எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகம் போற்றும் முத்தமிழ் அறிஞர்

இன்னுயிர் பிரியும் இறுதி நேரம்

தாம் பெற்ற மக்கள் தவிக்கலாகாது

தம் தொண்டர்கள் முகம் வாடலாகாது

 

இதனால் அன்றோ உடல் நலம் குன்றியும்

இன்னுயிர் பிரிய பலநாட்கள் ஆனதோ?

தந்தை பெரியார் தமிழகத்திற்கு ஈந்த

தாயுள்ளம் கொண்ட தமிழ்மகனே !

 

அண்ணா அவர்கள் இரவல் தந்த

இதயத்தை கொடுப்பதில் என்ன போராட்டம்?

தம்பி நீயோ இறுதியில் வென்றாய்!

அனைவரின் இதயத்திலும் நீக்கமற நின்றாய்

 

கொடுத்த இதயத்தை வாங்க அண்ணா மறுத்ததால்

தந்தை பெரியாரிடம் முறையிடத் தயங்கி

பெரியாரின் தோழர் காமராசரைத் தூதுவிட்டாய்!

தந்தையின் சமரசத்தால் சம்மதித்தார் அண்ணா!

 

முடிவினில் அண்ணா அழைத்துக் கொண்டார்.

உங்கள் கடைசி ஆசை நிறைவேற வெற்றி கொண்டாய்.

மேதினியில் செய்த சேவை மெச்சி அவர் அருகில்

இளைப்பாற ஆறு அடி நிலம் பெற்றாய்!

 

நீங்கள் மறைந்த சோகத்தில் மூழ்கி நின்றோம்! ஆனால்

உங்கள் இறுதி ஆசைக்கு இடையூறு கண்டு

நாங்கள் கண்ட சோதனையும் வேதனையும்

அய்யகோ ! இப்பாரினிலே யாரும் பார்த்ததுண்டோ!

 

அண்ணாவின் அருகினிலே இடம் உறுதி

என்ற நற்செய்தி கேட்டு மகிழ்வுற்றோம்!

துன்பத்திலும் நாங்கள் இன்பம் காண

நீங்கள் செய்த போராட்டம் தானா இது!

 

அன்று இரவல் பெற்ற இதயத்தை கொடுத்து

உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தாய்

இன்று வாடி நின்ற எங்களின்

சொல்லொனா துயர் துடைத்தாய்

 

உயிர் போனாலும் உன் உயிரினும் மேலான

உடன் பிறப்புகளின் உயர்வுக்காக ஒய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ

ஓய்வுக் கொண்டிருக்கிறான் கடற்கரையில்!

 

தொண்டர்கள் அனைவரும் தூண்போல நின்று

விட்டுச் சென்ற பணியினை முடிப்போம்

உலகம் எல்லாம் வியப்புடன் நோக்கும்

பெரியார் உலகை விரைவில் படைப்போம்!

 

- பேராசிரியர் செ. வேலுசாமி

துணை வேந்தர் பெரியார் மணியம்மை அறிவியல்

மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

வல்லம், தஞ்சாவூர் -613403.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner