எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்லம், ஆக. 26 கேரளா மழைவெள்ளத்தில் இருந்து மீள்வதற்காக உலகமே உதவிக்கரங்களை நீட்டிக்கொண்டு இருக்கும் போது கேரளாவில் உதவிக்கு வந்தவர்களை இழிவு படுத்திய உண்மையை சிஎன்என் என்ற செய்தி நிறுவனம் சான்றுகளோடு வெளியிட்டுள்ளது.

கேரளாவில் கடுமையான மழைவெள்ளம் ஏற்பட்டது, முக்கியமாக மத்திய கேரள மாவட்டங்கள் முழுவதுமே தண்ணீரில் மூழ்கிவிட்டன. அடுக்குமாடி வீடுகளில் 2 மாடிகள் வரை தண்ணீர் புகுந்து விட்டது.  வீடு அலுவலகம் உட்பட வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற அரசின் எந்த ஓர் அறிவிப்பிற்கும் காத்திராமல் மீனவர்கள் தாங்களாகவே சிறு படகுகள் மற்றும் துடுப்பு படகுகளை எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதி மக்களை மீட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு மாநில அரசு அளித்த உதவிதொகையை வாங்காமல் அந்த தொகையை அப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி தங்களின் மனிதாபிமானத்தை காட்டியுள்ளனர்.

கேரளாவின் உண்மையான வீரர்கள் என்று அவர்களை கேரளா மட்டுமல்லாது பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.

ஆனால் அவர்கள் வெள்ளமீட்புப் பணியில் ஈடுபட்ட போது சில பார்ப்பனக் குடும்பங்களால் பெரும் அவமானப்படுத்தப்பட்டனர். இதுதொடர்பாக சி.என்.என் நேரடி கள ஆய்வில் இறங்கியுள்ளது,

ஜார்ஜ் மாரின் என்பவர் 60-க்கும் மேற்பட்ட குடும்பங் களை பத்திரமாக மீட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பிறகு கொல்லத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பினார். அவர் கூறியதாவது, வெள்ளத்தில் சிக்கித்தவித்த 3 குடும்பங்களை எனது படகில் ஏற்றி முகாமிற்கு கொண்டுவந்தேன், பிறகு செல்லும் போது ஒரு பார்ப்பனக் குடும்பம் 3 மாடியில் என்னை உதவிக்கு அழைத்தது. நான் அங்கு சென்றதும் முதலில் எனது பெயரைக்கேட்டனர். நான் என் பெயரைக் கூறியவுடன் நீ கிறிஸ்தவன் என்று கூறினர்.

மேலும் எனது படகில் ஏற மறுத்தனர். அதில் இருந்த முதியவர் ஒருவர் என்னை நீ தொடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு எனது படகில் அவரே தடுமாறி ஏறிக் கொண்டார்.

அதன் பிறகு அருகில் உள்ள கடை வளாகத்தில் முதல் மாடியில் நின்றுகொண்டிருந்தவர்களை படகில் ஏற்றி கொண்டு முகாமிற்கு வந்துவிட்டேன், மீண்டும் செல்லும் போது முதலில் எனது படகில் ஏற மறுத்தவர்கள் என்னை அழைத்தனர். நான் அவர்கள் அருகில் சென்றதும் என்னைப் பார்த்துவிட்டு ஓ நீயா யாராவது இந்துப் படகுக்காரர்கள் இருந்தால் அனுப்பு என்று

கூறிவிட்டனர்.

இது எல்லாம் நாங்கள் எப்போதும் பார்ப்பது தான் பார்ப்பனர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற நேரத்திலும் அவர்கள் இப்படி நடந்துகொள்வது வேதனை அளிக்கிறது என்றார்.

மேலும் அவர் கூறும் போது, கடலில் படகு செலுத்துவது எளிதானது ஆனால் நகருக்குள் படகு செலுத்துவது மிகவும் கடினமானது, நாங்கள் காப்பாற்றப்போகும் உயிர் களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற் காக மிகவும் கவனமாக இருந்தோம். நாங்களும்  நண்பர்களும் சேர்ந்து 4 நாளில் 200க்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியுள்ளோம். எனது படகு முற்றிலும் சேதமடைந்து விட்டது இருப்பினும் நான் அதற்காக கவலைப்படவில்லை.

அருண் மைக்கேல் என்ற மீனவர் கூறும் போது, கடந்த 13 ஆம் தேதி முதலே கேரளத்தில் கடுமையான வெள்ளம் என்ற செய்தி ஓடிக்கொண்டே இருந்தது, என்னால் தூங்கமுடியவில்லை, காரணம் என்னிடம் படகு உள்ளது அந்தப்படகில் மக்களை கொண்டு சென்று வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியும் ஆனால் நான் வீட்டிற்குள் உட்கார்ந்து இருக்கிறேன், இதனால் நாம் உடனடியாக படகை எப்படி கொண்டுசெல்லாம் என்று திட்டமிட்டுக் கொண்டு இருந்த போது என்னைப்போன்றே எங்களது மீனவர்களும்  உதவிசெய்ய காத்திருந்தனர். உடனடியாக மீன்களைக் கொண்டு செல்லும் லாரியில் படகுகளை ஏற்றிக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் இறங்கினோம். பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறையினரும் எங்களுக்கு முழுமையாக உதவிகளைச்செய்தனர்.

நாங்களும் எங்களுடன் வந்தவர்களும் 600 குடும்பங் களைக் காப்பாற்றினோம் அதில் சில முதியவர்கள் படகில் ஏறமுடியாமல் சிரமப்பட்டனர். அவர்களை எங்கள் முதுகில் சுமந்து கொண்டு படகிற்கு கொண்டுசென்றோம்.  நாங்கள் திரும்ப வரும்போது அனைவருமே கைகூப்பி வணங்கி எங்களை வழியனுப்பி வைத்தனர். இருப்பினும் ஒரு சில நிகழ்வுகள் எங்களைக் காயப்படுத்திவிட்டது,

படகில் ஏறாமல் தவித்த ஒருவரை கைநீட்டி ஏற உதவி செய்த போது அவர் என்னைத்திட்டிவிட்டார். நீ கீழ்ஜாதி மீன்பிடிக்கும் ஆள், என்னை எப்படி தொட முயலலாம் என்று அனைவருக்கும் முன்பாக

பேசிவிட்டார். முன்பின் தெரியாத நாய்கள் கூட எங்கள் படகில் ஏறி எங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக எங்களை நாவால் வருடின. அது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் மனிதர்கள் எங்களை கீழ்ஜாதி என்று கூறி ஏசியது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

சிலர் எங்கள் படகில் ஏற மறுத்து வெளிப்படையாக நாங்கள் பார்ப்பனர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள், முடிந்தால் வேறு யாராவது இந்து ஜாதிக்காரர்கள் இருந்தால் அனுப்பு இல்லையென்றால் நாங்கள் இங்கேயே இருந்துவிடுகிறோம் என்றும் கூறினர்.

ஒரு வீட்டில் மாடியில் சில பார்ப்பனர்கள் இருந்தனர் அவர்கள் எங்கள் படகில் ஏற மறுத்தனர். நாங்கள் தற்செயலாக பாதி மூழ்கி இருந்த வீட்டின் முதல்மாடியைப் பார்த்த போது ஒரு பெண் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். உடனடியாக நானும் எனது நண்பர்களும் நீரில் நீந்திச்சென்று கதவை உடைத்து அந்தப்பெண்ணை வெளியேகொண்டுவந்தோம் பிறகு தான் தெரிந்தது அந்தப்பெண் மனநோயாளி என்றும் அவரை விட்டுவிட்டு அனைவரும் வீட்டின் மாடிக்குச் சென்றுவிட்டனர். மேலும் அவர்கள் எங்கள் படகில் ஏறவும் மறுத்துள்ளனர். சில மணிநேரம் நாங்கள் தாமதமாக வந்திருந்தால் அந்த வீட்டின் முதல்மாடி நீரில் மூழ்கி யிருக்கும் அந்தப்பெண் மரணமடைந்திருப்பார் என்று கலங்கிய கண்களோடு கூறினார்.

படகுகள் நுழைய முடியாத பகுதியில் பல தண்ணீர்  கேன்களை ஒன்றிணைத்து அதில் மிதந்துசென்று குழந்தை களையும், மக்களையும் காப்பாற்றினோம் என்று கூறினார். அரசு படகைக்கொண்டு வந்து மீட்ட மீனவர்களுக்கு தலா ரூ 3000 வழங்கப்படும் என அறிவித்தது, ஆனால் அதை அவர்கள் வாங்க மறுத்து மழை நிவாரண நிதிக்கு திருப்பிக் கொண்டுத்துவிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட படகிற்கும் இழப்பீடு பெற மறுத்துவிட்டனர்.

கேரள அரசு விடுத்துள்ள அறிக்கையில் 3000-த் திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்புப்பணியில் ஈடு பட்டனர். சுமார் அதே அளவு படகுகளும் மீள் பணியில் ஈடுபட்டன. நிலச்சரிவு மற்றும் மழைவெள்ளத்தால் 340பேர் பாலியாகியுள்ளனர். மீனவர்கள் மட்டும் இல்லை யென்றால் இந்த உயிரழந்தேர் எண்ணிக்கை ஆயிரத் திற்கும் மேல் சென்றிருக்கும் என்று கூறியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner