எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை அய்.அய்.டி., உருவாக்கிய குடிநீர் தொழில்நுட்பங்கள்

நீரின் தரத்தை எப்படி தெரிந்துகொள்வது? நம்மூரில் நீரின் நிறம், சுவை மற்றும் வாடையை வைத்துத்தான் அதை குடிக்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறோம். ஆனால், இதையும் மீறி நீரில் பல கிருமிகள், நச்சுத் தன்மைகள் மறைந்திருக்கலாம்.

இதை எளிதில் கண்டுபிடிக்க, சென்னை, அய்.அய்.டி.,யைச் சேர்ந்த பேராசிரியை லிகி பிலிப் மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர்களான ஆர்.இளங்கோவன், டி.குமரன் ஆகியோர், இரண்டு எளிய சோதனைப் பெட்டிகளை உருவாக்கியுள்ளனர்.   ஒரு சோதனைப் பெட்டி, நீரிலுள்ள அமிலத் தன்மை முதல், கிருமிகள் வரையிலான, 14 வகை பொருட்களை கண்டறிய உதவும்.

இன்னொரு சோதனைப் பெட்டி, 24 வகை பொருட்கள் வரை கண்டறிந்துவிடும். ஏற்கெனவே, லிகி பிலிப் குழுவினர் இதை, ‘யுனிசெப்’பின் உதவியுடன், கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள சில ஊர்களில் மக்களுக்கு அளித்து பயிற்சி தந்துள்ளனர்.

‘நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணித்ததால், அப்பகுதியில் பொது சுகாதாரம் மேம்படுவதை நேரில் கண்டோம்‘ என்கிறார் லிகி பிலிப்.

இத் தொழில்நுட்பத்தை, விருப்பமுள்ள தொழில்முனைவோர் பயன்படுத்தி, உற்பத்தி செய்து, நாட்டின் பல பகுதிகளில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு மற்றும் குறுந்தொழில் சேவை அமைப்பான, ‘டான்ஸ்டியா’, அய்.அய்.டி.,யுடன் புரிந்துணர்வு ஒப் பந்தம் செய்துள்ளது.இதனால்தான், இதற்கான காப்புரிமையை அய்.அய்.டி., பதிவு செய்யவில்லை! நீரின் தரத்தை சோதிப்பதோடு, நீரை தூய்மையாக வடிகட்ட ஒரு புதுமையான வடிகட்டியை, கனடாவின், அய்.டி.ஆர்.சி., என்ற அமைப்பின் நல்கையுடன் சென்னை, அய்.அய்.டி., ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த வடிகட்டியை வீட்டு குழாயுடன் இணைத்துவிட்டால், நீரின் கலங்கல் தன்மை முதல், நுண்ணுயிரிகள், கசடுகள் போன்றவற்றை நீக்கி, குடிக்க உகந்த நீராக மாற்றித் தரும். தூய நீர் கிடைக்காத கிராமப் பகுதி மக்களுக்கு, அய்.அய்.டி., மாணவர்களுக்கு  வடிகட்டி நிச்சயம் உதவும்.

ஒளிர்ந்தது செயற்கை சூரியன்

ஹைட்ரஜனை உருவாக்கும் புதிய வழிகளை கண்டுபிடிப்பதற்கும், செயற்கையாக சூரியனை பூமியில் உருவாக்குவதற்கும் தொடர்பு உண்டா? உண்டு. எரி பொருட்கள் உண்டாக்கும் மாசுகளால் புவி வெப்ப
மாகிறது.

இதை தடுக்க, மாசு ஏதுமின்றி எரியும் எரி பொருட்களை விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், ஹைட்ரஜனை உருவாக்க முடியுமா என்று ஜெர்மனியின் விண்வெளி ஆய்வு மய்யமான, டி.எல்.ஆர்., ஆராய்ந்து வருகிறது.

இதற்கென, ‘உலகின் மிகப் பெரிய செயற்கை சூரியனை’ அண்மையில் அவர்கள் ஒளிர விட்டனர். எப்படி? திரைப்படப் பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஜெனான் விளக்குகளில், 149 விளக்குகளை நெருக்கமாக வைத்து, அவற்றிலிருந்து வரும் ஒளியை, 20க்கு, 20 என்ற அளவில் குவியச் செய்து ஹைட்ரஜனை உருவாக்க, டி.எல்.ஆர்., விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

அந்த விளக்குகள், குறுகிய குவியப் புள்ளியில் செலுத்தும் ஒளி, பூமிக்கு பலகீனப்பட்டு வந்து சேரும் சூரிய ஒளியின் வெப்பத்தைவிட, 10 ஆயிரம் மடங்கு அதிக வெப்பத்தை ஏற்படுத்தும்! அதாவது, 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம்.

ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்க புதிய வழிகளை முயற்சி செய்ய, செயற்கை சூரிய வெப்பம் அவசியம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த ஆராய்ச்சியில் புதுமை ஏதும் விளைந் தால் அது, உலக எரிபொருள் பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்பது டி.எல்.ஆர்., விஞ்ஞானிகளின் நம்பிக்கை.


மேசையை தொடு திரையாக்கும் விளக்கு

தட்டையான எந்தப் பரப்பையும் தொடுதிரையாக மாற்ற வேண்டுமா? வந்து விட்டது, ‘லேம்பிக்ஸ்.’ இதை ‘ஸ்மார்ட் லேம்ப்’ என்று ஊடகங்கள் அழைத்தாலும், உண்மையில் இது ஒரு ‘புரஜக்டர்’ வகையைச் சேர்ந்தது தான்.

கணினி அல்லது செல்பேசியை ‘வைபை’ மூலம் லேப்பிக்ஸ் சாதனத்தை இணைத்தால் போதும். நீங்கள் விரும்பும் சம தளத்தில் கணினி திரை அல்லது மொபைல் திரையை, ‘புரஜக்ட்’ செய்யும்.

இது சற்று கூடுதல் பரப்பளவைத் தருவதோடு, சுதந்திரத்தையும் தருகிறது. பார்க்க சாதாரண மேசை விளக்கு போல இருக்கும் லேம்பிக்சுக்குள், ‘ராஸ்பெர்ரி பை’ கணினியும், 8 மெகா பிக்செல் கேமராவும், 400 லுமென் பிரகாசமுள்ள புரஜக்டரும் உள்ளன.

மேசைப் பரப்பில் அது காட்டும் திரையை நீங்கள் தொடு திரைபோல பயன்படுத்தி இயக்கலாம்.

வடிவமைப்பாளர்களுக்கும், பல இடங்களில் இருந்து கொண்டு செயல்படும் பணியாளர்களுக்கும் லேம்பிக்ஸ் உதவிகரமாக இருக்கும். அசல் பொருட்கள், ஆவணங் களை லேம்பிக்சுக்கு அடியில் வைத்தால், அதை அப்படியே பிரதியெடுத்து, கணினி கோப்புகளாக மாற்றவும் லேம்பிக்சால் முடியும்.

‘ஆக்மென்டெட் ரியாலிட்டி’ எனப்படும், நிஜ உலகமும் எண்வய உலகமும் கலந்த, ‘கலவை மெய்நிகர்’ தொழில் நுட்பத்தின் துவக்கம் தான் லேம்பிக்ஸ் போன்ற கருவிகள் என்று வல்லுநர்கள் மெச்சுகின்றனர்.


செல்பேசி பிரியர்களுக்கு
தரை விளக்கு    

நெதர்லாந்திலுள்ள, போடேகிரேவன் என்ற சிறுநகரில், நடைபாதைகளில், ஸ்மார்ட்போன் திரையை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே நடந்து செல்வோர் அதிகரித்துள்ளனர்.

பாதசாரிகள் கட்செவி, முகநூல் நிலைத் தகவல்களை வாசிக்கும் சுவார சியத்தில், சாலையை கடந்தால் விபத்துகள் நடக்கும் என்பதால், அந்நகர கவுன்சில் ஒரு புதிய உத்தியை பரிசோதித்து வருகிறது. கையிலுள்ள செல்பேசி திரையை குனிந்து பார்ப்பவர்கள், சாலை சமிக்ஞை விளக்குகளை நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள்.எனவே, நடைபாதையின் மேலேயே பச்சை, சிவப்பு, ஆரஞ்சு விளக்குகளை நீள வடிவில் பதித்துள்ளது போடே கிரேவன் நகராட்சி. இதே போல ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், ஜெர்மனியின் மியூனிச் ஆகிய நகர்களிலும் பரிசோதனைகள் நடக்கின்றன.

எனவே, விரைவில் உலகின் பல நகர்களில், நடைபாதையில் சமிக்ஞை விளக்குகள் முளைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தகவல் துகள்கள்

பீ ஒருவரது ரத்த வகையை அறிந்துகொள்ள ஆய்வுக்கூடத்தில் தான் சோதனை செய்ய வேண்டும். ஆனால், சீனாவை சேர்ந்த ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், காகிதப் பட்டையை வைத்தே எல்லா ரத்த வகைகளையும், 30 வினாடிகளில் அறிந்துகொள்ளும் முறையை உருவாக்கியுள்ளனர்.

பீ வயதானவர்கள் நிலை தவறி கீழே விழுவதால் எலும்பு முறிவு முதல், பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, வயதானோர் கீழே விழுவதை மூன்று வாரங்களுக்கு முன்பே கணித்து சொல்லும் முறையை, அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைக்கழக மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர்.

பீ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களின் உதட்டு அசைவுகளை படித்து புரிந்து கொள்ளும் திறனை ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு தந்து வெற்றி கண்டுள்ளனர். இது, மனிதர்களை விட துல்லியமாக பிறரது உதட்டசைவுகளை படித்து விடுகிறது. பி.பி.சி., செய்தி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகளை வைத்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அந்த மென்பொருளுக்கு பயிற்சி தந்துள்ளனர்.


பீ ஆஸ்திரேலிய சிலந்தி வகை ஒன்றின் விஷம், 15 நிமிடத்தில் மனிதனை கொல்லும் சக்தி கொண்டது. ஆனால், அதே சிலந்தியின் விஷத்தில் உள்ள ஒரு பொருள், பக்கவாதம் தாக்கப்பட்ட மனித மூளையில் செல்கள் அழிந்துவிடாமல் காக்கும் திறன் கொண்டது என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பீ ரோபோக்கள் மனிதர்களுடன் பழகும்போது, மனிதர்கள் சொல்வது புரியாமல் போக வாய்ப்புகள் அதிகம். இந்த குழப்பத்தை தவிர்த்து, மனிதர்களிடம் சரியான கேள்விகள் கேட்டு, விளக்கம் பெறும் திறனை ரோபோக்களுக்கு அளித்துள்ளனர், அமெரிக்கா விலுள்ள பிரவுன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner