேஜ் என்பதை நீங்கள் இனிமேல் காட்ட முடியாது என்று மாற்றிக் கொடுத்த பெருமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களையே சாரும்.

16.12.2015 இல் நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தேன். அன்றுதான் தீர்ப்பு வந்தது. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்று சுப.வீ. அவர்கள் என்னை தொடர்பு கொண்டு நான் என்ன சொல்லவேண்டும் என்று கேட்டார்.

அந்தத் தீர்ப்பை வரவேற்கவேண்டும் நாம். இது சரியானதுதான் என்றேன்.

சரி, நான் அப்படியே பேசிவிடுகிறேன் என்றார்.

தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாராட்டப்படுகிற ஒரு தலைவர்

மறுநாள் தி டைம்ஸ் ஆஃப் இண்டியாவிற்கு அளித்த பேட்டியில் மிகத் தெளிவாக சொல்லியிருந்தேன்.

அந்தப் பேட்டியை ஆசிரியர் அய்யா அவர்கள் முழுமையாகப் படித்துவிட்டு, மறுநாள் அவராகவே என்னிடம் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அரை மணிநேரம் பேசினார்.

நான் நினைத்துப் பார்க்கிறேன், தலைமுறை தலைமுறையாகப் போற்றிப் பாராட்டப்படுகிற ஒரு தலைவர், மிக எளிமையாக என்னிடம் பேசினார்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு நமக்கு சாதகமானது. தீர்ப்பு சரியாக இருக்கிறது. ஆனால், ஒருவரை அதன்மூலம் ஏன் நியமிக்க முடியவில்லை என்பதை நாம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

நாம் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதுதான் இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவம்.

இப்பொழுது நாம் அரசாங்கத்திடம்தான் செல்லவேண்டும். காரணம், இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம்தான் நிறுத்தி வைத்திருந்தது.

அழுது அழுது தியானம் செய்தே ஒருவர் ஆட்சியில் சேர்ந்துவிட்டார்

பந்து இப்போது அரசாங்கத்திடம்தான் இருக்கிறது. அரசாங்கத்திடம் போவதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

தியானம் செய்யலாமா?

ஆனால் வினையேன் அழுதால் உன்னை பெறலாமே என்று மணிவாசகர் சொன்னதைப்போல, அழுது அழுது தியானம் செய்தே ஒருவர் ஆட்சியில் சேர்ந்துவிட்டார்.

ஆகவே, நாம் தியானம் செய்யலாமா?

இன்னொருவரிடம் நாம் செல்லலாமா என்று நினைத்தால்,  எங்களுக்கு ஒரு சொல்லுங்கள் என்று கேட்டால், தாராளமாக, ஒரு வழி என்ன? எட்டு வழி செய்கிறேன் என்று அவர் அதை செய்துகொண்டிருக்கிறார்.

அதற்கு அவர்கள் சரிப்பட்டு வரவில்லையா? பரவாயில்லை, நிறைய பேர் இப்பொழுது ஆவிகளோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆகமப் பயிற்சி முடித்தவர்களில் ஒருவருக்கு அர்ச்சகர் பணி கொடுத்துவிட்டார்கள். மீதி உள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு போய், நாம் கேட்கலாம். முடிந்தால், ஆவிகளோடு பேசிப் பார்ப்போம்.

ஆவிகளிடம் நம்முடைய ஆதங்கத்தை சொல்லலாம் அல்லவா!

இன்னும் சொல்லப்போனால், கலைஞரிடம் போய் கேட்கலாமே! கலைஞரிடம், ஆதங்கத்தை நிறைய பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே!

அரசாங்கத்திற்கு குருவிடமிருந்து கட்டளை வரவேண்டும்!

நீங்கள் கொண்டு வந்தது; அப்படியே நடுவில் நிற்கிறதே என்று நம்முடைய ஆதங்கத்தை அவரிடம் சொல்லலாம்.

இல்லீங்க, இல்லீங்க, அரசாங்கத்திடமே போய்விடலாம் என்றால், அவர்கள் செய்தாலும் செய்வார்கள்.

அவர்கள் செய்யவேண்டும் என்றால், அவர்களின் குருவிடமிருந்து கட்டளை வரவேண்டும். எந்தக் குரு என்று நான் சொல்ல விரும்பவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் போக, நிச்சயமாக நடந்த ஒரு நிகழ்வை திடமாக்கி, மிகப்பெரிய அளவில் உறுதியாக்க வேண்டும், நிரந்தரமாக்கவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

பதில் தெரியாமல் விழித்த பிராமணர்கள்!

இதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால், மதுரையில் உள்ள அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் அல்லவா - அவர் உடனே அந்தப் பொறுப்பில் அமர்த்தப்படவில்லை. அந்தப் பதவிக்காக இண்டர்வியூ நடைபெற்றபொழுது ஒரு அய்ந்து  பிராமணர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர்களுக்குப் பதில் தெரியாமல் விழித்தபொழுது, நம்மிடம் பயிற்சி பெற்றவர்தான் தெளிவான விடை சொன்னார் என்பதற்காக அந்தப் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடுகு நுழைந்துவிட்டது, இனிமேல் கடப்பாரையை நுழைப்பது பெரிய விசயமல்ல.

இதில் மிக முக்கியமானது என்னவென்றால்,  அம்மையார்  இருந்தபொழுது, வேகன்சி வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள்.

வேகன்சி என்றால், ஒவ்வொரு கோவிலில் இருக்கும் குருக்களை நாம் உற்று உற்றுப் பார்க்கவேண்டும். இவர் எப்பொழுது போவார்? என்று.

மதுரை அய்யப்பன் கோவிலில், இளநிலை அர்ச்சகர் என்ற பதவியில்தான் நியமித்திருக்கிறார்கள்.

எல்லா குருக்களும் போய், இவர் வரவேண்டும் என்றால், எந்தக் காலத்தில் வருவது? அது முடியாது.

இளநிலை உதவியாளர்கள் என்று நியமிக்கலாம்!

ஆகவே, என்ன செய்யவேண்டும் என்றால், தமிழ்நாட்டில் பாடல் பெற்ற தளங்கள் 274 தளங்கள் உள்ளன. 38,635 கோவில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் ஒரு 205 பேரை பணி நியமனம் செய்ய முடியாதா?

தாராளமாக பணி நியமனம் செய்யலாம். எப்படி என்றால், ஏற்கெனவே இருக்கின்ற பெரிய பெரிய கோவில்களில், இவர்களையெல்லாம் இளநிலை உதவியாளர்கள் என்று நியமிக்கலாமே!

அரசிடம் சென்று நாம் கேட்போம், ஆகமப் பயிற்சி பெற்றவர்களை இளநிலை உதவியாளர்களாக நியமனம் செய்யுங்கள் என்று.

அடுத்து நாம் நீதிமன்றத்திற்குச் செல்வோம்!

அதில் சுணக்கம் இருக்குமேயானால், அடுத்து நாம் நீதிமன்றத்திற்குச் செல்வோம்.

நாம் குறிக்கோளை அடையவேண்டும் என்பதற்கு பல முறைகள் இருக்கின்றன. அத்தனை முறைகளையும் இங்கே நான் சொல்ல முடியாது.

ஆசிரியர் அய்யா, இன்னும் சில முக்கியமானவர்களோடு கலந்து ஆலோசித்து அந்த முறைகளையும் செய்வோம்.

ஆகமப் பயிற்சி பெற்றவர்களை இளநிலை உதவியாளர்களாக நியமியுங்கள் என்று நாம் கேட்டு, அதை மறுக்க முடியாத சூழ்நிலை வரும் - பணி நியமனம் செய்யவேண்டியது இருக்கும்.

அதுபோன்று பணி நியமனம் செய்யும்பொழுது, அதில் இட ஒதுக்கீடு கேட்கலாம் என்று நம்முடைய முத்தரசன் அவர்கள் சொன்னார்.

மிகவும் ஒளிமயமாக நமக்குத் தெரிகின்றன

ஆகவே, இதையெல்லாம் வெற்றிக்கு அடுத்த படியில் என்னென்ன இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். அத்தனையும் மிகவும் ஒளிமயமாக நமக்குத் தெரிகின்றன.

அந்த ஒளிமயமான எதிர்காலத்தை நினைவில் கொண்டு, இதுகாறும் அடியேனுடைய சொற்களையும் கேட்ட, உங்களுடைய பொன்னார் திருவடிகளுக்கு அடியேனுடைய சிரம் தாழ்ந்த வணக்கத்தை செலுத்திக் கொண்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகின்றேன்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு  அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் வாதாடிய மு.பெ.சத்தியவேல்முருகனார் அவர்கள் உரையாற்றினார்.[

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner