எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தேர்தல் முடிவுகள் குறித்து ஜோதிடத் தகவல் வெளியிடுவதும் சட்ட விரோதம் ஆகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இமாசலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலை யொட்டி இது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் கருத்துக் கணிப்பு,  வாக்களிப்புக்குப் பின் (ணிஜ்வீt றிஷீறீறீ) கணிப்பு  ஆகிய எந்த ஒரு அனுமான முடிவுகளையும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பல செய்தித் தொலைக்காட்சிகள் தேர்தல் நடை பெறும் போது மாதிரி வாக்கெடுப்பு,  எக்சிட் போல் எனப்படும் வாக்களித்தவர்களிடம் கருத்துக் கேட்பது ஆகியவைகளை ஒவ்வொரு தேர்தலிலும் நடத்தி வந்துள்ளன.  அதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை அடுத்து,  ஜோதிட நிகழ்ச்சி என்னும் பெயரிலும், குறி சொல்லுதல் என்னும் பெயரிலும் பல ஊடகங்கள் தேர்தல் கணிப்புக்களை வெளியிட்டன.

அதற்கும் தற்போது தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.  எந்த ஒரு துறையைச் சார்ந்தவரையும் அழைத்துத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும்? என்றோ,  எந்தக் கட்சி தோற்கும் என்றோ அவர் தரும் கருத்துக்களை வெளியிடுவது சட்ட எண் 126 வின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது முதன் முதலாக தனியார் தொலைக்காட்சிகளில் தேர்தல் குறித்த ஜோதிடக் கருத்துக்கணிப்புகள் ஆரம்பமாயின. அப்போதே தேர்தல் நடைமுறைச் சட்டம் 126 பிரிவு ஏ வின் படி  இவர் வெல்வார், அவர் தோற்பார்; இந்தக்கட்சி வெல்லும்  என்றெல்லாம் கூறக் கூடாது. பிரதமர் முதல் தேர்தலில் போட்டியிடும் முக்கிய நபர்களின் பிறந்த தேதி, கைரேகை, அவர்களது பெயர்களைக் கொண்டு வெற்றி தோல்வியைக் கணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் எந்த ஒரு தொலைக்காட்சியும் இந்தச்சட்டவிதிகள் பற்றி கவலைப்படுவதில்லை.

தொடர்ந்து தேர்தல் காலங்களில் ஜோதிடம் குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிதான் வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வரவேற்கத் தகுந்த ஒன்றாகும். மீறி வெளியிடும் காகித ஊடகங்கள், மின் ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்; குறிப்பிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப் பட வேண்டும். அந்த நிலை ஏற்பட்டால்தான் இந்த மூடத்தனங்களுக்கு முடிவை ஏற்படுத்த முடியும்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் ஜோதிட சிகாமணிகள் தங்கள் வேலையைக் காட்டுவார்கள். அவர்கள் கணித்தது எல்லாம் சரியானவை தானா என்பது முக்கியமான கேள்வியாகும். சரியானதாக இல்லை என்றால் சம்பந்தப்பட்ட ஜோதிடர்கள்மீது வழக்குத் தொடுக்கப்படாதது ஏன்?

சட்டத்தை அமல்படுத்துபவர்களில், நீதிபதிகளில் மூடநம்பிக்கையாளர்களாக இருந்தால் இவை எல்லாம் நடக்குமா? தேர்தல் ஆணையர்களும், நீதிபதிகளும் நேரம் பார்த்துப் பதவியேற்பது இங்கு சர்வ சாதாரணம்.

பல்கலைக் கழகங்கள் போலி விஞ்ஞானமான ஜோதிடத்தைப் பாடத் திட்டத்தில் வைக்கின்றன. அரசுக் கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடத்தும்போது பூமிப் பூஜை போடுகிறார்கள். அவற்றுக்குப் பார்ப்பனப் புரோகிதர்கள் அழைக்கப் படுகிறார்கள்.

இந்த இடங்களிலும் பார்வை செலுத்தப்பட வேண்டாமா? ஏதோ தேர்தல் நேரத்தில் ஜோதிடக் கணிப்பால் வாக்காளர்களின் கருத்தில் மயக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதோடு ஜோதிடத்தின் பங்கு  முடிந்து விடுகிறதா?

இன்னும் ஒன்பது கிரகங்களை வைத்து ஜோதிடம் சொல்லிக்  கொண்டிருப்பதைவிட "நகைச்சுவை" வேறு எதுவாக இருக்க முடியும்?

பூமியைப் போல பல கிரகங்கள் இருப்பது அண்மையில்கூடக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே - அவற்றிற்கு ஜோதிடப் பலன் என்னவாக இருக்க முடியும்?

பதவி ஆசை வந்தால் அறிவைப் பின்னுக்குத் தள்ளி தனக்குச் சாதகமாக சாதகம் சொன்னால் சன்மானம் மிகப் பெரிய அளவில் அளிக்கப்படும் பரிதாபம்!

பகுத்தறிவு இருந்தும் மனிதன் பரிதவிப்பதை நினைத்தால் பரிதாபப்பட வேண்டியிருக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner