எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

2017-ஆம் ஆண்டு மிகவும் பெரிய மக்களாட்சி நாடு என்று கூறப்படும் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தலான ஆண்டாகவே இருந்துவிட்டது.  இந்த ஆண்டு மத்தியில் பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் தேர்தல் நடைபெற்றது.

முக்கியமாக பணமதிப்பிழப்பு அதனால் ஏற்பட்ட கடுமையான பாதிப்பிற்குப் பிறகு நடந்த இந்தத் தேர்தலில் மத்தியில் மோடி தலைமையில் ஆளும்  பாஜக அரசிற்கு பின்னடைவு ஏற்படும் என்றே மக்களாட்சியில் நம்பிக்கை வைத்திருக்கும் பலரும் எண்ணியிருந்தனர்.

அவர்களின் எண்ணத்திற்கு பஞ்சாப் மாநிலம் ஒரு நம்பிக்கையை கொடுத்திருந்தது. ஆனால் உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ஜனநாயகம்  கேள்விக்குறியானது. கோவாவிலும் மணிப் பூரிலும் மக்கள் பாஜகவை புறக்கணித்திருந்தனர். கோவா வில் ஆளும் பாஜக மீது, மக்கள் கடுமையான எதிர்ப்பு மனநிலையில் இருந்தனர். அங்கு மொத்தமுள்ள 40 தொகுதிகளில்  17 இடங்களில் காங்கிரசும், 11 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றன. 21 இடங்களைப் பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு   காங்கிரஸ் கட்சியினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரி முடிவெடுத்த நிலையில் திடீரென 11 இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்கவும், விரைவில் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டார். இந்த நிகழ்வு இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மந்தமான செயல் பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியைத் துறந்தார்.

மத்தியில் ஆளும் ஒரு கட்சி மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்ற எந்த நிலைக்கும் சென்றுவிடும் என்பதற்கு இது ஒரு சாட்சியாக மாறிவிட்டது. கோவா போன்ற சிறிய மாநில ஆட்சியைக் கைக்குள் வைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பதவி விலகிவிட்டு மாநில முதல்வரானார். இந்த அதிர்ச்சி முடிவதற்குள் மணிப்பூரிலும் குறுக்குவழியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அங்கு 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28, பாஜக 21 மற்ற தொகுதிகளை இடது சாரிகளும், சுயேச்சைகளும் வென்றனர்.  ஆட்சியமைக்க வெறும் 3 இடங்கள் மட்டுமே காங்கிரசுக்கு தேவையாக இருந்தபோது அங்கும் பாஜக குறுக்குவழியில் ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஜனநாயகப் படுகொலை என்பது வரலாற்றில் என்றும் எதிர்மறையாகப் பேசப்படும்.

அங்கு வாக்குப்பதிவு கருவிகளில் கடுமையான மோசடிகள் நடைபெற்றன. பல இடங்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் எதிர்கட்சிகள் வாக்குகளைப் பெற ஆளும் பாஜக லட்சக்கணக்கில் வாக்குகளைப் பெற்றது. தேவார் தொகுதியில் ஆட்சியிலிருந்த சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி, பகுஜன் சமாஜ்,  உட்பட சுயேச்சைகள் அனைவருமே ஒரு வாக்கு கூடப் பெறவில்லை, ஆனால் பாஜக மாத்திரம் அத்தனை வாக்குகளையும் பெற்றிருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேர்தல் முறைகேடுகள் நடந்தது குறித்து எதிர்க் கட்சி யான காங்கிரஸ் தகுத்த எதிர்ப்பை காட்டாத நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் நடந்த குஜராத் தேர்தல் மீண்டும் காங்கிரசுக்கு ஒரு படிப்பினையைக் கொடுத்தது.

குஜராத்தில் 17 தொகுதியில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகம்; இந்தத் தொகுதி அனைத்திலும் பாஜக வெற்றிபெற்றது.  182 இடங்களைக் கொண்ட குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 இடங்கள் தேவையான நிலையில், ஆளும் பாஜகவிற்கு 99 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் முந்தைய தேர்தலைவிட இந்த தேர்தலில் 16 இடங்களை அதிகம் பெற்றது (77 இடங்கள்).

தேர்தல் முடிவுகள் அறிவித்துக் கொண்டு இருந்த நிலையில் பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்ற ஒரு நிலை ஏற்பட்ட போது திடீரென சூரத், கோத்ரா உள்ளிட்ட 17 இடங்களில் வாக்குப்பதிவு செய்யும் கருவியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையைவிட அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டன.

எடுத்துக்காட்டாக கோத்ராவில் பாஜக வெல்வதற் கென்றே கூடுதலாக 230 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றார்.  அதே போல் தான் இந்த 17 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் ஆணையத் திடம் முறையிட்டுள்ளது, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தியும் இவ்விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.

ஆனாலும் தேர்தல் ஆணையம் மவுன சாமியாராகி விட்டது.  உண்மையில் குஜராத்தில் பாஜகவிற்கு 82 இடங் களும், காங்கிரஸ் 94 இடங்களையும் பெறவேண்டியது, 94 இடங்களைப் பெற்று காங்கிரஸ் ஆட்சியில் அமர வேண்டிய நிலையில் வாக்குப்பதிவு கருவியில் மோசடி நடத்தி ஆட்சியைப் பா.ஜ.க. பெற்றது.

உத்தரப்பிரதேசத்தில்   மின்னணு வாக்குப்பதிவு கருவி மூலம் உள்ளாட்சித் தேர்தலில்  மாநகராட்சிகளில் பாஜக மிகபெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் வாக்குச்சீட்டின் மூலம் வாக்குப்பதிவு நடந்த  பேரூராட்சிகள், உள்ளாட்சி, கிராமப் பஞ்சாயத்து  தேர்தல்களில் சுயேச்சைகளைவிட குறைவான வாக்குகளை பாஜக பெற் றுள்ளது. இது தொடர்பாக  உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தக் கால கட்டத்தில் தேர்தல் ஆணையம் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதோ என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு - சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இயங் காதது வருந்தத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner