எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

1984 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போதுதான் தான்தோன்றித்தனமாக தொழிற்கல்லூரிகளில் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார். அதனைக் அந்தக் கட்டம் முதல் தொடர்ந்து எதிர்த்து வந்தது - போராட்டங்களை நடத்தியது திராவிடர் கழகமே!

2006 இல் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்தபோது அந்த நுழைவுத் தேர்வுக்கு முடிவு கட்டப்பட்டது.

உச்சநீதிமன்றம் வரை உயர்ஜாதி ஆதிக்கம் மோதிப் பார்த் தது. தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்ற தீர்ப்புதான் கிடைத்தது!

தமிழ்நாட்டில் மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரியைக் காண முடியும். எதற்காக இந்த முயற்சிகள்? தமிழ்நாட்டு மாணவர்கள் ஏராளம் பேர் மருத்துவராக வரவேண்டும் என்ற அவாவினால்தானே!

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் மருத் துவக் கல்லூரிகளில் வேற்று மாநிலத்தவர்களைக் கொண்டு வந்து நுழைக்க, திணிக்க மத்திய அரசுக்கு உரிமை கொடுத்தவர்கள் யார்?

உண்மையைச் சொல்லப்போனால், மத்திய அரசுக்கு என்று மக்களே கிடையாதே - மாநில அரசுகளுக்குத்தானே மக்கள் உண்டு.

ஒரு மாநில அரசு தன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளம் மருத்துவர்களாக வேண்டும் என்ற வேட்கையில் திட்டமிடும்பொழுது, வீட்டுக்குள் திருடன் நுழைவதுபோல, திடுதிப்பென வேறு மாநிலத்தவர்கள் நுழைவது எப்படி? மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்ததற்காகத் தண்டனையா?

மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வு என்ற ஒன்றை அறிவித்த அந்த மாத்திரத்திலேயே போர்க்கொடி தூக்கியது திராவிடர் கழகம் என்பதை மறந்திடவேண்டாம் (29.12.2016).

இந்திய மருத்துவக் கவுன்சிலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 16 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அன்றைய தி.மு.க.  அரசு அந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டதுண்டே! (Implead).

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில் விக்கிரமாதித் சிங், அனில் தவே ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டம் 19, 25, 26, 29, 30 ஆகிய பிரிவுகளின்படி மருத்துவக் கவுன்சிலுக்கு இத்தகையத் தேர் வினை நடத்திட அதிகாரம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட பிறகு,  எங்கிருந்து குதித்தது ‘நீட்’?

மத்திய பி.ஜே.பி. அரசு ஏன் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்? உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட புதிய அமர்வுக்கு யார் தலைமை தெரியுமா?

தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில் அமைந்த அமர்வில் மாறுபட்ட தீர்ப்பினை (‘நீட்’ செல்லும் என்று) வழங்கிய  அனில் தவேதான் அமர்வின் தலைவராம்! எப்படி இருக்கிறது நீதி முறை? நியாயமாக அந்த அமர்வுக்குத் தலைமை தாங்க அனில் தவே மறுத்திருக்கவேண்டும். உச்சநீதிமன்றம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டு நாடே தான் சிரிக்கிறதே!

21.12.2010 இல் இந்த நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தபோது, திராவிட முன்னேற்றக் கழக அரசு கடுமையாக எதிர்த்து, அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த குலாம்நபி ஆசாத்துக்குக் கடிதம் எழுதி, சென்னை உயர்நீதிமன்றத்திலும் உடனடியாக வழக்குத் தொடர்ந்து ‘நீட்’ தேர்வுக்குத் தடை பெற்று, தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை நுழைய விடாமல் தடுத்தது தி.மு.க. ஆட்சி - முதலமைச்சர் கலைஞர் தலைமையில்.

அன்றைக்குத் தி.மு.க. அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, ‘நீட்’ தேர்வு செல்லாது என்று 18.7.2013 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை எப்படி நடத்த முடியும்? இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் உண்டா?

ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம் - ஒரே மதம் என்ற கோட்பாட்டைக் கொண்ட பி.ஜே.பி. மத்தியில் ஆட்சிக்கு வந்ததால் ஏற்பட்ட பெருங்கேடுதானே இது! மறுக்க முடியுமா?

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் அடிப்படையில் அகில இந்திய நுழைவுத் தேர்வாம்! 1.6 சதவிகிதம் மாணவர்களே தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ. திட்டத்தின்கீழ் படிக்கிறார்கள். மீதி 98.4 விழுக்காடு மக்கள் பாதிக்கப்பட வேண்டுமா - இது எந்த ஊர் நியாயம்?

சுதந்திர இந்தியாவில் டெமாக்கிரசி இருக்காது, பிராமினோ கிரசிதான் இருக்கும் என்று சமூகநீதியின் சிற்பி தந்தை பெரியார் 1925 ஆம் ஆண்டில் சொன்னதுதானே இந்த 2018-இலும் நடக்கிறது. சுதந்திர நாளைத் துக்க நாள் என்று அவர் சொன்னபோது ஆதங்கப்பட்டவர்கள் எல்லாம் இதுகுறித்துச் சிந்திக்கவேண்டாமா?

தேர்வு நடத்தியதில்கூட ஒரு நேர்மை உண்டா? மாநிலத்துக்கு மாநிலம்,  மாநிலத்திற்குள் ஆங்கிலக் கேள்வித்தாள் வேறு - மாநில மொழிக் கேள்வித்தாள் வேறு! வெவ்வேறு விதமான கேள்வித் தாளை அளித்தால் அது எப்படிப் பொதுவான போட்டியாக இருக்க முடியும்?

வெளி மாநிலத்தவர்கள் மேய்வதோடு நின்றபாடில்லை - வெளிநாட்டிலிருந்து (Global Entrance) தேர்வு எழுதக் கதவு திறந்துவிடப்பட்டது. இதற்காக எப்பொழுதாவது சட்டம் இயற்றப்பட்டதுண்டா?

மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் எந்த ஒழுங்கு முறையும், சட்ட முறையும், நீதிமுறையும் கிடையவே கிடையாது. தானடித்த மூப்பில் நடந்துகொண்டுள்ளது.

வீதி மன்றம்தான் கடைசித் தீர்ப்பு.

அதனைத் தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடு செய்யும். இந்தியாவுக்கே சமூகநீதியை பெற்றுத் தரும் - இது கல்லின்மேல் எழுத்தாகும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner