எழுத்துரு அளவு Larger Font Smaller Font


2016 நவம்பர் 8ஆம் தேதியை மறக்க முடியாமல் செய்து விட்டார் மத்திய பிஜேபி ஆட்சியில் பிரதமராக இருக்கும் நரேந்திர தாமோதர தாஸ் மோடி.

ஆம்! அன்று இரவு 8 மணிக்கு திடீரென்று  நடை முறையில் புழக்கத்தில் இருந்த 500ரூ, 1000ரூ நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.

மிகப் பெரிய புரட்சியாக விளம்பரப்படுத்தினார்கள். பாமர மக்களும் ஏதோ நல்லது நடக்கப் போகிறது என்று கனவு கண்டனர். நடந்தது என்னவோ எதிர் வினைதான்!

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக "தேசிய பொருளாதாரப் பேரிடர் நாள்" என்று அறிவித்து அது தொடர்பான மக்கள் அறிக்கை ஒன்றினை சென்னைப் பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. அதனை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கருத்துக் கூறினார். தக்க நேரத்தில் வெளியிடப்பட்ட ஆழமான அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்டது இவ்வறிக்கை என்றும் பாராட்டினார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கருத்துக் கூறுகையில் ஒரு வினாவை எழுப் பினார்.

2016 டிசம்பர் 8ஆம் தேதி ரூபாய் மதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் கறுப்புப் பணம் ஒழிக் கப்படும் என்று கூறப்பட்டது.  அறிவிப்பிற்குப் பின் நான்கு மாதங்கள் கழித்துத்தான் சென்னை இராதா கிருஷ்ணன் நகர் தேர்தல் (12.4.2017) அறிவிக்கப்பட்டது.

மாநில அமைச்சர்கள் உட்பட பலர் வீட்டிலும் 35 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டு வாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்ட ரூ.89 கோடி வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து தான் திராவிடர் கழகத் தலைவர் ஒரு கேள்வியை எழுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியின் ரூபாய் மதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின் கைப்பற்றப்பட்ட இந்தப் பெருந் தொகை கறுப்புப் பணமா? வெள்ளைப் பணமா?

பிரதமர் மோடி அறிவிப்புக்குப்பின் இவ்வளவுப் பெருந் தொகையில் கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதே - அப்படியென்றால் பிரதமரின் அறிவிப்பும், செயல்பாடும் முற்றிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்று தானே கருத வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில்?

அது மட்டுமா? சேகர் ரெட்டியிடம் ரூ.260 கோடி கைப்பற்றப்பட்டதில் 33 கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்தது எப்படி?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பிரதர் மோடியின் 'பொருளாதாரப் புரட்சி' வெற்றி, வெற்றி என்று முதுகில் தம்பட்டத்தைக் கட்டிக் (Beating his own Trumpet) கொண்டு அடித்தால் அதில் பொருள் இருக்க முடியும்.

ஆனால் நடந்தது என்ன? சிறு நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டு, பல லட்சக்கணக்கானோர் வேலையைப் பறி கொடுத்து தெருவில் நிற்கும் அவலம்!

எடுத்துக்காட்டுக்குத் திருப்பூரை எடுத்துக் கொள்ளலாம். தோழர் முருகேசன் என்பவர் பெரிய நிறுவனத்தில் தொழில் முனைவோராக இருந்து, 10 பேருக்கு ஊதியம் அளித்துத் தொழில் செய்து வந்ததும், பண மதிப்பு நீக்கத்தால் முருகேசனின் தொழில் முடங்கிய நிலையில், அவர் நிலை என்ன தெரியுமா? இன்னொரு தொழிற்சாலையில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றும் ஊழியராகி விட்டார். ('தி தமிழ் இந்து' - நாள் 7.11.2017)

இது ஒன்றும் எதிர்க்கட்சிக்காரர்கள் கட்டிவிட்ட கற்பனைப் பட்டம் அல்ல; நடைமுறையில் யதார்த்தத்தில் கண்ணுக்கு நேரே நடக்கக் கூடிய அவலம்.

ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று வாய்க் கிழியப் பேசினாரே பிரதமர்  இன்றைய நிலை என்ன?

பெரும்பாலும் வேலை வாய்ப்பு என்பது சிறு, குறு, நடுத்தர தொழில்களினால் தான் கிடைத்து வந்தது. அவற்றின் வாய்களில் மண்ணை அள்ளிப் போட்ட பிறகு இலட்சக்கணக்கில் வேலையின்றிப் பரிதவிக்கும் நிலை தானே! இலட்சக்கணக்கானோரின் வேலை வாய்ப்புப் பறி போகிறது என்றால் அதன் பொருள் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பட்டினிச் சாவுப் பக்கம் தள்ளப்பட்டுள்ளனர் என்பதாகும்.

அக்குடும்பங்களில் பிள்ளைகளின் கல்வி நிலை, ஆக வேண்டிய திருமணத்துக்காக நிச்சயிக்கப்பட்ட பெண் களின் நிலை என்று பெருக்கிக் கொண்டே போகலாமே!

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதனைப் பொறுத்ததல்ல, குடும்பங்களைப் பொறுத்ததல்லவா?

'விடுதலைச் சிறுத்தைகள்' வெளியிட்ட மக்கள் அறிக் கையில் ஒரு விவரத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

"பண மதிப்பு அழிப்பு நடவடிக்கையால் கறுப்புப் பணப் புழக்கம் குறைந்துள்ளதா? என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு நடத்திய கருத்துக் கணிப்பில் 'இல்லை' என்று 59.33 சதவீத மக்கள் கூறியுள்ளனர். ஊழல் குறையவில்லை என்று 66.52 சதவீத மக்கள் கூறியுள்ளனர்" என்ற புள்ளி விவரம் அந்த மக்கள் அறிக்கையில் காணப்படுகிறது.

மக்களின் தீர்ப்பை அறிந்ததற்குப் பிறகு மத்திய பிஜேபி அரசு புத்தி கொள் முதல் பெறுமா? பெற மாட் டார்கள் என்பதற்குப் பிரதமர் உட்படப் பலரும் பேசி வருபவைகளே எடுத்துக்காட்டுகளாகும். இனித் தீர்ப்பு மக்கள் கையில்தான், வாக்குச் சீட்டில்தான்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner