எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று (1.1.2018) மாலை சென்னை பெரியார் திடலில் "கோயபல்சின் குருநாதர்களும், 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும்!" என்ற பொருளில் சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றினார். ஒரு நாள் விளம்பரத்தில், மன்றம் நிறைந்த அளவுக்குப் பல்வேறு துறைகளைச் சார்ந்த பெரு மக்கள், குறிப்பாக வழக்குரைஞர்கள் பெரும் அளவில் கூடியிருந்தனர்.

ஹிட்லரின் அமைச்சரவையில் கோயபல்சு என்ற அமைச்சர் பொய்யைத் திருப்பித் திருப்பி சொன்னால் அது உண்மையாகிவிடும் என்பதில் உறுதியாக இருந்தவர் அதனால்தான் சிறப்புக் கூட்டத்துக்கு அந்தத் தலைப்பு கொடுக்கப்பட்டது. சி.பி.அய். நீதிபதி ஷைனி அவர்களின் தீர்ப்பும் - 2ஜி அலைக்கற்றைத் தொடர்பான திராவிடர் கழக ஆவணங்களும், மேடையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கு அடிப்படையற்றது - பொய்யாகத் தொடுக்கப்பட்டது. இதற்குள் ஆரியர் - திராவிடர் போராட்டம் இருக்கிறது என்று தொடக்கம் முதலே சொல்லி வந்தவர் திராவிடர் கழகத் தலைவர். அப்படி அவர் சொன்ன பொழுது அதுபற்றி கடுமையான விமர்சனங்களும் பல்வேறு திசைகளிலிருந்து வெடித்துக் கிளம்பியதுண்டு. அதைப்பற்றியெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் 'இறுதியில் சிரிப்பவர்கள் யார்?' என்ற வினாவை அவர் அப்பொழுதே தொடுத்தார்.

அவர் அவ்வாறு தொலைநோக்கோடு துல்லியமாகச் சொன்னதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது. அது போலவே ஆரம்பம் முதலே இந்த வழக்கில் "நான் குற்ற மற்றவன் - நிரபராதி என்று நிரூபித்து தூய்மையாக வெளியில் வருவேன்!" என்று உறுதியாகச் சொன்னவர் திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் மானமிகு ஆ. இராசா அவர்கள்.

இருவரும் சொன்னது எந்த அடிப்படையில் என்றால் 'உண்மை வெல்லும் - ஜோடிக்கப்பட்ட பொய் வழக்குத் தோற்கும் என்ற இயற்கை நியதியின் அடிப்படையில்தான். ஒரு சார்பின்றி ஒர்ந்து கண்ணோடாது வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி திரு ஷைனி அவர்கள் பொருத்தமாக அமைந்தார்.

திராவிடர் கழகத்திற்கு இதில் என்ன அக்கறை என்று கேட்பவர்களுக்கு மிகச் சரியாகப் பதில் சொன்னார் திராவிடர் கழகத்தலைவர்.

உண்மைக்காக வாதாடுபவர்கள் தந்தை பெரியார் வழி வந்த திராவிடர் கழகத்தினர். 'குடிஅரசு'  இதழ் வெளிவந்த அச்சகத்திற்கே 'உண்மை விளக்க அச்சகம்' என்று தந்தை பெரியார் பெயர் சூட்டியிருந்தார். சரியான சந்தர்ப்பத்தில் நினைவூட்டிப் பேசினார் ஆசிரியர்.

நீதிபதியின் கறாரான தீர்ப்பினை அறிந்த ஒவ்வொரு வரும் உண்மைத் தன்மையினை அறிந்தனர். பல ஏடுகள் தாங்கள் முன்னே எடுத்திருந்த நிலைப்பாட்டினை தீர்ப் புக்கும் பிறகு மாற்றிக் கொண்டன என்பது முக்கிய மானதாகும்.

குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அப்பொழுது, முதல் அமைச்சராக இருந்த  நரேந்திர மோடிதானே பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்ன பொழுது - அவர் குற்றமற்றவர் அவருக்கும் அந்தக் கொலைகளுக்கும் சம்பந்தமில்லை  என்று நீதிமன்றமே கூறி விட்டது என்று 'துக்ளக்' உள்ளிட்ட பார்ப்பன ஏடுகள் எழுதியதுண்டு.

அதே பார்ப்பன ஏடுகள் - ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ வார ஏடான விஜயபாரதங்கள் ஷைனி தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று எழுதுகின்றனவே எந்த அடிப்படையில்?

அதுதான் சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண் ணும் பார்ப்பானுக்கொரு நீதி என்று பார்ப்பன பாரதி சொன்னதாகும்.

காஞ்சிபுரத்தில் சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சிபுரம் இரு சங்கராச்சாரியார்கள் மீதும் கொலை வழக்குத் தொடுக்கப்பட்டு, சிறையிலும் இருந்து வந்தனரே - அந்த வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதன் மீது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று விஜய பாரதங்களோ, துக்ளக்குகளோ எழுதியதுண்டா? மாறாக இந்தப் பிரச்சினையில் சங்கராச் சாரியாருக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று தானே 'துக்ளக்' எழுதியது.

இவ்வளவுக்கும் அவ்வழக்கில் 77 பேர் பிறழ்சாட்சியாக் கப்பட்டனர் என்கிற போது அதன்மீதுவிசாரணை நடத்தப்பட்டதுண்டா? 'என்னிடம் பேரம் பேசினார்கள்' என்று படுகொலை செய்யப்பட்ட சங்கரராமன் மனைவி சொன்னாரே அதன்மீதுதான் விசாரணை உண்டா?

பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்டது என்றால் அதற்கொரு பார்வை - சம்பந்தப்பட்டவர் பார்ப்பனர் அல்லாதார், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர் என்றால் இன்னொரு பார்வை என்றால் இதற்குப் பெயர்தான் பார்ப்பன மனுதர்மப் புத்தி என்பது.

சுக்ராம் போன்ற பார்ப்பனர்கள் குற்றம் செய்திருந்தாலும் தண்டனையை அனுபவிக்க விடாமல், நாடாளுமன்ற பதவியை பிஜேபி கொடுத்ததையும் பார்ப்பனர் அல்லாதார் என்பதால் ஆ. இராசா சிறைக்கு அனுப்பப்பட்டார் என்று பிரபல எழுத்தாளர் சேகர் குப்தா எழுதியிருந்ததையும் பொருத்தமாகச் சுட்டிக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் சிறப்புக் கூட்டத்தில் குறிப்பிட்டது. அனைவரையும் கருத்து ரீதியாகத் திருப்திப்படுத்தியது.

"ராஜாவின் ஜகஜ்ஜால கில்லாடித்தனம் வெற்றி அடைத்துள்ளது ஹிந்து தர்மம் நின்று கொல்லும் இதே ஜென்மத்தில் கண் முன்னே இன்னும் வெகு விரைவில்" என்று ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' (5.1.2018 பக்கம் 9) எழுகிறதுஎன்றால் பார்ப்பனர்களின் உள்ளத்தில் பொதிந்துகிடப்பது எத்தகைய உணர்வு?

விஜயபாரதம் கூறும் ஹிந்து தர்மம் என்பது என்ன? பார்ப்பனன் கொலை செய்தால் சிகைச் சேதம், சூத்திரன் கொலை செய்தால் சிரச் சேதம் என்பதுதானே! உலக நீதிமன்றம் சென்றாலும் ஆ. இராசா குற்றமற்றவர் என்று வெளியே வருவார் என்று விடுதலை ஆசிரியர் சொன்ன போது மிகப் பெரிய வரவேற்பு கூட்டத்தில்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner