எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு இந்தி மொழியை முடிந்தவரை எல்லா இடங்களிலும் பலத்த எதிர்ப்புகளையும் மீறி திணித்துக்கொண்டு வருகிறது, அதே நேரத்தில் பிறமொழிகளை முற்றிலும் புறக்கணித்து வருகிறது. 2015-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மத்திய அரசு இணைய நூலகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் சமஸ்கிருதம் மட்டுமே உள்ளது. இது பலத்த எதிர்ப்பை உருவாக்கியுள்ள நிலையில் தற்போது, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்திய ரயில்வே இணையதளமான அய்.ஆர்.சி.டி.சி. வழியாக இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்திற்கான முன்பதிவு இணைய தளமான அய்.ஆர்.சி.டி.சி. ஆங்கிலம் மற்றும் இந்தியில் இரண்டு மொழிகளிலும் தனித்தனியாக இயங்கி வருகிறது. .கடந்த ஜூன் மாதம் இணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்தது. மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் ஆங்கில இணையதளத்தில் இரட்டை மொழி அதாவது இந்தியும் வருகிறது, முக்கியமாக ஊர்ப்பெயரை பதிவுசெய்யும் போது இந்தியில்தான் ஊர் பெயர்கள் முதலில் வருகின்றன. அதன் பிறகே ஆங்கிலத்தில் தோன்றுகின்றன. இந்திக்கு என்று தனியாக இணையதளப் பிரிவு இருக்கும் போது .ஆங்கில இணையதளப் பிரிவிலும் இந்தி திணிக்கப்படுகிறது. இது பிற மொழி மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக உள்ளது. ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய் வோருக்கு வசதி ஏற்படுத்தித் தரும் வகையில்தான் இணையதளம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இந்தியை மேம்படுத்துவதற்காக பொதுச் சொத்தான ரயில்வே இணையதளத்தை பயன்படுத் தக் கூடாது. பயணிகளின் வசதிக்குதான் ரயில்வே முன்னுரிமை கொடுக்க வேண்டுமே தவிர இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கக் கூடாது.

இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் மீது அந்த மொழியை எக்காரணம் கொண்டும் திணிக்கக் கூடாது. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை கொடுத்து காப்பதுதான் அரசின் கடமை. ஒரு மொழியை ஊக்குவித்து மற்ற மொழிகளை புறந்தள்ளுவது ஏற்புடையதல்ல. எனவே, அய்.ஆர்.சி.டி.சி. ஆங்கில மொழி இணைய தளத்தில் உள்ள அனைத்து இந்தி எழுத்துகளையும் உடனே நீக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் தமிழும், இதர மாநிலத்தில் அங்குள்ள மொழியுடன் ஆங்கிலம் வருவதுபோல் மாற்றலாம், அதற்கான வசதிகள் உண்டு. அப்படி இருக்க  இந்தியாவில் இந்தி தவிர வேறெந்த மொழிகளுமே இல்லை என்ற நோக்கில் மத்திய அரசு இந்தி திணிப்பை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி என்று இந்தியைச் சொன்னாலும், உண்மையைக் கூற வேண்டுமானால் இந்தியில் பல பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவர் பேசுவது  இன்னொரு பிரிவைச் சேர்ந்தவர்களுக்குப் புரியாது என்பதுதான் உண்மை.

இந்தி என்பது சமஸ்கிருதம் போட்ட குட்டி என்பதால்தான் அதற்கு  முன்னுரிமை. 1937-1939 ஆட்சியின்போது அன்றைய சென்னை மாநிலப் பிரதமர் ராஜகோபாலாச்சாரியார் - இயோலா கல்லூரியில் பேசும்போது குறிப்பிட்டது என்ன தெரியுமா?

'சமஸ்கிருதத்தைப் படிப்படியாக புகுத்தவே இந்தியைப் புகுத்துகிறோம்' என்றார். ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் 'இந்தியாவின்  மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு சமஸ்கிருதமே' என்கிறார் அவரது 'ஞானகங்கை'யில் (Bunch of Thoughts).

இந்தக் கண்ணோட்டத்தோடு பார்த்தால் தான் இந்தியை எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் திணிக்க முயற்சிக்கும் பிஜேபி ஆட்சியின் நோக்கம் புரியும்.

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற மய்யப் புள்ளியைப் புறந்தள்ளி விட்டு உண்மையை உணர முடியாது - இது கல்லின்மேல் எழுத்து.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner