எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.26 தமிழக அரசு கட்டடங்களில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்த நிறுவனம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாநில எரிசக்தி முகமை திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளில் ஒன்றான சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதில் வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தொடர்பான விழிப்புணர்வை மாநில எரிசக்தி முகமை நிறுவனமான டெடா மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகளில் இத்தகைய மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அனைத்து அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் கட்டடங்களில் ரூ. 250 கோடி செலவில் மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைத்து அதன் மூலம் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநில எரிசக்தி முகமை அதிகாரிகள் கூறியது: எரிசக்தி முகமை மூலம், தமிழக அரசு கட்டடங்களிலும், சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதாவது 1 யூனிட் சூரிய சக்தி மின்சாரத்துக்கு அதிகபட்சமாக ரூ. 4.79 விலையை தரும் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர் விவரம்: பதிவேற்ற உத்தரவு

சென்னை, ஆக.26 தமிழகம் முழுவதும் அரசு, அரசுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆக.31க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் விவரங்களைப் பதிவு செய்ய தமிழக அரசின் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதள (“எமிஸ்’’) பதிவேற்றத்தை எந்த ஒரு மாணவரும் விடுதல் இன்றியும், இரட்டிப்பு பதிவு இன்றியும் முடிக்க வேண்டும். ஏதேனும் விடுதல் இருப்பில் அதை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து வட்டார வள மய்ய அலுவலர்கள் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் விவரங்கள் சரியாக உள்ளதாக என ஆசிரியர்களின் விவரங்களை நேரில் எடுத்து வரக்கூறி ஆசிரியர் பயிற்றுநர் உதவியுடன் சரிபார்க்க வேண்டும்.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வரிசை எண் எமிஸ் மூலம் எடுக்க இருப்பதால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் விவரம் கணினி ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைக் கொண்டு துல்லியமாக சரிபார்த்து மாற்றங்கள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும்.

பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு குரூப் கோடு சரிபார்க்க வேண்டும். இந்தப் பணிகள் அனைத்தும் ஆக.31க்குள் சரிபார்த்து முடிக்க வேண்டும்.

ஆசிரியரின் முழு விவரம் புதிதாக பதிவேற்றம் செய்யவோ, ஏற்கெனவே பதிவேற்றம் செய்த ஆசிரியரை நீக்கவோ முடியாது. எனவே ஏற்கெனவே உள்ள ஆசிரியர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேட்டூருக்கு நீர்வரத்து  20,742 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர், ஆக.26  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை நொடிக்கு 20,742 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு உபரிநீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாகச் சரிந்தது. இந்த நிலையில், தற்போது கர்நாடகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 20,742 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 3.47 டி.எம்.சி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner