எழுத்துரு அளவு Larger Font Smaller Font


குமாரசாமியிடம் விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மார்ச் 30 கர்நாடகாவில், சட்ட விரோதமாக இரும்பு தாது சுரங்கம் அமைக்க அனுமதி அளித்ததாக, அம்மாநில முன்னாள் முதல்வர்கள், கிருஷ்ணா தரம் சிங் மற்றும் குமாரசாமிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா முதல்வராக உள்ளார். பெரும் தொழில் அதிபர்கள் பலரிடம் ஆதாயம் பெற்று, வனத்துறைக்கு சொந்தமான ஏக்கர் கணக்கிலான நிலத்தில், இரும்பு தாது சுரங்கம் அமைக்க, மாநில அரசின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதில், அப்போதைய காங்கிரஸ் முதல்வர்கள், எஸ்.எம்.கிருஷ்ணா, தரம் சிங் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி உள்ளிட்டோர் முக்கிய பங்காற்றியதாகவும், அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள், பி.சி.கோஷ் மற்றும் ஆர்.எப்.நாரிமன் அடங்கிய உச்சநீதிமன்றம் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

வனத்துறைக்கு சொந்தமான ஏக்கர் கணக்கிலான நில ஆவணங்கள் மாற்றப்பட்டு, அந்த நிலத்தில், இரும்பு தாது சுரங்கம் அமைக்க சட்ட விரோதமான முறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில், முன்னாள் முதல்வர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, முன்னாள் முதல்வர்கள் தரம் சிங் மற்றும் குமாரசாமியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. அதே நேரத்தில், மற்றொரு முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த ஏற்கனவே அமலில் உள்ள தடை தொடரும். இந்த வழக்கு தொடர்பாக, உச்சநீதிமன்றம் உட்பட வேறு எந்த நீதிமன்றமும், எவ்வித உத்தரவும் பிறப்பிக்க தடை விதிக்கப்படுகிறது.முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரசிலிருந்து விலகி, சமீபத்தில் பா.ஜ.க.,வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகா அமைதி ஒப்பந்தத்தை முழுவதுமாக வெளியிடாதது ஏன்?
சீதாராம் யெச்சூரி கேள்வி

புதுடில்லி, மார்ச் 30 நாகா அமைதி ஒப்பந்தத்தை முழுவதுமாக மத்திய அரசு வெளியிடாதது ஏன்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பி உள்ளார்.

நாகாலாந்தில் நிலவி வந்த கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசுக்கும், நாகாலாந்து தேசிய சமத்துவ கவுன்சில்(ஐஎம்) குழு இடையே கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்படுகின்றது. ஒப்பந்தம் குறித்த முழுவிவரத்தையும் அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது டிவிட்டர் பக்கத்தில், அனைத்து நாகா பிராந்தியங்களையும் ஒன்றிணைப்பதாகத்தான் ஒப்பந்தத்தில்  பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். ஆனால் நாங்கள் அதனை சரிபார்க்கவில்லை  என்று  என்எஸ்சிஎன் (அய்எம்) தலைவர் துயிங்கலங் முய்வா கூறியுள்ளார். இரண்டு ஆண்டுகளாகியும் அமைதி ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இதுவரை வெளியிடப்படாதது ஏன்? உண்மையை வெளிகொணரும் வகையில் பிரதமர் ஏன் அந்த அறிக்கையை வெளியிடக்கூடாது? என பதிவிட்டுள்ளார்.

பழைய  நோட்டுகள் ரூ.8 ஆயிரம் கோடி தேக்கம் : பயிர்க்கடன்கள் பாதிப்பு

புதுடெல்லி, மார்ச் 30 மாநிலங்களவையின் ஜீரோ நேரத்தில்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசியதாவது:

உயர்மதிப்பு கரன்சி தடை அறிவிப்புக்குப்பின் பழைய கரன்சிகளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக் கொள்ள கடந்தாண்டு நவம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டது. அதன்பின் கூட்டுறவு வங்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மொத்தம் 371 வங்கிகளில் ரூ.44 ஆயிரம் கோடி டெபாசிட் பெறப்பட்டது. தடைக்குப்பின் கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி நிலவரப்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.8 ஆயிரம் கோடி பழைய நோட்டுகள் இருப்பு இருந்தது. அவற்றை கரூவூலத்தில் மாற்ற முடியாமல் உள்ளது. மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ.2,772 கோடி உள்ளது. இதனால் மத்திய கூட்டுறவு வங்கிகள் பெரும் பாதிப்படைந்துள்ளது. விவசாயிகளால் பயிர்க் கடன்கள் பெற முடியவில்லை. இந்த பணத்தை கரூவூலத்தில் வைப்புத் தொகையாக வைக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமர், நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.

இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, இந்த விவகாரம் நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner