எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், 'நீட்' தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சி.டி. செல்வம், ஏ.எம்., பசீர் அகமது அமர்வில்  நடைபெற்று வருகிறது.  சி.பி.எஸ்.இ. சார்பாக வழக்குரைஞர்கள் ஆஜராகி"  பாதிக்கப்பட்ட மாணவர்கள்  யாரும் வழக்கு தொடரவில்லை; பொது நலன் வழக்காக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டுள்ளது" என்றனர்.

அவர்களிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

"நீங்கள் தவறாக கேள்வி கேட்பீர்கள்; பின்னர் அது சரியென்று கூறுவீர்களா..? சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறதா..?

தவறான கருத்துகளை சரியானதாக்க முயற்சிக்க வேண்டாம். இராகத்திற்கு நகம் என்றும், இடைநிலை என்பதற்குப் பதிலாக கடைநிலை என்றும், இரத்த நாளங்கள் என்பதற்குப் பதிலாக இரத்தம் நலன் என்றும் தவறு செய்யப்பட்டுள்ளது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

பீகார் மாநிலத்தில் தேர்வு எழுதியோரைவிட தேர்ச்சி பெற்றவர்கள் எப்படி அதிகரிக்கப்பட்டது? கருணை மதிப்பெண் கேட்டு வழக்கு தொடர்ந்த உடன் அவசர அவசரமாக தரவரிசைப் பட்டியல் வெளியிட்டது ஏன்..?

இவ்வாறு நீங்கள் தவறு செய்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. இது தான் ஜனநாயகமா? இல்லை சர்வாதிகாரமாக செயல் படுவதா..? தவறான கேள்விகள் இருக்கும் போது எப்படி சரியான பதிலை எதிர்பார்ப்பீர்கள்? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

"இதனால் தமிழக மாணவர்கள் வாழ்நாள் கனவு தகர்ந்து போகாதா..? மாணவர்கள் நலன் கருதி சி.பி.எஸ்.இ. செயல்பட வேண்டும்" என்றும் சுட்டிக் காட்டினர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து நேற்று சரியான தீர்ப்பினை வழங்கினர்.  "49 தவறான கேள்விகளுக்கும் 196 மதிப்பெண்கள் அளிக்கப்பட வேண்டும்; புதிதாக தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட பிரதீபா எழுதி வைத்த அந்தக் கடிதத்தை (தனியே காண்க) ஒரு கணம் அசை போட்டுப் பார்க்க வேண்டும்.

'நான் 2018 மே 6ஆம் தேதி தமிழ்மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவி. தமிழ்மொழியில் வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்ததால், அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

"தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி" என்று சொல்வது எத்தகைய உன்னதமான உண்மை என்பதற்கு பிரதீபாவின் கடிதமும், தற்கொலையும் சாட்சியங்கள் அல்லவா?

இந்த 196 மதிப்பெண்கள் கிடைத்திருந்தால் பிரதீபாக்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்க வாய்ப்பு உண்டே! உயர்ஜாதி ஆவணங்களின் தவறுக்காக பிரதீபாக்களின் உயிர் போக்கப்பட்டதே - இதற்கு யார் பொறுப்பு?

'நீட்' குளறுபடிகளை தொடக்கம் முதல் திராவிடர் கழகம் சுட்டி வந்துள்ளது - 'விடுதலை' சுட்டிக் காட்டியதெல்லாம் உண்மை என்று ஆகிவிட வில்லையா.

மதுரை உயர்நீதிமன்றம் எழுப்பிய வினாக்களுக்கு விடை என்ன? தன்முனைப்பாக ஏட்டிக்கு போட்டியாக மேல்முறையீடு செய்து வீண்பழியைச் சுமக்க வேண்டாம் சிபிஎஸ்இ!

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner