எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புத்தகக் கடலில் நீந்தி மகிழ்ந்த தோழர்கள்

இரா.திலீபன், தஞ்சாவூர்

தஞ்சை, நவ.7 தஞ்சையில் 19.10.2018- அன்று பெசன்ட் அரங்கத்தில், பெரியாரின் புத்தகப் புரட்சி' என்ற தலைப்பில் தமிழர் தலைவர் அவர்களின் ஓர் புரட்சி கரமான சொற்பொழிவையும், புத்தகக் கடலில் நீந்தி மகிழ்ந்த தோழர்களையும் நம்மால் மறக்க இயலாது.

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பெரியார் பேசுகிறார் தொடர்&-50, சிறப்புக் கூட்டத்தில் மேற்கண்ட தலைப்பில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய அற்புதமான அவ்வுரையில், தந்தை பெரியார் அவர்களின் புத்தகப் புரட்சி பற்றி பலர் அறிந்திராத பல ஆச்சரியமான வரலாற்றுச் செய்திகளை விளக்கினார்கள். மேலும் ஆசிரியர் அவர்களின் ஆராய்ச்சி உரைகளின் தொகுப் பாகிய இராமாயணம் இராமன் இராமராஜ்ஜியம்' என்ற புத்தகம் மற்றும் சீரிய கருத்துடைய இரண்டு வெவ்வேறு புத்தகங்கள் வெளியீட்டு விழா மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

இன்னிசை நிகழ்ச்சி

இன்னிசை நிகழ்ச்சியுடன் இனிதே ஆரம்பித்த அச்சிறப்புக் கூட்டத்திற்கு தி.மு.க. தஞ்சை மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம், இதர தி.மு.க. பொறுப்பாளர்கள், தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், சீரிய சிந்தனை யாளர்கள், சான்றோர்கள், மாணவர்கள் என்று அனைத்துத் தரப்பினர்களும் வருகை புரிந்து அரங்கத்தையே நிரம்பி வழியச்செய்து ஒரு  திருவிழாவைப் போல் களைக்கட்ட செய்துவிட்டார்கள்.

ஓய்வறியா நம் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏறக் குறைய முந்நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக செட்டுகளை கிட்டத்தட்ட அரை மணிநேரம் நின்று கொண்டே, புத்தகங்களை வாங்கும் தோழர்களை இன்முகத்தோடு (புத் தகங்கள் வாங்குகிறார்களே என்ற மகிழ்ச்சியுடன்) அழைத்துக் கொடுத்தார்கள். இன்னும் சொல்லப் போனால் நான் கைந்து முறை அமர்ந்து மீண்டும் மீண்டும் எழுந்தும் புத்தகங்களை தோழர்களுக்கு கொடுத்தார்கள்.

இதனைக் கண்ட தருணத்தில், டி.கே.ஜி.நீலமேகம் அவர்கள், ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப் பையும், சுறுசுறுப்பையும் பற்றி நிகழ்ச்சியில் கூறியது தான் நினைவிற்கு வந்தது.

தமிழர் தலைவர் சிறப்புரை

பெரியாரின் புத்தகப் புரட்சி' என்ற தலைப்பில் தமிழர் தலைவர் அவர்கள் ஆற்றிய சிறப்புரை இதோ,

தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலே, "பெரியார் பேசுகிறார்" என்ற சிறப்பான தலைப்பில், ஒவ்வொரு மாதமும் அரங்கத்தில் தோழர்களை கூட்டி ஒரு தலைப்பிலே பெரியாருடைய சிந்தனைகள், பகுத்தறிவு சிந்தனைகள், முற்போக்கு விளக்கங்கள் இவைகளையெல்லாம் தொடர்ந்து நடத்திக் கொண்டு வரக்கூடிய இந்த அற்புதமான தொடர் நிகழ்விலே, இன்றைக்கு 50-ஆவது தொடரில் நான் உரையாற்ற வேண்டுமெனக் கேட்டு, இங்கே இந்த வாய்ப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு உங்களை எல்லாம் சந்திக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியிலே இராமாயணம் இராமன் இராமராஜ்ஜியம்' என்ற புத்தகம், தோழர் தா.பாண்டியன் எழுதிய சமுதாய விஞ்ஞானி பெரியார்' மற்றும் ஆராய்ச்சி அறிஞர், மேட்டூர் அணை இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக காவிரி வடிகால் பகுதிக்குப் பயன்படுகிறது என்று சொன்னால், அந்த "மேட்டூர் அணையை இந்த இடத்தில் அமைத்தால் தான் சிறப்பாக இருக்கும்" எனச் சொல்லி, அந்த இடத்தையே முதன் முதலில் காட்டிய பொறியாளர் தமிழர், தந்தை பெரி யாரின் நண்பர் பா.வே.மாணிக்க நாயக்கர் அவர்களுடைய "கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்" என்று தமிழ்க் கடல் மறைமலை அடிகளாரின் தலைமையில் பல்லாவரத்திலே 1935-இல் அவர்கள் உரையாற்றி பின் 1955-இல் முதன் முறையாக வெளியிட்டு, அதன் பிறகு அப்புத்தகம் கிடைக்காத காராணத்தாலே நம்முடைய இயக்கம் மீண்டும் அதனை வெளியிட்ட அந்த புத்தகத்தில் சமஸ்கிருத ஸ்லோகங்களோடு எடுத்து பயன்படுத்திருப்பார்கள்.

இந்த நூல் வெளியீட்டு விழாவினை மிகச் சிறப்பாக செய்து, சிறந்த கருத்துகளை எடுத்துக் கூறிய தி.மு.க. தஞ்சை மாநகர செயலாளர் டி.கே.ஜி.நீலமேகம் அவர் களே, இதர பொறுப்பாளர்களே, தோழர்களே, அனைவருக்கும் வணக்கம்.

"நேரம் குறைவான இந்த தருணத்தில் நிறைய பேச வேண்டும் என்ற வாய்ப்பு இல்லை என்றாலும், இங்கு ஒரு தொடக்கத்தை செய்யவிருக்கிறோம் என்பது தான் மிக முக்கியம். அந்த அடிப்படையிலே இங்கே ஒரு சிறப்பானத் தலைப்பு, பெரியாரின் புத்தகப் புரட்சி', இதே தலைப்பிலே ஒரு பத்து மணித்துளிகளில் சென்ற செப்டம்பர் மாதத்தில் அய்யாவின் பிறந்தநாளிலே, சென்னை வானொலியில் பேசினோம். அதை இங்கே விரிவாக பேசலாம் என்பதற்காக வந்தபொழுது நிறைய புத்தகங்களை நீங்கள் வாங்கியிருக்கிறீர்கள், சுருக்கமாக சொல்லு கிறேன், தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சிப் போல் வேறு எந்த தலைவரும் நாட்டில் இதுவரை செய்திருக்க மாட்டார்கள்.

புத்தகமே புரட்சியானது தான்

புத்தகமே புரட்சியானது தான், அதில் புத்தகப் புரட்சி என்றால், இரண்டு புரட்சி என்று பொருள்! இன்றைக்கு தமிழ் நூல்கள், கருவூலங்கள் நமக்கு கிடைக் காததிற்கு என்ன காரணம் என்றால் ஓலைச் சுவடிகள், அதை எங்கேயோ போட்டார்கள், கரையான் சில இடங்களில் அரித்து கொஞ்சம் மிச்சம் மீதி இருந்ததை கெட்டிக்கார படித்தப் பார்ப்பனர்கள், மனு தர்மப்படி படிக்கக் கூடாத ஜாதியாக இருந்தவர்களிடம் பதினெட்டாம் பேறு (18) என்ற மூடநம்பிக்கையை புகுத்தி பூஜை செய்து அவ்வோலைச்சுவடிகளை ஆற்றில் விடவைத்தனர்.

அது காப்பாற்றப் படாமல், சாமர்த்தியமாக ஆற்றில் விடப்பட்டது. ஆகவே ஓலைச்சுவடி, எழுத் தாணி காலம் மாறி, பிறகு ஜான் கூட்டண்பெர்க் என்ற ஜெர்மானிய பொறியாளர் ஒரு கருவியை கண்டு பிடித்தார், அதுதான் அச்சு இயந்திரம்.

அறிவு வளர்ச்சியால் கிண்டில் கருவி

முதல்முறையாக அந்த அச்சு இயந்திரத்தை இங்கே கொண்டு வந்தது சேகன்பால்யூ போன்ற கிறித்துவ பாதிரிமார்கள், 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது, தரங்கம்பாடியிலே தான் முதலில் பைபிள் அச்சடித் தார்கள். இன்றைக்கு தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியினாலே புத்தகங்களை பாதுக்காப் பது எப்படி என்று சொன்னால், ஒரு சின்ன சிலேட்டு மாதிரியான கிண்டில் (Kindle) என்ற கருவியிலே சுமார் மூன்று லட்சம் புத்தகங்கள் வைத்துக் கொள்ள முடியும். மிகப் பெரிய அளவிற்கு அறிவு வளர்ச்சி அடைந்து விட்டது!

அக்காலத்தில் அறிவு வளர்ச்சியை பாழ்ப்படுத்தி னார்கள் & இந்த அழிவுக்கு ஆட்படாமல் எப்படியோ திருக்குறள் தப்பியது! திருக்குறளில் கடவுள் வாழ்த்துப் பாடல் போன்ற மாறுபாட்டுக் கருத்து இருப்பினும், அய்யா அவர்கள் &  இந்த சமுதாயத்திற்குக் கிடைத்த பகுத்தறிவுப் பகலவன் & திருக்குறளை உயர்த்தினார்கள், பள்ளிக்கூடத்திற்கே போகாமல், நாட்டில் பல பள்ளிக் கூடங்களை உற்பத்தி செயதவர், பல பல்கலைக் கழகங்களில் அவருடைய ஆய்வுகள், கருத்துகளை கலையாக உருவாக்கியவர் அல்லவா தந்தை பெரியார்!

பார்ப்பனர்கள் படிப்பதற்கு மட்டுமே வேதபாடசாலை

அப்படி படிப்பறிவு இல்லாத காலகட்டத்தில் வெகு சிலரே படித்திருந்தனர், அரசர்கள் கூட படித் திருக்கவில்லை. சேர சோழ பாண்டியர்கள் என்று நாம் பெருமை பேசுகிறோமே, இவர்களில் யாரும் நம் பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் வைக்கவில்லை, பார்ப்பனர்கள் படிப்பதற்கு மட்டுமே வேதபாடசாலை வைத்திருந்தார்கள். அதன் விளைவு நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1900-லே ஒரு சதவீதம் கூட தமிழர்கள் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் கிடையாது என்று புள்ளி விவரம் உண்டு, இதைவிட வெட்கப்பட வேண்டிய நிலை வேறேதுமில்லை.

ஆகவேதான் முதலில் எல்லா மக்களும் படிக்க வேண்டும் என்று கிளம்பிய புரட்சிக்கு, நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம் தான் முன்னோட்டமாக இருந்தது. திராவிடர் இயக்கத்தால் தொடர்ந்து அந்தப் பணி சுயமரியாதை இயக்கத்தால், தந்தை பெரியார் அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு வளர்த்தார்கள். படி' என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

பெரிய எழுத்துப் புராணக்கதைகள்

பெரிய எழுத்து'ப் புராணக்கதைகளை மட்டுமே பார்த்து, தட்டுத் தடுமாறி படித்த அக்காலத்திலே, தந்தை பெரியார் அவர்கள் முதலில் பேச ஆரம்பித் தார்கள். எழுத படிக்க தெரிந்தால் தானே படிப்பார்கள், என்பதால் பல மணி நேரம் ஏன், அய்ந்தரை மணிநேரம் கூட பேசியுள்ளார்கள்! தந்தை பெரியார் அவர்கள் தன் கருத்தினை முதலில் பேச்சு வடிவில் மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள்.

வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் நம்மவர் சில பேர்கள் அக்காலத்தில் அற்புதமான தங்கநிற "பார்க்கர்" பேனாவை வைத்திருப்பார்கள், ஆனால் அதனை வைத்து கையெழுத்துப் போடவா என்றால் இல்லை, கட்டைவிரலைத் தான் காட்டுவார்கள். ஆகவே பார்க்கர் பேனா' கையெழுத்திற்காக இல்லை, தன் அந்தஸ்த்தை காட்டத்தானே தவிர வேறொன்றுமில்லை. கல்வியறிவு இல்லை என்பதே அதற்கு முக்கியக் காரணம்.

மனுதர்மத்தின் முதுகெலும்பை முறித்த தந்தை பெரியார்

அதற்காகத் தான் அய்யா மனுதர்மத்தின் முது கெலும்பை முறித்தார்கள், இந்நாட்டில் மனுதர்மம்  தான் ஆட்சி செய்கிறது என்பதால். மனுதர்மம், வேதம், உபநிஷதங்கள் போன்றவைகளை "எழுதாக் கிளவி" என்று கூறுவார்கள். வாய்வழி மூலம்தான் அவைகளை அறிய முடியும் என்பதால் & தமிழ் புலவர்களை கேட்டால் தெரியும். எழுதிய புத்தகங் களாக அவைகள் கிடையாது என்பது பொருள். அச்சு இயந்திரம் வருவதற்கு முன்பே, சீனத்தில் களி மண்ணிலே எழுதிப் பாதுகாத்தார்கள், அதற்கு மன்னர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு. ஆகவே வசதி படைத்தவர்கள், மேல் தட்டில் இருப்பவர்கள், அதுவும் மனுதர்மம் ஆளும் இந்நாட்டில் உயர் ஜாதியினர் போன்றவர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

அச்சுப்புத்தகம் வந்த பின்னரே அறிவைப் பொது வுடைமையாக்கிய மிகப் பெரிய புரட்சி நிகழ்ந்தது. புத்தகம் வாங்கியவுடன் அனைவரும் படிக்க ஆரம் பித்தார்கள். வேதத்தை படிக்கக் கூடாது என்றார்கள், ஆனால் அதே வேதத்தைப் புத்தக வடிவில் அச்சடித்தப் பின்பு அதனை எவ்வாறு தடுக்க முடியும்?

வேதத்தை மீட்டு வரவே அவதாரங்கள்

கடலில் மறைக்கப்பட்ட வேதத்தை மீட்டு வரவே பத்து அவதாரங்களில் ஒரு அவதாரம் என்று கூறினால், எழுதப்படாத ஒன்றை, வாயால் கூறிய ஒன்றை எப்படிக் கடலில் மறைக்க முடியும் என்று தந்தை பெரியார் அவர்கள் வேடிக்கையாக கேட்பார்கள். அது புத்தகம் இல்லை, பொருளாக இல்லாத ஒலியை எப்படி ஒளிக்க வைக்க  முடியும்?

புதிது புதிதாக கண்டுப்பிடிப்பார்கள், இப்பொழுது அனுமன் ஜெயந்தி?! என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த அனுமன் எவ்வாறு பிறந்தான் என்றுடார் வினிடம் கேட்டால், குரங்கிலிருந்து மனிதன் பிறந் தான் என்று அறிவியல் ரீதியில் கூறுவார். ஆனால் அனுமார் யாரென்றால் வாயுபுத்திரன், "காற்றுக்குப் பிறந்தவன்" என்று அனைத்து புராணங்களிலும் இருக்கிறது. காற்றுக்கு எவ்வாறு பிறப்பது என்பது வேறு கேள்வி.அவ்வாறே வைத்துக் கொண்டாலும் பிறந்த தேதியை எவ்வாறு நிர்ணயம் செய்தார்கள். காற்று எங்கே இருந்து வந்தது, அதற்கு முன் அங்கே இருந்ததா? இல்லை அப்பொழுதுதான் வந்ததா? ஆகவே அறிவை பயன்படுத்தக் கூடாது, என்பதுவே அதன் பொருள்.

புத்தகம் உள்ளத்தை புதுமையாக்குகிறது

ஆகவே புத்தகம் என்பது இருக்கிறதே, அந்த சொல்லே நல்லதொரு சொல், நூல் என்று சொல் வதைவிட புத்தகம் என்றால் நம் உள்ளத்தை அது புதுமையாக்குகிறது, அறியாமையை போக்குகிறது, மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுக்கிறது என்பது தான்.

நல்ல புத்தகத்திற்கு அடையாளமே,

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு     (குறள் 783) என்று அழகாக வள்ளுவர் கூறியுள்ளார். பண்புள்ள வர்களின் நட்பு எப்படி என்றால் நவில்தொறும்' அதாவது ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் பயில் வதை போன்று சுவையானது என்பது.

இப்படிப்பட்ட ஒரு அற்புதமான வாய்ப்பை உருவாக்க தந்தை பெரியார் அவர்கள் புத்தகங்களை நம்மிடம் புரட்சிகரமாக கொண்டுவந்தார். நம் நாட் டில் வழமையாக செக்கு மாட்டு மனப்பான்மையாக போன பாதையிலே போவது, அது பழைமைக்கே புதுமை என்று உண்டாக்கினார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்கள் செய்த புரட்சி இருக்கிறதே, சாதா ரணமானதல்ல & மிகப் பெரியது, காங்கிரசில் இருக் கும்போதே முதல்முறையாக பச்சை அட்டை குடி அரசு' இதழை துவக்கினார்கள். 1925-லே, நம்மில் பலர் பிறக்காத காலகட்டத்தில்.

ஏடுகளின் பெயர்களே  பெரிய புரட்சி' தான்

பெரியார் அவர்கள் தொடங்கிய ஏடுகளின் பெயர் களே   பெரிய புரட்சி' தான், குடி அரசு, பகுத்தறிவு, புரட்சி, ரிவோல்ட் (Revolt), விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் போன்ற பெயர்களில் உள்ள ஏடுகள் உலகத்தில் எங்கும் இருந்திருக்காது.

அதில் வரும் கட்டுரைகள் என்றும் புதிய சிந்த னைகளை உருவாக்கும், அக்கட்டுரைகளை அய்யா அவர்கள் சிறிய வெளியீடுகளாக அவ்வப்போது மக்க ளிடம் கொண்டு வந்தார்கள். கால், அரை, ஒரு அணா, இரண்டு அணா என்று மிகக் குறைந்த அளவிற்கு லாபத்தை எதிர்பார்க்காமல், மிகச் சாதாரணமாக எவ்வித அழகும் இல்லாமல் எளிய முறையில் வெளியிடவே விரும்புவார்கள்.

ஆகவே எளிமையான அடித்தட்டு மக்கள், வசதியற்றவர்களிடம் இப்புத்தகங்கள் பரவ வேண்டும் என்று புத்தகப் புரட்சிக்கு அவர்கள் வித்திட்டார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பே, அய்யா அவர்களுக்கு வசதி இருந்தது. எல்லோரும் பொதுவாழ்க்கைக்கு வந்து தான் பணக்காரர்கள் ஆவார்கள், ஆனால் பணக் காரராக இருந்த தந்தை பெரியார் அவர்கள், தன் சொந்த செலவிலே பொது வாழ்க்கையை நடத்தி னார்கள்.

தனித்தன்மை வாய்ந்தவர் தந்தை பெரியார்

பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் 29 பதவிகளுக்காக வருவார்கள், ஆனால் தான் வகித்த 29 பதவிகளை ஒரே கடுதாசியில், காகிதத்தில் ராஜினாமா செய்கிறேன் என்று எழுதி விட்டு, பொதுவாழ்விற்கு வந்தவர் தான் தந்தை பெரியார் அனைத்திலும் அனைவருக்கும் தனித்தன்மை வாய்ந்தவர் அல்லவா தந்தை பெரியார்?

பத்திரிக்கைகளில் வரும் சின்ன சின்ன கட்டுரை களைக் கூட புத்தகமாக ஆக்கினார்கள், பாதுகாக்கப் பட்டது. அதுபோலவே குடிஅரசு பதிப்பகம், பகுத்தறிவு வெளியீடு, விடுதலை வெளியீடு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, திராவிடர் கழக இயக்க வெளியீடு, பெரியார் ஆவண காப்பக வெளியீடு, பெரியார் பிஞ்சு வெளியீடு, உண்மை விளக்கம் பதிப்பகம் வெளியீடு, பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான பெரியார் உயராய்வு சிந்தனை மய்யம் வெளியீடு என்று வரிசையாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற் கான நூறாண்டு கால செயல்பாடுகள்.

இதே போல் வெளியீடுகளை வெளியிடுபவர்கள் மதவாதிகள், குறிப்பாக பைபிள். திருக்குறள் ஏராள மான மொழிகளில் வந்திருந்தாலும், பைபிள் அள விற்கு பரப்பப்படவில்லை. அதற்கு காரணம் வேதத் தையும், பகவத் கீதையையும், உபநிஷதங்களையும், ஆரிய பண்பாட்டையும் பரப்பிய அளவிற்கு இந்த அறிவு நூலை பரப்ப அவர்கள் தயாராக இல்லை.

சிறு புத்தகங்களை வெளியிட்டார்

ஆனால் திருக்குறளை எட்டணாவிற்கு விற்றார்கள் அய்யா, அதனையும் தாண்டி அச்சகத்தில் வெட்டி மீதப்படும் காகிதங்களையும் சிறு பாக்கெட் சைஸ் புத்தகங்களாக உருமாற்றும் சிந்தனை அவர்களுக்கே உரியது. அவ்வாறு புது புது புத்தகங்களை ஏராளம் அப்புரட்சியின் மூலம் கொண்டுவந்தார்கள்.

பலப் புத்தகங்கள், "பெண் ஏன் அடிமையானாள்?" என்றதொரு புத்தகம், உலகில் எவரும் சிந்தித்திராத பெண்களுக்கான சிந்தனை. பெட்ரண்ட் ரசல் அவர்கள் சிந்தித்தார், ஆனால் பெண்ணியத்தை மட்டுமே அது மய்யமாக கொண்டது. பெண்களின் அடிமைத்தனத் திற்கு காரணமாக எது எது இருந்ததோ, அனைத்தையும் போக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார்!

விதவை திருமணம் எதற்கு? அதன் தேவை ஏன்? என்றும், "மறுமணம் செய்துகொள்ளாதே என் ஜாதி பெருமை போய்விடும், ஆனால் உன் தனிப்பட்ட வாழ்க்கையில் நீ எவ்வாறு வேண்டுமானாலும் இரு" என்று கூறினால் இந்நாட்டில் ஒழுக்கம் எப்படி நிலைக்கும் என்றும் கேட்டவர் தந்தை பெரியார்!

பெண் ஏன் அடிமையானாள்?

இரண்டு கைக்கும் சமபலம் இருக்கிறது, அதைப் போல் ஆண் பெண் இருவருக்கும் சமமாக பலம் வரவேண்டும் என்று கூறினார்கள். பெண்களுக்கான உரிமையை பெண்களே தான் கேட்க வேண்டும். ஏனென்றால் எலிகளுக்கான பாதுகாப்பை பூனை களிடம் கேட்க முடியாதல்லவா?

"பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகம் பிரெஞ்சு, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 50,60 பதிப்புகளைத் தாண்டி பல லட்சம் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இன்றைக்கு இளையத் தலைமுறை பெண்கள் அத னைத் தேடிப் படிக்கின்றனர்.

மாதவிடாய் உடற்கூறுகளின் ஓர் அம்சம்

இப்பொழுது மாதவிடாய் காரணமாகத் தானே அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல வேண் டாம் என்கிறார்கள். ஆண் & பெண் பேதமே வேண் டாம் என்றால், பெண்களுக்குள்ளேயும் கூட மற்றொரு பேதத்தை வைத்திருக்கிறார்கள். 10 வயதுக்குள்ளும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டும் தான் சபரிமலைக்கு போக வேண்டும் என்று கடவுள் தத்து வமாக வைத்திருக்கிறார்கள்.

அதாவது "Age Certificate" வைத்துக் கொண்டுதான் அய்யப்பனிடம் போக வேண்டும் போலிருக்கிறது! காரணம் பெண்களுக்கு மாதவிடாய் "Menstruation", அது அய்யப்பனுக்கு ஆகாது. அக்காலத்தில் அறிவுத் தெளிவில்லாமல் பார்ப்பனர்கள் உட்பட மாதவிடாய் காலத்தில் பெண்களை தெருவில் அமர்த்தி உலக்கையை குறுக்கே போட்டிருப்பார்கள்.

அதாவது பெண்களை எந்தளவிற்கு அசிங்கபடுத்த முடியுமோ, அந்தளவிற்கு செய்வார்கள். தனியே தெரிய வேண்டிய விசயத்தை உலகிற்கே வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள். இன்றைக்கு அவ்வாறில்லை, உச்ச நீதிமன்றம் அது உடற்கூறுகளின் ஓர் அம்சம் என்று, உடல் வியர்வையை போல, கடவுளை காண அது ஒன்றும் அசிங்கமில்லை என்று கூறியுள்ளனர்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner