எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மன்னார்குடியில் 8.9.2018 சனியன்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தின் வெற்றி விழாப் பொதுக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கை என்பதில் ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்பது இரு கண்கள் போன்றவை. இவற்றை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டபோது - அவற்றிற்கு எவை எவை எல்லாம் இடர்ப்பாடாக முட்டுக்கட்டையாக இருக்கின்றனவோ, அவற்றைத் தகர்க்கும் பணியில் ஈடுபடுவது கட்டாயமானது என்பதுதான் உண்மை.

ஒரு காலம் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் பொது வீதிகளில் நடக்க முடியாது, பொதுக் கிணறுகள், குளங்களிலும் அவர்கள் புழங்க முடியாது, உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிட முடியாது. அவை எல்லாம் தந்தை பெரியார் அவர்களின் மிகப் பெரிய பிரச்சாரத்தாலும் - அவர் கண்ட திராவிடர் கழகத்தின் ஓய்வில்லாப் பணியாலும், போராட்டங்களாலும் மாற்றி அமைக்கப்பட்டன.

சென்னையில் அன்றைய மவுண்ட் ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் உணவு விடுதிகளில் நாய்களும், தொழு நோயாளிகளும், பறையர்களும் உள்ளே நுழையக் கூடாது என்று விளம்பரப் பலகையேகூட வைத்திருந்தனர். இரயில்வே நிலையங்களில் கூட பிராமணாள் - சூத்திராள் இடங்கள் என்று தனித்தனியே ஒதுக்கப்பட்டு இருந்தன. இவை எல்லாம் போராடி ஒழிக்கப்பட்டன.

ஆனால் இன்னும் ஜாதி ஒழிக்கப்பட முடியாமல் மிகவும் பாதுகாப்பாக கோயில் கர்ப்பக் கிரகத்தில் பதுங்கி இருக்கிறது. அந்த ஜாதிப் பாம்பையும் அடித்து விரட்ட வேண்டும் என்ற ஜாதி ஒழிப்புக் கொள்கையின் அடிப்படையில் தான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் போர்க் கொடியைத் தூக்கினார் தந்தை பெரியார்.

மன்னார்குடியில் உள்ள இராஜகோபாலசாமி கோயில் கர்ப்பக்கிரகத்தில் நுழைவுப் போராட்டத்தை 1969இல் அறிவித்தார் தந்தை பெரியார்.

அன்றைய முதல் அமைச்சராக இருந்த மாண்புமிகு மானமிகு கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழி சீடரானதால் போராட்டத்திற்கு இடம் அளிக்காமல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் சட்டம்  ஒன்றை நிறைவேற்றினார். (30.11.1970).

அதனை எதிர்த்தும் 13 பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக  சட்டத்தின் நோக்கம் நிறைவேறிடவில்லை. அதற்குப் பிறகு 2006ஆம் ஆண்டில் மறுமுறை திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டு  - அதனை எதிர்த்தும் பார்ப்பனர்கள் உச்சநீதின்றம் சென்ற நிலையில், 2015ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்  ஆக எந்தவிதத் தடையும் இல்லை. அதன் அடிப்படையில்தான் மதுரையில் அய்யப்பன் கோயிலில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாரிசாமி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் பொருள் என்ன? தமிழ்நாட்டின் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக நீதிமன்ற தடையோ, அரசின் சட்டத் தடையோ ஏதுமில்லை என்பது நிரூபணமாகி விட்டது.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்த மன்னார்குடி பொதுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இன்றைக்குப் பெரும்பான்மையான கோயில்களில் ஆகமங்கள் தெரிந்தவர்கள் - மந்திரங்களை உரிய முறையில் உச்சரிக்கத் தெரியாதவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டாக்டர் ஏ.கே. ராஜன் அவர்களின் தலைமையில் அமைத்த குழு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் நேரடியாக சென்று, அங்கு என்ன நடக்கிறது என்று ஆய்வு நடத்தியபோது, அதிர்ச்சி நிறைந்த ஒரு உண்மை வெளிப்பட்டது.

வைணவக் கோயில்கள் தமிழ்நாட்டில் 108 இருக்கின்றன 106 கோயில்களுக்கு இந்தக் குழு சென்று ஆய்வு நடத்தியபோது வெறும் 30 வைணவக் கோயில்களில் உள்ள அர்ச்சகர்களுக்குத்தான் ஆகமங்கள் தெரிந்தவர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல பிரசித்தி பெற்ற சைவக் கோயில்களின் நிலைமை என்ன? மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றும் 116 அர்ச்சகர்களில் ஆகமங்கள் தெரிந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 28 தான், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மொத்த அர்ச்சகர் 41, இதில் ஆகமம் தெரிந்தவர்கள் வெறும் நான்கே பேர்கள்தான்.

இந்த ஆய்வுக் குழுவில் சிவாச்சாரியார்களும், பட்டாச்சாரியார்களும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் முறையாகப் பயின்று தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 200க்கும் மேற்பட்டவர்களை நியமனம் செய்வதில் தமிழ்நாடு அரசுக்குத் தயக்கம் ஏன் என்ற வினாவும் மன்னார்குடி பொதுக் கூட்டத்தில் எழுப்பப்பட்டது.

இதில் இன்னொரு முக்கிய தகவல் ஒன்று இருக்கிறது. சென்னையில் உள்ள சிவா - விஷ்ணு கோயிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலும், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும் ஆகம முறைப்படி கட்டப்பட்ட கோயில்கள் அல்ல; இந்தக் கோயில்களில் கண்களை மூடிக் கொண்டு பயிற்சி பெற்ற நிபுணர்களை நியமிக்கலாமே!

பக்கத்து மாநிலமான கேரளாவில் இது முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும்போது அதற்கு முன்னோடி மாநிலமான தமிழ்நாடு இதில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதானே. அதனைத்தான் மன்னார்குடி வெற்றி விழாப் பொதுக் கூட்டம் வலியுறுத்தியது.

தந்தை பெரியாரால் போராட்டம் அறிவிக்கப்பட்ட அதே மன்னார்குடியில் அதன் வெற்றி விழா நடைபெற்றது வரலாற்று ரீதியான பொருத்தமேயாகும்.