எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"தமிழகத்தில் நடக்கவிருக்கும் போராட்டங்களை உளவுத்துறை மூலம் அறிந்து ஒடுக்குவதற்கு மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது" என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துச் சென்றுள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய வடுவை விட்டுச் சென்றுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100ஆவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கலாம் என்ற சந்தேகத்தில், அப்படி நடந்தால் அதை ஒடுக்குவதற்கு, மத்திய உளவுத்துறை அதிகாரிகள், தமிழக அரசு உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக உளவுத்துறை அதிகாரிகளுடன், கடந்த ஞாயிற்றுக் கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், உயர் கவனம் செலுத்தி உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய மாநிலமாக தமிழகம் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், இதைத் தொடர்ந்து அதிக எச்சரிக்கையுடன் கவனிக்கப்படும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்திற்கு  தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளதாம். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை கலைப்பதற்கு, எதிர்க்கட்சிகள், இடது சாரிகள் மற்றும் சில தீவிரவாத சக்திகள் போராட்டத்தில்  ஈடுபடலாம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி நம்புவதாக தெரிய வந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்கவும், போராட்டத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளைக் களை எடுக்கவும் மாநில அரசுக்கு அனைத்து வகையிலும் உதவ மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக "டைம்ஸ் ஆப் இந்தியா"வுக்கு பெயர் வெளியிட விரும்பாத உளவுத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன் கூட்டியே கவனிக்கத் தவறிய தமிழக அரசிடம் மத்திய அரசு தனது கவலையை தெரிவித் துள்ளதாம். இந்த நிலையில் தமிழகத்தின் சூழ்நிலையை கவனிக்க கூடுதலாக மத்திய உளவுத்துறை அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.

இதுகுறித்த கூட்டத்தில், மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறையுடன் பல்துறை புலனாய்வு அமைப்புகளுக்கான துணை அமைப்புகள் உளவுத்துறை விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. தமிழகம் முழுவதும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் போராட்டம் வெடிக்கலாம் என்ற சந்தேகத்தில், அவற்றை சரியாக உயர்தொழில்நுட்ப உளவுத்துறை மூலம் கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் மூலை முடுக்கிலும் உளவுத்துறை துப்பறிந்து தமிழக அரசுக்கு உதவும் என்று தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி விஷயத்தில் முதல்வர் பழனிச்சாமி அரசு  வரலாற்றில் ஒரு கறையை ஏற்படுத்திவிட்டது என்று மத்திய அரசு கருதுவதாக உளவுப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இணைந்து கண்காணிப்பை மேற்கொள்ள முடிவு செய் துள்ளனவாம். மத்திய அரசின் பாரத்மாலா பாரியஜனா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சேலம் மற்றும் சென்னையை இணைக்கும் பசுமை வழிச் சாலை அமைக்கப்படுகிறது. சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் உள்ளடக்கிய பகுதிகளில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு ஏற்கெனவே அந்தப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 150 கிராமங்கள் எதிர்வரும் நாட்களில் பலத்த போராட்டத்தில் ஈடுபடலாம் என்று உளவுத் துறையினர் தமிழக அரசை எச்சரித்துள்ளனராம்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மதக் கலவரங்கள், ஜாதிக் கலவரங்கள் கிடையாது. எல்லா மதக்காரர்களும் சகோதரர்களாகப் பழகிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது ஏதோ ஒரு  நோக்கத்தோடு தமிழ்நாட்டில் கால் பதிக்க மத்திய பிஜேபி அரசு திட்டமிடுவதாகத் தெரிகிறது. அதிமுக அரசு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "கோழி திருடியவன் கூடவே உலவுகிறான்" என்ற பழமொழியை நினைவூட்டுகிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner