எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கடந்த மாதம் 29ஆம் தேதி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய சென்ற முதலமைச்சர் சித்தராமையா, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் தங்கியிருந்த இடத்தில் அமைச்சர்கள் சிலரோடு சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். மதிய உணவில் அசைவ உணவுகள் இடம் பெற்றிருந்தனவாம். இதைப் படம் பிடித்து சில கன்னட பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்த சர்ச்சை குறித்து சித்தராமையா பதிலளிக்கையில், "எந்த கடவுளும், அசைவ சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குள் வரக்கூடாது எனக் கூறவில்லை. வேடன் கண்ணப்பன் மான் கறியை சிவபெருமானுக்குப் படைத்ததாக புராணம் கூறுகிறது. எனவே இதில் சர்ச்சைக்கு இடமில்லை" என்றார். "மனது சுத்தமாக இருந்தால் போதும்;  குறிப்பிட்ட ஆடை அணிந்தோ, குறிப்பிட்ட சாப்பாட்டை சாப்பிட்டோதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் சொன்னது கிடையாது. பக்தனின் மனது சுத்தமாக இருக்க வேண்டும், நேர்மையானவனாக இருந்தால் போதும்" என்றும் தெரிவித்தார்.

இது குறித்து கருநாடக பாஜக தலைவர்  எடியூரப்பா கூறியதாவது, "சித்தராமையா கோடிக்கணக்கான இந்துக்கள் மனதைப் புண்படுத்திவிட்டார்.  தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலிலுக்கு மோடி வந்தபோது விரதமிருந்து சாமி தரிசனம் செய்தார். இதுதான் மோடிக்கும், சித்தராமையாவுக்கும் உள்ள வித்தியாசம்" என்றார்.

இதனிடையே, தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே தனி உதவியாளர் வீரு ஷெட்டி அளித்த பேட்டியில், "கோயிலுக்குள் இதைத்தான் சாப்பிட்டுவிட்டு வர வேண்டும் என்ற விதிமுறையை நாங்கள் பிறப்பித்தது இல்லை. பக்தனுக்கும், கடவுளுக்கும் நடுவேயான உறவுதான் கோயில் தரிசனம் என்பது. கோயில் விதிமுறைப்படி, மது அருந்திவிட்டு வரக்கூடாது" என்றார். கருநாடகாவை சேர்ந்த "சில மூத்த பக்தியாளர்கள் அளித்துள்ள பேட்டியில், சில குறிப்பிட்ட வேண்டுதல், பூஜைகளுக்குத்தான் பக்தன் விரதம் இருப்பதோ, அசைவம் தவிர்ப்பதோ வலியுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

கடவுளில்கூட மரக்கறிக் கடவுள், மாமிசக் கடவுள் என்று இருக்கிறதா? இதை எல்லாம் எழுதி வைத்தவர்கள் யார்? கடவுளே எழுதி வைத்ததா? அப்படி எழுதியிருந்தால் எந்த மொழியில் எழுதி வைத்தார்?

எந்தக் கிறுக்கனோ, எந்த காலத்திலோ எழுதி வைத்ததை எல்லாம் எல்லாக் காலத்திலும் ஏற்க வேண்டுமா? அப்படியே பார்க்கப் போனாலும் இடையில் மாற்றங்களே ஏற்படவில்லையா?

கோயில்களில் தீவட்டிகள் எரிந்த காலம் போய் இப்பொழுது நியான் விளக்குகள் ஜொலிக்கின்றனவே, அது எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது? பார்ப்பனர்கள் நினைத்தால் எதையும் செய்து கொள்ளலாம். வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்கிற முறையில் தான் கோயில் அமைப்புகள் இருந்து வருகின்றன.

பொதுவாக கோயில்கள் புரோகிதக் கூட்டத் தின் சுரண்டல் கூடாரமே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner