எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கடந்த சில ஆண்டுகளாக அய்.டி. துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாலும், மற்ற துறைகளில் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் பெருக எந்த முயற்சிகளும் அரசு எடுக்காத காரணங்களாலும்;  கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் பெருமளவில் மாணவர்கள் முன்வருகின்றனர்.

இவ்வாண்டு இதற்குமுன் இல்லாத வகையில் மாணவர்கள் மிகப்பெருமளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சென்னையில் மட்டுமின்றி பல நகரங்களிலுள்ள கல்லூரிகளில் கட் ஆப் மதிப்பெண்கள் தொண்ணூறு சதவிகிதத்துக்கு அதிகமான அளவில் என்கிற நிலையில் எல்லா பாடத் திட்டங்களுக்கும் சேர்க்கை முடிவு பெற்று, இன்றைக்கு கல்லூரிகளில் இடமில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அல்லும் பகலும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும், இன்றைக்கு எந்த கல்லூரியிலும் சேர முடியாத நிலையுள்ளது.

அரசாங்கம், உடனடியாக இதில் தலையிட்டு, தேவைப்பட்டால் கல்லூரிகளில் இன்னொரு ஷிப்ட் உருவாக்கவோ, மூடப்பட்டி ருக்கும் அல்லது மூடப்படவுள்ள தனியார் கல்லூரிகளை லீஸ் (குத்தகை) எடுத்து, கடந்த ஓரிரு ஆண்டுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களைப் பணிக்கு எடுத்து, தவித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வழி காணவேண்டும்.

பாகுபலி போன்ற திரைப்படங்கள் வெளியாகும்போது நாள் முழுக்க திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் காட்டப்படுவது போன்றும், விழாக்காலங்களில் கோயம்பேட்டில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது போன்றும் இக்கட்டான இச்சூழ்நிலையில் அரசு முன்வந்து ஏதேனும் செய்யவில்லையென்றால் ஆயிரக் கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

கல்லூரிகள் திறக்கப்படவுள்ள இந்நேரத்தில் மாணவர்கள் பரிதவித்து நிற்பது பரிதாபமான ஒன்று.

அன்புடன்,

கோ.ஒளிவண்ணன்

‘விடுதலை’ ஆசிரியருக்கு வாசகர் ஒருவர் எழுதிய கடிதம்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளதாகும். உண்மையிலேயே இது முக்கியமான பிரச்சினையே!

இந்தப் பிரச்சினை குறித்து நாளேடுகளில் செய்திகள் வந்து கொண்டுள்ளன. பலரிடமிருந்து பெறப்பட்ட பேட்டிகளும் வெளியாகியுள்ளன.

இது குறித்து கவிதா என்ற 12 ஆம் வகுப்பு மாணவி கூறுகிறார்: ‘‘நான் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில் 98 விழுக்காடு மதிப்பெண் பெற்றுள்ளேன், நான் படித்து தேர்ச்சி பெற்றது பொருளாதாரப் பிரிவு, ஆகவே நான் இளங்கலை பொருளாதாரம் படிப்பதற்காக சில கல்லூரிகளில் விண்ணப்பம் செய்திருந்தேன். ஆனால் எனக்கு இடம் கிடைக்கவில்லை, காரணம் கட் ஆப் மார்க் குறைவாக உள்ளதால் முதல் பட்டியலில் எனக்கு இடம் கிடைக்கவில்லை, இரண்டாம் பட்டியலில் இடம் கிடைக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது.’’

சென்னையில் உள்ள பிரபல கலைக்கல்லூரி மேலாளர் ஒருவர் பேசும்போது,  ‘‘எங்களது கல்லூரியில் மொத்தம் 140 இடங்கள் உள்ளன.  இதில் 125 இடங்கள் தற்போது நிரம்பி விட்டன. இந்த 125 இடங்களும் 99 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்களின், முதல் பட்டியலை நாங்கள் வெளியிட்டு விட்டோம். தற்போது ஜூலை முதல்வாரத்தில் இரண்டாம் பட்டியல் வெளியிடவிருக்கிறோம். ஆனால் இந்த இரண்டாம் பட்டியலில் கூட கட் ஆப் மதிப்பெண் படி முதல் மதிப்பெண் பெற்றவர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள். ஆகவே 99.5 விழுக்காடு கட் ஆப் மதிப்பெண் நிர்ணயித்துள்ளோம். இதனால் 99.2 விழுக்காடு மதிப்பெண் பெற்றவர்களுக்குக் கூட இந்த ஆண்டு எங்கள் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

கலைக்கல்லூரியில் ஏற்பட்டுள்ள இந்த போட்டி மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு, மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்து முடித்துவேலையில்லாமல் இருக்கும் ஏராளமான பட்ட தாரிகள் குறித்த அச்ச உணர்வும் மாணவர்களிடையே உருவாகி யுள்ளதால் கலைக்கல்லூரிகளில் சேரும் ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் கலைக்கல்லூரி களில் பயிலும் மாணவர்களுக்கான எதிர்கால வேலைவாய்ப்புகள் எதையும் மத்திய மாநில அரசுகள் இன்றுவரை உருவாக்கும் திட்டம் எதுவும் கையிலெடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் மிகப் பெருமளவில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  இது மகிழ்ச்சிக்குரியதே! சென்னையில் மட்டுமின்றி பல நகரங் களிலுள்ள கல்லூரிகளில் கட் ஆப் மதிப்பெண்கள் தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான அளவில் என்கிற நிலையில் எல்லாப் பாடத் திட்டங்களுக்கும் சேர்க்கை முடிவு பெற்று, இன்றைக்குக் கல்லூரிகளில் இடமில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அல்லும் பகலும் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் இன்றைக்கு எந்த கல்லூரியிலும் சேர முடியாத நிலையுள்ளது. அரசாங்கம், உடனடியாக இதில் தலையிட்டு, தேவைப்பட்டால் கல்லூரிகளில் இன்னொரு ஷிப்ட் உருவாக்கவேண்டும். புதிதாகக் கட்டடங்கள், கட்டமைப்புகள் (வீஸீயீக்ஷீணீstக்ஷீuநீtuக்ஷீமீ) தேவையில்லை. படித்துப் பட்டம் பெற்று வேலை யில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பஞ்சமில்லை.

இந்த நிலையில் தொழிற்கல்லூரிகளைக் கைவிட்டு, கலைக் கல்லூரிகளில் சேர முன்வருவோர்க்குக் கூடக் கதவடைப்பு என்றால், இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. கல்வி ஆர்வத்தைப் பூர்த்தி செய்து கொடுப்பது ஓர் அரசாங்கத்தின் கண் கண்ட கண்ணியமான கடமையாகும்.

கல்வித் துறையில் நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் கல்வித் துறை இதற்கு முன்னுரிமை கொடுத்து, படிக்கத் தவிக்கும் மாணவர்களுக்குப் பரிகாரம் தேடித் தருமாறு வற்புறுத்துகிறோம்.

மதிக்கப்படவே முடியாத மிகப்பெரிய முதலீடு கல்வியே! கல்வி தனி மனிதனுக்கு மட்டுமல்ல - நாட்டுக்கே பெரும் செல்வ மாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner