எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உயிரிதொழில்நுட்பத் தேர்வில் சென்னை மாணவர்  சாதனை!

சென்னை, மார்ச் 30 ‘கேட் 17’ எனப்படும் பொறியியல் பட்டதாரி தகுதி தேர்வில், 2017-ஆம் ஆண்டில் உயிரி தொழில் நுட்பத்தில் இந்திய அளவில் இரண்டாவது இடம் பிடித்து சென்னை மாணவர் சாதனை படைத்துள்ளார்.

கேட்ஃபோரத்தில் படித்த மாணவர்கள் இந்த தேர்வில் அபார வெற்றி பெற்றுள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  மோஹித் கோயல் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சென்னை மண்டலத்தில், உயிரி தொழில்நுட்ப பாடத்தில் அகில இந்திய அளவில் அமயா டிராவிட் இரண்டாவது இடத்தையும், மின்னணு மற்றும் தொடர்பியலில்  அகில இந்திய அளவில் அனுஷா போதாபதி  41-ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

முன்னணி இடங்களை பிடித்தவர்களுக்கு கேட்ஃபோரம் கல்வி உதவித்தொகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, இந்த கல்வி நிலையத்தில் படித்து முதல் 100 இடங்களில் இடம் பிடித்துள்ள நிலையில், இந்திய அறிவியல் பயிலகம் அல்லது இந்திய தொழில்நுட்ப பயிலகம் ஆகியவற்றில் எம்.டெக். படிக்கும் மாணவர்களுக்கு முதல் ஆண்டு கல்வி கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில்

50 சதவிகித இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மார்ச் 30 கடந்த 2000 -ஆம் ஆண்டுக்கு பின்பு, மருத்துவ பட்டமேற்படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனவா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.காமராஜ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற் படிப்பு களுக்கான இடங்களில், 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், தனியார் கல்லூரிகள் அவ்வாறு இடங்களை ஒதுக்கீடு செய்வதில்லை. ஆகையால், அந்த ஒதுக்கீட்டு இடங்களை பெற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு: கடந்த 2000 -ஆம் ஆண்டு முதல் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து மாநில அரசு பெற்ற மருத்துவப் பட்ட மேற்படிப்பு இடங்கள் எவ்வளவு, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் எத்தனை இடங்கள் உள்ளன, அவற்றில் எத்தனை இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற்றுள்ளது என்பவை குறித்து ஏப்ரல் 3-க்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும்.

அதேபோன்று, ஆண்டுதோறும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பாக கண்காணிக்கப்படுகிறதா, அவ்வாறு இடங்களை ஒதுக்காத தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, இல்லை என்றால் அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 3 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner