எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கடலூர், ஆக.30 மின் வாரியத்துக்கு ரூ.15.36 லட்சம் கட்டணப் பாக்கி வைக்கப்பட்டதால், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கான மின் இணைப்பு திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் செம் மண்டலம் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை வளாகத்தில் செயல் பட்டு வருகிறது. இந்த அலுவலகம் 2015ஆம் ஆண்டு முதல் இந்தப் பகுதியில் இயங்கி வருகிறது. அலுவலகப் பயன்பாட்டுக்காக ஆட்சியரகத்தில் 12 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஓர் இணைப்புக்கு மட்டும் இணைப்புப் பெற்ற நாளிலிருந்து மின் கட்டணம் செலுத்தப்படவில்லையாம். அதாவது, 2015ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மின் கட்டணப் பாக்கி ரூ.15,35,950 நிலுவையில் உள்ளது என்கின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வந்துள்ளது. இதுவரை, கட்டணப் பாக்கி செலுத்தப்படவில்லை. இதையடுத்து, திங்கள்கிழமை மதியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் மாடிக்கான மின் இணைப்பு மின் வாரிய ஊழியர்களால் துண்டிக்கப்பட்டது. இதனால், சுமார் 8 அலுவல கங்களுக்கு மின் விநியோகம் கிடைக்கவில்லை.

இந் நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மின்சார வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், புதிய மாவட்ட ஆட்சியர் தற்போது பொறுப்பேற்காத நிலையில், இந்தத் தொகையை உடனடியாகச் செலுத்த முடியாது. அலுவல் தொடர்பான பணிகள் பாதிக்கப்படுவதால் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் வருகைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‘ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த வே.ப.தண்டபாணி மாற்றப்பட்டு, புதிய ஆட்சியராக வி.அன்புசெல்வன் நியமிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, ஆக.30 தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், சென்னை கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடை பெறவுள்ளது.

இதுகுறித்து வேலை வாய்ப்பு -பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்தி:

கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள (அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலைய வளாகம்) ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 35 வயதுக்குட்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, அய்.டி.அய்.,  டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியை உடையவர்கள் கலந்து கொள் ளலாம்.  இதில் 10 -க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500 -க்கும் மேற்பட்ட  காலிப் பணியிடங்களுக்கு நபர்களைத் தேர்வு செய்யவுள்ளன.

சென்னையில் வீட்டு வசதி கண்காட்சி

சென்னை,ஆக. 30- சென்னையில் முதல்முறையாக ஒரே நாளில் 3 இடங்களில் வீட்டு வசதி கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் சென்னை கிளை சார்பாக நான்கு நாள் நடைபெறும் கண்காட்சியில் 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட கட்டிட திட்டங்களை பொது மக்கள்பார்வையிட்டு வாங்கலாம்.

பொது மக்கள் வசதிக்கேற்ப அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகேயே அவர்கள் வாங்க விரும்பும் கனவு இல்லத்தை காண கிரெடாய் ஏற்பாடு செய்துள்ளது.

செப்.1, 2 தேதிகளிலும் செப்.8,9 தேதிகளிலும் கிண்டிபார்க் அய்யாத் அரங்கிலும், ஒஎம்ஆர் சாலையில் ஹாலிடே இன் விடுதியிலும், கீழ்ப்பாக்கத்தில் ஹோட்டல் அபுபேலஸ் ஆகிய 3 இடங்களில் இந்த கண்காட்சி நடைபெறும்.

காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை காணலாம். கண்காட்சி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள கட்டுமான திட்டங்களை நேரில் சென்றுபார்வையிட்டு தேர்வு செய்வதற்காக 3 இடங்களில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது என்று கிரெடாய் சென்னை கிளைத் தலைவர் அபீப் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஆக.30 தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் பணி நேரத்தில் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என அரசாணை பிறப்பித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு

நீர்வரத்து 8,000 கனஅடி

சேலம், ஆக.30 சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம்- 119.83 அடியில், நீர்

இருப்பு- 93.20 டி.எம்.சி-யாக உள்ளது. அணையில் நீர் திறப்பு 6,800 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner