எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா எப்போதும் போல் பல்வேறு புரட்டுகளை அள்ளி வீசிச் சென்றுள்ளார். முக்கியமாக பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை, பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர், மத மற்றும் ஜாதிக் கலவரங்கள் நடைபெறவில்லை என்று பச்சையாக புளுகித் தள்ளியுள்ளார்.

இன்றைய "டைம்ஸ் ஆப் இந்தியா"வில் சிறப்புச் செய்தியாக குற்ற ஆவணக்காப்பகம் தெரிவிக்கும் புள்ளி விவரங்களின் படி, 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்படி பாலியல் வன்கொடுமைகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் பிரமுகர்கள் ஆவர். இவ்வாறு இவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வருவதும், பாலியல் வன்கொடுமை களில் சிக்கியவர்களை காப்பாற்ற முயல்வதும் அதிகரித்து வருகிறது, உத்தரப்பிரதேசத்தில் பாஜக வழக்குரைஞர் அணித் தலைவர், உன்னாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர், அசாமைச் சேர்ந்த பாஜக கூட்டணியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கியுள்ளனர். இதில் உன்னாவ் சட்டமன்ற உறுப்பினர் சிறையில் உள்ளார். அதே போல் குஜராத் பாஜக பிரமுகர்கள் அரசு வேலை மற்றும் கடனுதவி என்ற பெயரில் பாஜக அலுவலகத்தில் வைத்தே பல இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான குற்றச்சாட்டிற்கு ஆளாகி கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள கத்துவா என்றபகுதியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து 10 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கோவில் பூசாரி, அவரது மகன், ஆர்.எஸ்.எஸ். பிரமுகர், இந்து ரக்ஷா மஞ்ச் அமைப்பில் தலைவர் மற்றும் இரண்டு காவல்துறையினர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள் மீதான புகாரைத் திரும்பப் பெறக் கோரி ஜம்மு-காஷ்மீர் பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பாஜக வழக்குரைஞர் அணியினர், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதியின் முன்னிலையிலேயே குற்ற வாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிடாமல் காலித்தனத்தில் ஈடுபட்டனர்.

தாம்சன் ராய்டர் என்ற செய்தி நிறுவனம் இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது என்று புள்ளி விவரத்துடன் அறிக்கை வெளியிட்டிருந்தது. மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நாங்கள் ஆட்சியில் இருந்துவருகிறோம்  என்று கூறியுள்ளார் அமித்ஷா. எந்த மக்களுக்கு என்பதுதான் இங்கு கேள்வி, இவர்கள் சொல்லும் அத்தனைப் பொய்களுக்கும் மறைக்க முடியாத புள்ளி விவரங்கள் சான்றுகளாக உள்ளன. இதுவரை எந்த ஒரு ஆட்சியும் இவர்கள் போன்று அரசமைப்புச் சட்டத்தை மீறியது கிடையாது, மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையையே நீக்கி விட்டனர். இவர்களாகவே புதிதாக சில பிரிவுகளை உருவாக்கி அதன் மூலம் பார்ப்பனர்களை மட்டுமே நியமிக்க தில்லுமுல்லுகளைச் செய்து வருகின்றார்.

இந்த நான்கு ஆண்டுகாலத்தில் நீரவ் மோடி, விஜய்மல்லையா, மோகுல்பாய் சவுக்சி உள்ளிட்ட 22 தொழிலதிபர்கள் கோடிக் கணக்கான மக்கள் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு நிதானமாக விமானம் ஏறி வெளிநாடுகளுக்குச் சென்று விட்டனர். விஜய்மல்லையாவை பாஜகவைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் விமானநிலையம் வரைவந்து சிறப்பு விருந்தினர்கள் செல்லும் பகுதி மூலமாக அவரை விமானத்தில் ஏற்றி வழியனுப்பியுள்ளார். இந்த விவகாரம் சமீபத்தில் விமான நிலையத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு காமிரா மூலம் வெளியானது. ஆனால் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் "ஒருவரைப் போல் உலகத்தில் 7 பேர் இருப்பார்கள்" என்று கூறியுள்ளார். எப்படியெல்லாம் பேசுகிறார்கள் பார்த்தீர்களா?   ஊழல் குறித்துப் பேசிய அமித்ஷா தலைவராக உள்ள அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை துவங்கிய 2006 நவம்பர் 8 முதல் நவம்பர் 13-வரை 800 கோடி ரூபாய் வரை உயர்மதிப்பு பழைய ரூபாய்த்தாள்கள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து ஏற்கனவே புள்ளி விவரங்களுடன் அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, அசாம், உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மதக்கலவரங்களும், ஜாதிக்கலவரங்களும் நடப்பது அன்றாடம் நடக்கும் குற்றவியல் நிகழ்வுகளாகிவிட்டன. 2018-ஆம் ஆண்டின் துவக்கமே "மகாராஷ்டிராவில் பிமா கோரேகாவ் போர் நினைவிடத்திற்குச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்" என்ற தலைப்புச் செய்தியாகத் துவங்கியது, உத்தரப்பிரதேசத்தில் 2017 ஆகஸ்ட் மற்றும் 2018 பிப்ரவரி மாதங்களில் காஸ்கஞ்ச் பகுதியில் நடந்த மதக்கலவரம் மீண்டும் ஒரு முசபர் நகரை நினைவுபடுத்தியது, முக்கியமாக உச்சநீதிமன்றம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமைச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவந்த பிறகு வடமாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் மிகவும் அதிகமாக மாறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 2017-2018-ஆம் ஆண்டில் 17 ஜாதிக்கலவரங்கள் நடந்ததாக சிட்டிசன் வாட்ச் என்ற பொது நல அமைப்பு புள்ளி விவரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 30 தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலியாகியுள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் உத்தரப்பிரதேசத்தில் சரஹன்பூரில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் ஜாதிக் கலவரமாக வெடித்தது. இதில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருலட்சம் பேருக்கு மேல் டில்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார்கள். ஊழல், ஜாதிக்கலவரம், மதக்கலவரம் தனிமனித உரிமைப் பறிப்பு, நிதி மோசடி போலி வாக்குறுதிகள் என அனைத்துமே கடந்த நான்கு ஆண்டுகளில் இவர்கள் சாதித்துக் காட்டியவைகள். இவை யெல்லாம் உள்துறை அமைச்சகம், பொருளாதார குற்றப்பிரிவு புலானாய்வுத்துறை போன்ற அரசு அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் வெளிவந்த உண்மைகளாகும் .

குடந்தையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் மத்திய பிஜேபி அரசு அகற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மேற்கண்டவை சாட்சியங்கள் அல்லவா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner