எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராமநாதபுரம் மாவட்டம்

மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம்

மத்திய அரசு ஒப்புதல்

சென்னை, ஜன.1 ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் மீனவர்கள், தங் களின் மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மீன்பிடி தொழில் மேற்கொள்ள வசதியாக, மூக்கையூரில், 114 கோடி ரூபாய் செலவில், மீன்பிடி துறைமுகம் அமைக்க, மத்திய அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது.

இதில், அலை தடுப்பு சுவர், ஏலம் விடும் கூடம், மீன் உலர் தளம், வலை பின்னும் கூடம் உட்பட, அனைத்து வசதிகளுடன், மீன் பிடி துறைமுகம் அமைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் கோரப்பட்டு, பணிகள், விரைவில் துவங்கும்; செலவில், 50 சதவீதத்தை, மத்திய அரசும்; மீதத்தை, மாநில அரசும் ஏற்கும். இந்த மீன்பிடி துறை முகத்தில், 250 விசைப்படகுகள், 200 நாட்டு படகுகளை, பாதுகாப்பாக நிறுத்தலாம். சுகாதாரமாக கையாள்வதால், ஏற்றுமதி சந்தையில், மீன்களுக்கு அதிக விலை கிடைக்கும்.


பக்தர்களை காப்பாற்றாத “அய்யப்பன்”

பேருந்து விபத்து :

அய்யப்ப பக்தர்கள் 3 பேர் பலி

விழுப்புரம், ஜன.1 சென்னை கோயம்பேடு பாரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 38). இவரும் அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன்(35), பில்லா(37) உள்பட 52 அய்யப்ப பக்தர்கள் சென்னையில் இருந்து பேருந்தில் சபரிமலைக்கு புறப்பட்டனர்.

நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் என்ற இடத்தில் பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சாலையோரம் டயர் பஞ்சராகி லாரி நின்று கொண்டிருந்தது.

பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் லாரி நின்றது பஸ் ஓட்டுநருக்கு சரியாக தெரியவில்லை. லாரியின் பின்பக்கம் பஸ் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

இந்தவிபத்தில் பஸ்சில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள் சங்கர், அய்யப்பன், பில்லா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

பேருந்தில் வந்த தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர்கள் மலையாண்டி, மாரிமுத்து, சென்னை பாரிக்குப்பத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சிவா, சங்கர், ராஜன், ரமேஷ், ஏழுமலை, இளையராஜா, குணசேகரன், அழகர் உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சின்ன சேலம் காவலர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி போக்குவரத்து காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக் குறிச்சி மற்றும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்தில் சேதமடைந்த பேருந்து மற்றும் லாரியை காவலர் அப்புறப்படுத்தினார்கள்.  விபத்து குறித்து சின்னசேலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.


பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க

புதிய விதிமுறைகள்

சென்னை, ஜன.1 சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அசோக் பாபு சென்னை சாஸ்திரிபவனில் உள்ள பத்திரிகையாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பல்வேறு ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.  அதன்படி, முன்பு 1989-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் பிறந்த தேதி சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த விதிமுறையை தளர்த்தி உள்ளோம்.

பிறந்த தேதி சான்றிதழ் வைத்திருந்தால் அவர்கள் அதை சமர்ப்பிக்கலாம். அப்படி இல்லாதபட்சத்தில் பள்ளி சான்றிதழ், மெட்ரிகுலேசன் சான்றிதழ், ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பொது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பத்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல், விண்ணப்பதாரர் தாய் அல்லது தந்தையரிடம் வளர்ந்து இருக்கலாம். அவர்கள் யாராவது ஒருவரின் பெயரை குறிப்பிட விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறினால் அவர்கள் அந்த பெயரை குறிப்பிட தேவையில்லை. ஆனால் முன்பெல்லாம் தாய், தந்தை இருவரின் பெயரையும் கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருந்தது.

விண்ணப்பதாரர் பின் இணைப்புகளாக இணைக்கும் ஆவணங்களில் நோட்டரி பப்ளிக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் கையெழுத்து வாங்கி வர வேண்டும். ஆனால் தற்போது விண்ணப்பதாரர்களே அந்த பின் இணைப்புகளில் சுய கையெழுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி நோட்டரி பப்ளிக், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் கையெழுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

திருமண சான்றிதழ் என்பது முன்பு கண்டிப்பாக இணைக்க வேண்டும். தற்போது அதை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆதரவற்றோர் குழந்தைகள் பாஸ்போர்ட் விண்ணப்பித்தால் அவர்கள் பிறந்த தேதி குறித்து அந்த காப்பகத்தின் இருக்கும் மேலதிகாரி இந்த தேதியில் தான் அவர் பிறந்தார் என்று உறுதி செய்தால் நாங்கள் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வோம்.

மணவாழ்க்கைக்கு வெளியே பிறந்த குழந்தைகள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. தற்போது அவர்களுக்கு எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. பின் இணைப்பு ‘ஜி’-யில் அவர்கள் கையெழுத் திட்டு வழங்கினால் போதும்.

இதேபோல், அரசு வேலையில் இருப்பவர்கள் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வாங்கி அதை வழங்க வேண்டும். ஆனால் அவர் இனிமேல் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அரசிடம் விண்ணப்பிப்பது தொடர்பாக தெரிவித்துவிட்டேன் என்று எழுதி கொடுத்தால் போதும். இதுபோல் பல்வேறு விதமான புதிய விதிமுறைகள் செய்யப்பட்டுள்ளன.

ஆன்-லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று பலர் கூறுகிறார்கள். அதை எளிதாக்கும் வகையில், அரசு இ--சேவை மய்யத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கும் வழி ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் பலருக்கு அது தெரிவதில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner