எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சாமியார் ராம்தேவ் புற்றுநோய் குறித்து முட்டாள் தனமான கருத்தை தெரிவித்த காரணத்தால் எழுந்த எதிர்ப்பை அடுத்து சென்னை அய்.அய்.டி. வருகையை ரத்து செய்தார்.

சாமியார் ராம்தேவ் குறுகிய காலத்தில் பிரபல மானவர். இவரது தயாரிப்புகள் பல ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி, நேபாளம், கத்தார், பங்களாதேஷ், ஆப்பிரிக்க வணிகச் சங்கிலி அமைப்பில் இணைந்துள்ள ஆப்பிரிக்க நாடுகள் நிராகரித்துள்ளன.

இந்தியாவில் சாமியாருக்கு நெருங்கிய நண்பரான மோடி முக்கியப் பொறுப்பில் இருப்பதால், இவரது நிறுவனத் தயாரிப்புகளில் எந்த ஒரு தவறான செய்தி, ஆய்வறிக்கை வந்தாலும், அதன்மீது நடவடிக்கை எடுப்பதில்லை. மேலும் செய்தி வெளியிட்ட நிறுவனத் திற்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

சென்னை தொழில்நுட்ப நிறுவனமான அய்.அய்.டி. யில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாநாடு ஒன்று 4 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் முக்கிய விருந்தினராக சாமியார் ராம்தேவ் கலந்துகொள்வதாக இருந்தது. இந்த நிலையில் திடீரென சாமியார் ராம்தேவ் மாநாட்டிற்கு வரவில்லை என்று கூறி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா என்பவர் புற்றுநோய் ஏற்பட முந்தைய கர்மவினைதான் காரணம் என்று கூறியிருந்தார். இவரது பேச்சிற்கு பல மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அனைத்து நோய்களுக்கும் மருந்து கொடுக்கிறேன் என்று கூறும் சாமியார் ராம்தேவ் அசாம் மாநில அமைச்சர் பிஸ்வாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் புற்றுநோய் ஏற்பட முற்பிறவிப் பாவம் என்று கூறியது மட்டுமல்லாமல், அத்தோடு இப்பிறவியில் செய்யும் பாவமும் சேர்ந்துகொண்டு புற்றுநோய் உண்டாக்கும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது நெறியாளர் கேட்ட கேள்விக்கு தனது கூற்று உண்மைதான் என்றும், புராணங்களில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன என்றும் கூறியிருந்தார்.

புற்றுநோய் குறித்து மடத்தனமாக கருத்து கூறிய ஒருவரை எப்படி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாநாட்டிற்கு அழைக்கலாம் என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மேலும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரி வித்தனர். இதனை அடுத்து மாநாட்டு நிர்வாகம் சாமியார் ராம்தேவிடம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டாம் என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த மருத்துவப் பேராசிரியர்கள், ‘‘புற்றுநோய் குறித்து மடத்தனமான கருத்தைக் கூறும், அதை நம்பும் நபரை எப்படி அழைக்கலாம்?'' என்று கேட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் தனக்கு அய்ரோப்பிய நாடுகளில் வணிக ஒப்பந்தம் தொடர்பான பணிகள் இருப்பதால் மாநாட்டிற்கு வர இயலாது என்று  சாமியார் மின்னஞ்சல் மூலம் மாநாட்டு நிர்வாகிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்தாலும் வந்தது, மதவாதம் என்ற போர்வையில், மற்ற மதக்காரர்களைச் சீண்டுவது, கலவரம் விளைவிப்பது என்பவை ஒரு பக்கம் என்றாலும், அறிவியலுக்கு மாறான மத எண்ணங்களையும், அறிவியலாகக் காட்டும் அபாயம் தொடர்கிறது. பிரதமர் என்ற நிலையில் உள்ளவரே விஞ்ஞானிகள் மாநாட்டில் அபத்தமாகப் பேசுகிறார் என்றால், சாமியார்கள் சும்மா இருப்பார்களா?

அதுதான் இப்பொழுது நடந்துகொண்டுள்ளது. அய்.அய்.டி.யில் நடக்கவிருந்த மாநாட்டில் அவரைப் புறக்கணித்தது வரவேற்கத்தக்கதாகும். நான்கு இடங் களில் இப்படி நடந்தால், நல்லது நடக்கும் அல்லவா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner