எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாடாளுமன்றத்தின் குளிர்கால இந்தக் கூட்டத் தொடரின் போது கடந்த ஜனவரி நான்காம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்தி தொடர்பான ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். 'அய்க்கிய நாடுகள் அவையில் இந்தியாவிற்கு என்று ஒரு மொழியை அரசு மொழியாக்க முடிவு செய்துள்ளோம், ஆகவே  அய்க்கிய நாடுகள் அவையில் இந்தியாவிற்கான அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டு வர முழு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.  உறுப்பினர்கள்  பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அய்.நா-வில் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில், 129 நாடுகள் எங்களது இந்தி அலுவல் மொழி என்ற முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே, இந்தியை அலுவல் மொழியாக்க முடியும். மேலும், இதற்காக ஆகும் செலவையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான செலவு குறித்து நாம் கவலைபடக் கூடாது,   இந்தியர்கள் அதிகம் வாழும் சிறிய நாடுகளான பிஜி, மொரீஷியஸ் மற்றும் சுரிநாம் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைப் பெறுவதுகுறித்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.

அப்போது குறுக்கிட்ட பாஜக  மாநிலங்களவை உறுப்பினர்   அய்.நா-வில் இந்தி அலுவல் மொழியாக்கப்பட் டால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.40 கோடி செலவாகும் என்று சுட்டிக்காட்டினார். அதற்குப் பதிலளித்த சுஷ்மா, 'இதற்காக 40 கோடி ரூபாய் அல்ல, ரூ.400 கோடி செலவழிக்கக்கூட மத்திய அரசு தயாராக இருக்கிறது' என்றார். மேலும், அய்க்கிய நாடுகள் அவையில்  மோடி இந்தியில் உரையாற்றியதையும் சுஷ்மா கூறினார்.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய காங் கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும் அய்க்கிய நாடுகள் அவையில் பணியாற்றியவருமான சசிதரூர்,  எழுப்பிய வினா விவேகமானது. இந்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அவர் எழுப்பிய முக்கிய வினாக்கள் வருமாறு: "இந்தி நமது தேசிய மொழி அல்ல. அலுவல் மொழி மட்டுமே. அய்க்கிய நாடுகள் இந்திக்கு முன்னுரிமை கொடுப்பது முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.

அய்.நா-வில் நமக்கு அலுவல் மொழி என்ற ஒன்று ஏன் தேவை? உலக அளவில் அரபு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை, இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையை விடக் குறைவு. ஆனால், அரபு மொழி 22 நாடுகளில் பேசப்படுகிறது. இந்தியை அலுவல் மொழியாகக்கொண்ட ஒரே நாடு இந்தியா மட்டும்தான்.

என்ன தேவைக்காக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கிறது என்பதுதான் கேள்வியே. இந்தி பேச விரும்பும் பிரதமர்களோ, வெளியுறவுத்துறை அமைச்சரோ இருந்தால் பிரச்சினையில்லை. அவர்கள், இந்தியில் பேசுவதை மொழிபெயர்ப்பதற்காக நாம் செலவிடலாம். அதேநேரம், எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமரோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ வந்தால், அவர்களை இந்தி பேசியே ஆக வேண்டிய சூழலுக்கு நாம் ஏன் ஆளாக்க வேண்டும்? இந்தி பேசும் மக்களின் பெருமையை நான் புரிந்துகொள்கிறேன். அதேநேரம், இந்தி பேசாத இந்நாட்டு மக்களும் இந்தியர் என்பதில் பெருமைகொள்கிறார்கள் என்றார். இதற்குப் பதிலளித்துப் பேசிய சுஷ்மா, பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தி மொழி பேசுகின்றனர். ஒரே ஒரு நாட்டில் மட்டுமே இந்தி பேசப்படுகிறது என்ற உங்களின் கூற்று, உங்களின் புறக்கணிப்பைக் காட்டுகிறது என்று குற்றஞ் சாட்டினார் சசிதரூர்.

இந்தி என்று பொதுவாகச் சொன்னாலும் அதில் எத் தனையோ பிரிவுகள் உண்டு. ஒன்றுக்கும், மற்றொன்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் உண்மை.

மொழி என்பது அந்த மண்ணின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தவேண்டும் பெரும்பான்மை மக்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் மொழியாக இருக்க வேண்டும், இதே இலக்கணத்தில் தான் இந்தியா(தமிழகம்), இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் அலுவல் மொழியாகவும் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட், செஸலிஸ் மற்றும் பல இந்திய பெருங்கடல் நாடுகளில் தமிழ் பேசப்பட்டு வருகிறது. ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது. இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக உள்ளதாக 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற கூகுள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

உலகின் 14 நாடுகளில் தமிழ் வானொலி, தமிழ் இதழ்கள் போன்றவை வந்து கொண்டிருக்கின்றன. வெறும் பொழுதுபோக்கு என்ற வகை மட்டுமல்லாமல் கனடாவில் இருந்து "நீதிக்கான குரல்" என்ற பெயரில் முழுக்க முழுக்க மக்களின் உரிமைக்கான ஒரு இதழாக மாதமொருமுறை வெளிவருகிறது,

இந்தியாவிலேயே மிகவும் பழைமையான வரலாறு கொண்ட ஒரு மொழியாக தமிழ் இருக்கும் போது எந்த ஒரு காரணமே இல்லாமல் இந்திக்கு மட்டும் ரூ.40 கோடி என்ன 400 கோடி கூட செலவழிக்க நாங்கள் தயார் என்று சுஷ்மா சுவராஜ் கூறுவதன்  உட்பொருள் என்ன?

இந்தி, சமஸ்கிருதம் என்பவை ஆரிய மொழிகள்! இவற்றின்மீது ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு எப்பொழுதுமே இணைப்பிரியா காதல். உயிரும் உடலுமாக இருக்கக் கூடியவையே! பா.ஜ.க. ஆட்சி என்றால் பார்ப்பன ஆட்சி என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner