சென்னை, ஆக.28 தமிழக அரசின் ஆன்லைன் பத்திரப் பதிவுக்கான புதிய சேவையில் ஆங்கில மொழியையும் இணைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் பிரகாஷ்ராஜ் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு கடந்த 2017 -ஆம் ஆண்டு ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை அறிமுகப் படுத்தியது. இந்த சேவையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பத்திரப்பதிவு செய்யும் வசதி இருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டு அந்த இணையதளம் மேம்படுத்தப்பட்டு ஸ்டார் 6.7 என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழில் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய முடிகிறது.
இதனால் சென்னையில் வசிக்கும் தமிழ் தெரியாத பிற மாநிலத்தவர்கள் பத்திரப்பதிவின்போது பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்’ எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 30 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி, ஆக.28 தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் திங்கள்கிழமை இரவு கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 1 ஆவது அலகில் கொதிகலனுக்கு நிலக்கரி கொண்டுசெல்லும் கன்வேயர் பெல்ட் திடீரென நேற்று இரவு அறுந்து விழுந்தது. இதனால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஏற்கெனவே, 5ஆவது அலகு பராமரிப்புப் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2 அலகுகள் இயங்காததால் திங்கள் கிழமை இரவு நிலவரப்படி ஏறத்தாழ 600 மெகாவாட் வரை மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 1 ஆவது அலகில் கன்வேயர் பெல்ட் பகுதியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
காயமடைந்த 5 பேரிடம் விசாரணை
தூத்துக்குடி, ஆக.28 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரிடம் நேற்று விசாரணை மேற் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற இடங்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என இரண்டு கட்டங்களாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக கடற்கரை சாலையில் உள்ள ஆணையத்தின் முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்.
முதல் நாளான திங்கள்கிழமை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 5 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை நாளை (ஆகஸ்ட் 29) வரை நடைபெறும் என்றும், 21 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது
தருமபுரி, ஆக.28 ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று இரவு நொடிக்கு 27 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.
கர்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்தும் குறைந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இது திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நொடிக்கு 30 ஆயிரம் கன அடியாகவும், இரவு 7 மணி நிலவரப்படி நொடிக்கு 27 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது.
மேலும், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க 50 -ஆவது நாளாக திங்கள்கிழமையும் தடை நீட்டிக்கப் பட்டிருந்தது.