எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.6 பதிவான ஆவணங்கள் உரிய நேரத்தில் திருப்பித் தரப்படாவிட்டால் புகார் தெரிவிக்க பதிவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்தி:- வருமாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணம் பதிவு செய்யப்படும் போது அந்த ஆவணத்துக்குத் தேவையான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு உரிய ரசீது சார் பதிவாளரால் கையெழுத்திட்டு, ஆவணத்தினை பதிவுக்குத் தாக்கல் செய்தவர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் அல்லது ஆவணத்தைத் திரும்பப் பெற அதிகாரம் பெற்றவர் ஆவணத்தைத் திரும்பப் பெற நேரில் சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டும். ஏற்கெனவே அளிக்கப்பட்ட ரசீதை ஆவணத்தைத் திரும்பப் பெறும் போது அளிக்க வேண்டும்.  அப்போது, ஆவணத்தைத் தாக்கல் செய்தவர் அல்லது திரும்பப் பெற அதிகாரம் பெற்றவரின் விரல் ரேகை பெறப்படும். ஆவணப் பதிவின் போது பெறப்பட்ட விரல் ரேகை, மென்பொருளால் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். இது சரிபார்க்கப்பட்ட பிறகே, ஆவணம் உரிய நபருக்கு திரும்ப அளிக்கப்படும்.

புகார் தெரிவிக்கலாம்: ஆவணம் திரும்ப வழங்கப்படும் நாள், நேரம் ஆகியன ஆவணப் பதிவின்போது வழங்கப்படும் ரசீதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நாளில் சம்பந்தப்பட்ட நபர் சார் பதிவாளர் அலுவலகம் வந்து அசல் ஆவணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அசல் ஆவணத்தை ரசீதில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் திரும்ப வழங்காவிட்டால் 1800 102 5174 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

உரிய நாளில் ஆவணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து திரும்பப் பெறப்படாத நிலையில், அந்த ஆவணத்துக்கு பாதுகாப்புக் கட்டணம், ஆவணம் திரும்ப வழங்கும் போது வசூலிக்கப்படும் என குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

நல்லாசிரியர் விருது

திருவள்ளூர், செப்.6 திருவள்ளூர் மாவட்டத்தில் 6 தலைமை ஆசிரியர்கள், 2 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 5 பட்டதாரி ஆசிரியர்கள் என 13 பேருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளின் வளர்ச்சிக்கு பாடுபடுதல், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், பள்ளி வளாகத்தை தூய்மை யாக வைத்திருத்தல், மாணவர்களுக்கு அர்ப்பணிப்புடன் கல்விச் சேவை  வழங்குதல் உள்பட பல்வேறு சேவைகள் செய்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 2 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 பேர், பட்டதாரிஆசிரியர்கள் -3 பேர், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்- 1, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் -1, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்- 2 பேர் என மொத்தம் 13 பேர் நல்லாசிரியர் விருதுக்கு நிகழாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner