எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிகளின் (9 கட்சிகள்) கூட்டத்தில் காவிரி நதி நீர் உரிமை குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி நீர் உரிமையில் தமிழ் நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்று அக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களுள் ஒன்றாகும்.

அந்த வகையில் நேற்று (12.4.2018) சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டுவதற்குத் தமிழ்நாட்டு மக்கள் கட்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒரே குரலில் பொங்கு மாங்கடலென ஆர்ப்பரித்து எழுந்து நின்றது அசாதாரணமானதே!

மிகப் பெரிய அளவில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை அறிந்த நிலையில், பிரதமர் சாலை வழியாக சென்னையில் பயணிப்பதை அறவே தவிர்த்து ஹெலிகாப்டர் மூலமே தன் பயணத்தை அமைத்துக் கொண்டார்.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிப்பதில் - கருப்புக் கொடி காட்டுவது என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றே.

அந்த வகையில் தமிழ்நாட்டில் பிரதமர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் கூடக் கருப்புக் கொடி காட்டப்பட்டதுண்டு. அவர்களும் அந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை மதித்து அதனைப் பார்வையிட்ட வண்ணம் சென்ற வரலாறெல்லாம் தமிழ்நாட்டுக்கு உண்டு.

ஜனநாயக நெறிமுறைகளில் அறவே நம்பிக்கை இல்லாத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 'எனக்குக் கருப்புக் கொடியா? அதனை ஏற்கப் போவதில்லை!' என்கிற முறையில் ஆகாயத்தில் பறந்து சென்றது - அவருக்குப் பெருமையைச் சேர்ப்பது ஆகாது.

56 அங்குல மார்பளவு கொண்டவன் நான் என்று மார்பு புடைத்துப் பேசிய வீராதி வீரராயிற்றே நரேந்திர மோடி. அந்த வீரம் இப்பொழுது எங்கே போயிற்று என்று சிறுவர்கள்கூட கெக்கலி கொட்டும் நிலைக்கு ஆளாகலாமா?

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் சட்டப்படியும், நியாயப்படியும், நீதிப்படியும் மத்திய அரசு நடந்து கொண்டு இருந்திருக்குமானால் நெஞ்சை நிமிர்த்தி இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தைக்கூட சந்தித்து இருப்பார்.

குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்ததால் மக்களைச் சந்திக்கும் திராணியை அவருக்கு அளிக்கவில்லை என்பதுதான்  உளவியல் ரீதியான காரணமாகும்.

மக்களின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அவர் சந்திக்கத் தயாராக இல்லை என்றாலும் தமிழ்நாட்டு மக்கள் தலை நகரில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும், வீடுகளிலும் கருப்புக் கொடியை ஏற்றியும், கருப்புச் சட்டை அணிந்தும் தங்களின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்களே; அரசின் உளவுத் துறை புள்ளி விவரத்துடன் இவற்றை எல்லாம் பிரதமரின் காதுக்கு எட்டச் செய்திருக்குமே! மாநில அரசு இந்தப் பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் வெட்கக் கேடானது. ஜனநாயக உணர்வை நாங்கள் மதிக்கிறோம் என்று கூறிக் கருப்புக் கொடி ஆர்ப் பாட்டத்தை அனுமதித்து இருக்க வேண்டாமா? மாறாக அவர்களையெல்லாம் கைது செய்ததானது - மோடியின் மீது விழுந்த வெகு மக்களின் வெறுப்பின் அளவில் இவர்களுக்கும் சேர்த்துப் பங்குக் கிடைத்து விட்டதே!

தமிழ்நாடு அரசுக்கு இது தேவைதானா? அதே நேரத்தில் ஒன்று மட்டும் வெளிப்படையாகி விட்டது. மத்திய அரசும், மாநில அரசும் வெகு மக்களின் உணர்வுக்கு எதிர்த் திசையில் பயணித்துக் கொண்டுள்ளன; மக்கள் சரியான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை.

"கோ பேக்ஃ மோடி" என்ற வாசகம் மிக அதிக அளவில் சமூக வலை தளங்களில் முதலிடத்தைப் பிடித்தது என்பது பிரதமர் மோடிக்குத் தேவை தானா? உலகைச் சுற்றும் வாலிபராகப் பறந்து பறந்து செல்லும் பிரதமர் மோடி. இந்த நிகழ்வுக்குப் பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்லுவார்?

ஓருண்மை மிகவும் பச்சையாகத் தெரிந்து விட்டது. கருநாடக மாநிலத்தில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை மனதிற் கொண்டு, அப் பட்டமான அரசியல் இலாபத்துக்காக சட்டம், தீர்ப்பு, நியாயம் இவை அத்தனையையும் புறந்தள்ளி செயல் படுகிறார் பிரதமர் என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தி யாவுக்கே தெரிந்து விட்டது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை நேரில் நேற்றுத் தெரிந்து கொண்ட பிரதமர் நடுநிலையோடு நடந்து கொள்வாரா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner