எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக.29 ஊதிய உயர்வு தொடர்பாக என்டிசி பஞ்சாலைத் தொழிலாளர்கள் 9 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி மத்தியக் குழுவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய பஞ்சாலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலைக் கழகத்தின் சார்பில் கோவையில் 5 பஞ்சாலைகள், கமுதகுடி, காளையார்கோவில் ஆகிய இடங்களில் தலா 1 பஞ்சாலைகள் என தமிழகத்தில் மொத்தம் 7 பஞ்சாலைகள் செயல்படுகின்றன. இந்தப் பஞ்சாலைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இத்தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த மே 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், பேச்சுவார்த்தை நடத்தாததால் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, என்டிசி நிர்வாகத்துடன் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொமுச, சிஅய்டியூ, அய்என்டியூசி, ஏடிபி ஆகிய சங்கங்கள் இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன.

மூன்றாவது கட்டமாக, டில்லியில் இருந்து வந்த மத்தியக் குழுவினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே என்டிசி பஞ்சாலைத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காட்டூரில் உள்ள என்டிசி தலைமையகத்தில் மீண்டும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டில்லியில் இருந்து வரும் மத்தியக் குழுவுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சு நடத்த உள்ளனர்.

கேரளாவிற்கான 175 டன்

வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கல்

சென்னை, ஆக.29  அய்க்கிய அரபு எமிரேட்சில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அளித்த நன் கொடையால் சேர்ந்த சுமார் 175 டன் கேரள வெள்ள நிவாரணப் பொருட்கள் எமிரேட்ஸ்  ஸ்கைகார்கோ விமானத்தின் மூலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பப்படுகின்றன.

இதில் உயிர்காக்கும் படகுகள், போர்வைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் உள்ளடங்கும். இவை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு விநியோகிக்கப்படுவதற்காக அங்குள்ள உள்ளூர் வெள்ள நிவாரணம் மற்றும் உதவி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக 12க்கும் மேற்பட்ட கார்கோ விமானங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் துறைமுகம்

கல்விச் சுற்றுலா

இராமேஸ்வரம், ஆக.29 கல்வியின் மாணவர் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் அதன் உறுதி மொழியின் ஓர் அங்கமாக, காரைக்கால் துறைமுகம் கல்விச் சுற்றுலாவாக 25.8.2018 அன்று நாகை மற்றும் காரைக்கால் பள்ளி குழந்தைகளை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றது.

காரைக்கால் துறைமுக இயக்குநர் ஜிஆர்கே ரெட்டி இந்தக் கல்வி சுற்றுலாக் மற்றும் டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை குறித்துத் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில்:

இந்த ஒரு நாள் கல்விச் சுற்றுலா மூலம் குழந்தைகள் மன இறுக்கத்திலிருந்து விடுபடுவதுடன் தகவல் ரீதியான அனுபவத் தையும் பெற வேண்டுமென விரும்பினோம். எங்களது அடுத்த இலக்கு இக்குழுந்தைகளுக்கு ஓர் ஆய்வகத்தை உருவாக்கி டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை மூலம் அவர்களுக்கு ஒரு ஆண்டு இலவச பயிற்சி அளிக்க வேண்டும். சமீபத்திய அறிவியலில் இளம் மனங்களை ஊக்கப்படுத்தித் தூண்டிவிட வேண்டும் என்னும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கனவை நனவாக்கும் இம்முனைவு அவருக்கான சமர்பிப்பாகும் என தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

டீசல்,  பெட்ரோல் விலை அதிகரிப்பு

சென்னை,ஆக.29 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதேபோல், சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போரும் சர்வதேச சந்தையை கடுமையாக பாதித்துள்ளது.

இந்நிலையில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்வை சந்தித்து வருகிறது. நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து டீசல்  லிட்டருக்கு 73.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.81.22 ரூபாயாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர், ஆக.29 மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,000 கன அடியாகச் சரிந்ததைத் தொடர்ந்து, நீர் திறப்பு 15,800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை மாலை 10,000 கன அடியாகச் சரிந்தது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 15,800 கன அடியாகக் குறைக்கப்பட்டது. மேலும், அணை உபரி நீர் போக்கியில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner