எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொதுக்கூட்டம்-உரைவீச்சு-பறை முழக்கம்-சிலம்பாட்டம்-மந்திரமல்ல, தந்திரமே!

நிகழ்ச்சிகளுடன் கொள்கை பெருவிழாவாக நடைபெற்றது!!

திருப்பூர், அக். 11-- தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, கலைஞர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் உரைவீச்சு, பறை முழக்கம், சிலம்பாட்டம், மந்திரமல்ல! தந்திரமே! நிகழ்ச்சிகளுடன் கொள்கை பெருவிழாவாக அரங்கேறியது.

பொதுக்கூட்டம்

"அறிவு ஆசான்" தந்தை பெரியாரின் 140 வது பிறந்தநாள் விழா, "மானமிகு சுயமரியாதைக்காரர்" டாக்டர்.கலைஞர் அவர்களின் நினைவேந்தல் ஆகிய இருபெரும் நிகழ்வு களை கொள்கை பெருவிழாவாகக் கொண்டாடும் வகை யில் திராவிடர் கழகம் சார்பில் திருப்பூர், பல்லடம் சாலை, மாநகராட்சி துப் புரவாளர் குடியிருப்பு பகுதியில் 17.9.2018 திங்கள்கிழமை,மாலை 6 மணியளவில்  மாபெரும் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் திருப்பூர் மாநகரச் செயலாளர் பா. மா.கருணாகரன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகரத் தலைவர் இல. பாலகிருட்டிணன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். திருப்பூர் மாநகர கழக துணைத்தலைவர் "ஆட்டோ" தங்கவேல், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த சி.கந்தசாமி (பி.எஸ்.என்.எல்), நாக.சதாசிவம் (ஓய்வு பெற்ற வங்கி காசாளர்), கரு.துரைசாமி (திமுக) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலைஞர் உருவப்படத்திறப்பு

"மானமிகு சுயமரியாதைக்காரர்" டாக்டர்.கலைஞர் அவர்களின் உருவப் படத்தை திருப்பூர் மாநகர தி.மு.கழக செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ் திறந்து வைத்தார்.

உரைவீச்சு

பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கழ கச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வம் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த் தியதாவது;  நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா தத்துவ விழாவாகக் கொண்டாடப்பட்டு வருவதன் ஒரு பகு தியாக தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா,டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவேந்தல் ஆகிய இருபெரும் நிகழ் வுகளை இணைத்து திருப்பூர் மாவட்ட, மாநகர திராவிடர் கழகத் தோழர்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்! மதவாத, ஜாதிய, மூடநம் பிக்கை ஆகிய பிற்போக்குத் தனங்களை முறியடிக்கும் விதமாகவும், இத்தகைய அடிப்படைவாதங்களுக்கு இடங் கொடுக்கமாட்டோம் என்று உறுதி எடுக்கும் வகையிலும் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விமர்சனங்களே கொள்கைக்கு உரம்

கலவரங்களை பலவழிகளில் உரு வாக்க பா.ஜ.க., சங்-பரிவார் கும்பல்கள் காய் நகர்த்துகிறது. ராமனையும், விநா யகரையும் கொண்டு நாட்டை அமளிக் காடாக உருவாக்க முயற்சிகள் நடை பெற்று வருகிறது. தந்தை பெரியார் சிலையை செருப்பு வைத்து அவம திக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் மீது கடலூரில் நேரடியாகவே செருப்பு வீசப்பட்டது, எந்த இடத்தில் அய்யா மீது செருப்பு வீசப்பட்டதோ அதே இடத்தில் அய்யா அவர் களுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. விமர்சனங்களை உரமாக்கிக் கொண்டு பயணிக்கும் தத்துவம் தந்தை பெரியார் தத்துவம்!! ஆகவே பா.ஜ.க., சங்-பரிவார் கும்பல் கள் தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் கால்பதிக்க முடியாது!

பெரியாரின் போராட்டங்கள்

சமூகத்தைப் புரட்டிப் போட்டவர் பெரியார்! சமூகத்தை மாற்றிக் காட்டிய வர் பெரியார்! நாம் அனைவரும் இன்று பெற்றுள்ள வாய்ப்புகள், சுகங்கள் எல்லாமே தந்தை பெரியாரால் நமக்குக் கிடைத்தவையாகும்! இன்று உலகம் முழுவதும் 48 நாடுகளில் பெரியார் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. அகில மெங்கும் தந்தை பெரியார் தத்துவம் கோலோச்சிக் கொண் டிருக்கிறது. பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அது தந்தை பெரியார் அவர்கள் அறிவித்து நடத்திய சட்ட எரிப்புப் போராட்டமேயாகும்! ராமர் பட எரிப்பு, பிள்ளை யார் சிலை உடைப்பு என்று பார்ப்பன பண்பாட்டு படை யெடுப்புக்களின் மூலத்தை அழிக்கும் போராட்டங்களை நடத்தியவர் தந்தை பெரியார்! தனிப்பெருந் தலைவர் டாக்டர் கலைஞர் தந்தை பெரியார் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை கோரி நிறைவேற்றிய தீர்மானத்திற்கும், தந்தை பெரியார் அவர்களின் இறுதிப் போராட்டமான அனைத்துச் சாதி யினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கைக்கும் சட்ட வடிவம் கொடுத்தவர் டாக்டர். கலைஞர், மேடைக்கே கோப்புகளை கொண்டுவரச் செய்து மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றிய தனிப்பெருந் தலைவரும் டாக்டர் கலைஞரே ஆவார். டாக்டர் கலைஞர் அவர்கள்  எதையும் கொள்கை பார்வையோடு பார்ப்பவர்! அரசு சார்பில் அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 பேரில் 1 நபருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் டாக்டர் கலைஞர் அவர்கள் மறைவுற்றபோதும் வெற்றி வாகை சூடியுள்ளார்.

தமிழக அரசின் நிலை

பாசிச பி.ஜே.பி ஒழிக! என்று கூறிய பெண் கைது செய்யப்படுகிறார்! ஆனால் நீதித்துறையையும், காவல் துறையையும் இழிவாகப் பேசிய எச்.ராஜா ஏன் கைது செய்யப்படவில்லை? தமிழகத்தின் மானத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டு, பா.ஜ.க வின் கைக்கூலி யாக, எடுபிடியாக தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண் டிருக்கிறது! இந்த நிலை இனியும் தொடருமேயானால் தமிழ்நாட்டை விட்டு "பார்ப்பனர்களே வெளியேறுங்கள்" என்ற முழக்கம் பிறக்கும்! பி.ஜே.பி என்கிற கட்சியை முற்றாக துடைத்தெறிகிற நிலை உருவாகும்!

சூளுரை

எது நம்மை பிரிக்கிறதோ அதை அலட்சியப்படுத்துங்கள்! எது நம்மை இணைக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள்! வடவர் சுரண்டல் தடுக்கப்பட்டாக வேண் டும்! தீய பழக்கங்களுக்கு  அண்டா நெருப்பாக நம்மை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்! மதவெறி, ஜாதிய வெறி அமைப்புகளை அப்புறப்படுத்திட வேண்டும்! தந்தை பெரியாரின் தத்துவம் உலகை ஆள ஒவ்வொருவரும் களப்போராளிகளாக தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு, தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் நாம் நம்மை ஒப்படைத்துக் கொள்ளவேண்டும்! இதையே இளைஞர்களும், மாணவர்களும் தந்தை பெரியார் பிறந்தநாளில் சூளுரையாக ஏற்கவேண்டும்!  என்று வெள்ளம் போல் திரண்டிருந்த கூட்டத்தினரிடையே கடல்மடை திறந்தாற்போல கழகச் சொற்பொழிவாளர் உரைநிகழ்த்தினார்.

உரையாற்றியோர்

கூட்டத்தில் தாராபுரம் கழக மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன் துவக்கவுரையாற்றினார். திருப்பூர் மாவட்ட கழக தலைவர் இரா.ஆறுமுகம், செயலாளர் யாழ். ஆறுச்சாமி, திருப்பூர் மாவட்ட பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் இல. அங்ககுமார், முகில்ராசு, திருப்பூர் மாநகர 50 வது வட்ட திமுக செயலாளர் மு.நந்தகோபால்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் துரைவளவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பறைமுழக்கமும், சிலம்பாட்டமும்

கூட்டத்தின் துவக்கத்தில் திருப்பூர் மாவட்ட பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சார்ந்த மாணவர்களான விக்னேஸ்வரன், லோகேஸ்வரன், அஜய், மணிகண்டன் ஆகியோர் சிறப்பான முறையில் பறைமுழக்கம், சிலம் பாட்டத்தின் பல்வேறு பரிமாணங்கள், சுருள் வீச்சு, உரிவீச்சு போன்றவற்றை எழுச்சியோடு அரங்கேற்றினர்.

மந்திரமல்ல! தந்திரமே!!

கூட்டத்தில் பழனி சு.அழகர்சாமி அவர்கள் மந்திரமல்ல! தந்திரமே!! எனும் மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சியை செயல்முறை விளக்கமாக நடத்திக் காட்டினார். இந் நிகழ்ச்சியை சிறுவர்களும், தாய்மார்களும் வியப்போடு கண்டு களித்தனர். மக்களை ஏமாற்றி பணம் பறிப்பதற்காகச் செய்யப்படுவது தான் மூடநம்பிக்கை என்ற விழிப் புணர்வை இந்நிகழ்ச்சியை கண்ணுற்ற அனைவரும் பெற்றார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

பங்கேற்றோர்

திராவிடர் கழகத்தின் கோவை மண்டலச் செயலாளர் ம.சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் வீ.சிவ சாமி, திருப்பூர் மாநகர கழகத்தைச சார்ந்த ம.மகேஷ்வரன், கோவை மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் ச.மணிகண்டன், திராவிடர் மாணவர் கழகத்தைச் சார்ந்த பா.தமிழ்மணி, கழக மகளிரணியைச் சார்ந்த ரத்தினம் முருகேசன், கழக இளைஞரணியைச் சார்ந்த லெனின் குமார்,தங்கமணி, பெரியார் இயக்கங்களின் கூட்ட மைப்பைச் சார்ந்த சங்கீதா, பழ.கந்தசாமி (திமுக), "பந்தல்" ஓ.செல்வராஜ் (திமுக), பழ.சிவலிங்கம் (திமுக), ச.மாது (திமுக), ஈழவளவன் (வி.சி.க) உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் திரளாப் பங்கேற் றனர்.

கூட்டத்தின் நிறைவாக திருப்பூர் மாநகர கழக இளைஞரணியைச் சார்ந்த பா.குருமூர்த்தி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner