எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஊடகங்கள்மீதான தாக்குதல் - பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் அதிகரித்து வருகிறது. துணைக் குடியரசுத் தலைவர் அமித் அன்சாரி அவர்களும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.

காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேரடி யாகவே மத்திய பி.ஜே.பி. அரசின் இத்தகு போக்கினைக் கடுமையாக சாடியுள்ளார்.

நாட்டின் நான்காவது தூண் என்று கருதப்படும் ஊடகத்தை உருக்குலைப்பது நாட்டை சர்வாதிகாரப் பள்ளத்தில் தள்ளுவதாகும்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே என் டி டிவி  என்ற செய்தி தொலைக்காட்சிமீது கடுமையான கோபத்தில் இருந்த மோடி, ஆட்சிக்கு வந்த பிறகு அந்த செய்தி தொலைக்காட்சி நிறுவனத்திற்குப் பல்வேறு வகையில் கடுமையான நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்.    டில்லி தேர்தல் தோல்வி, பீகார் தேர்தல் தோல்வி போன்றவற்றிற்கு என்.டி.டி.வி. செய்தி நிறுவனம் தான் காரணம் என்று கூறி அந்த தொலைக்காட்சிமீது பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்பினர் 7 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் உபி தேர்தலில் தங்களுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பவேண்டாம் என்று கேட்டும், தொடர்ந்து ஒளிபரப்பி வந்த காரணத்திற்காக அந்த நிறுவனத்தின்மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறி ஒரு நாள் ஒளிபரப்பைத் தடை செய்தனர்.

அதன்பிறகும் ஆத்திரம் அடங்காமல் வெளிநாட்டு வங்கி ஒன்றுக்கு இழப்புஏற்படுத்தியதாகப் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் வீடுகளில் சில நாள்களுக்கு முன்பு சிபிஅய், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையைக்  கண்டிக்கும் வகையில், என்டிடிவி நிறுவனம் கூறியதாவது:

‘‘பொய்யான குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள இந்த சோதனையைக் கண்டு ஒதுங்க மாட்டோம்‘’ என்றது. மேலும் அதன் தலைமைச் செய்தியாளர் ரவீஷ்குமார் ஊடகத்தை அச்சுறுத்தும் போக்கை நிறுத்த மோடிக்கு நேரடியாக சவால் விடுத்தார்.  என்.டி.டி.வி.யின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியைக் காட்டும் மோடி ஒரு நாள் நேரலையில் எங்களது கேள்விக்கு பதில் அளிக்கத் தயாரா? என்றும் அறிவார்ந்த கேள்வியை எழுப்பினார்.

பனாமா பேப்பர் விவகாரத்தை வெளியிட்டதற்காக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்தின்மீது பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித்த பாத்ரா அந்த செய்தி நிறுவனம் காங்கிரசின் ஏஜெண்ட் என்று கூறியிருந்தார்.

2014 ஆம் ஆண்டு தமிழகத்தில் தாலி தொடர்பான ஒரு விவாதத்தின்போது ‘புதிய தலைமுறை’ தொலைக் காட்சி நிறுவனத்தின்மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

வியாபம் தொடர்பான செய்திகளை வெளியிட்ட செய்தியாளர்கள் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான முறை யில் மரணமடைந்துள்ளனர். இன்றுவரை அது குறித்த விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து விமர்சனம் செய்த பத்திரிகைகளை மேற்கு வங்க பாஜகவினர் இந்துக்களின் விரோதிகள் என்று கூறித் தாக்குதல் தொடுத்தனர்.

காஷ்மீரில் உண்மை நிலையை எழுதிய செய்தி நிறுவனங்கள் அனைத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவுகின்றனர் என்று கூறி, கடந்த சில வாரங்களாக அந்த நிறுவனங்களில், காஷ்மீர், டில்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள அலுவகங்களில் தொடர்ந்து தேசிய புலனாய்வு நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதாகக் கூறி பாஜகவினர் தொடர்ந்து  ஊடகவியாலாளர்களைத் தாக்கி வருகின்றனர். இது குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரிசாவில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்திற்கு வந்து தங்களுக்கு ஆதரவாக செய்தி எழுதாத பத்திரிகைகளுக்கு ஒரிசா பாஜக தலைமை எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியி ருந்தது. இது தொடர்பாக புகார் செய்தபோது, ‘‘எங்களைப் பற்றி தவறான செய்திகளை எழுதவேண்டாம் என்று அறிவுரை கூறியிருந்தோம்; ஆனால் அதை அவர்கள் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டனர்’’ என்று ஒரிசா பாஜக தலைவர் மழுப்பினார்.

இவ்வாறு ஊடகவியலாளர்களைத் தாக்குவது, ஊடக நிறுவனங்களை மிரட்டுவது  போன்ற செயல்களில் இந் தியா முழுவதுமே பாஜகவினர்  தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

பாசிஸ்டுகளின் இத்தகு அணுகுமுறையை பா.ஜ.க. கொண்டு இருப்பதால், இதுவும் பாசிச ஆட்சிதான் என்று முடிவுக்கு வருவது எளிதாகி விட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner