எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிவுலக ஆசான்  தந்தை பெரியார், அவர்தம் தலை மாணாக்கரான அறிஞர் அண்ணா, மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் மூவரும் இல்லாத நிலையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்த நாள் விழாக்களை இவ்வாண்டு கொண்டாட இருக்கிறோம்.

அவர்கள் உயிரோடு நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர்களின் உயிரோட்டமான கொள்கைகளுக்கும், இலட்சியங்களுக்கும் மரணம் என்பது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லிச் சென்ற பாடம், புகட்டிச் சென்ற திராவிட இயக்கச் சித்தாந்தம் முன்னிலும் அதிகம் தேவைப்படக் கூடிய கால கட்டம் இது. ஒருபடி மேலே சென்று கூற வேண்டுமானால் தமிழ்நாட்டின் எல்லைகளையும் கடந்து இந்தியத் துணைக் கண்ட பரப்பெல்லாம் இந்தக் கொள்கைகள் தாவிப் படர வேண்டிய அவசியம் இப்பொழுது முகிழ்த்துள்ளது.

நேற்று சென்னைப் பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் படத் திறப்பு விழாவில் பேசிய தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களும் சரி, திமுக செய்தித் தொடர்பாளர் மானமிகு டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. அவர்களும் சரி - வெளிப்படுத்திய நுண்ணிய கருத்துகள் முக்கியமானவை.

தேவாசுரப் போராட்டம் என்னும் ஆரிய - திராவிட போராட்டம் என்பது நீண்ட காலமாக நடைபெற்று வரும் போராட்டம் என்றாலும் இந்தக் கால இளைய தலைமுறையினர் அப்பட்டமாகத் தெரிந்து கொள்ளும் வகையில் பச்சையான  பார்ப்பனத்தனம் அரசியல்  என்ற பெயரால் நடந்து கொண்டுள்ளது. குறிப்பாக மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ) என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மைக்கு நேர் எதிரான கொள்கையையும், போக்கையும் கொண்டதாகும். இந்து ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லக் கூடிய கொள்கைக் கோட்பாடுகளைக் கொண்டதாகும்.

ஒரு குடியரசு தின விளம்பரத்தில் 'செக்குலர்' என்ற சொல்லைத் திட்டமிட்டு இருட்டடித்து, மத்திய அரசு - அரசு விளம்பரமாக ஏடுகளுக்குக் கொடுக்கிறது என்றால் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படையாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ளலாமே!

குடியரசு துணைத் தலைவராக இருக்கக் கூடியவர் அமெரிக்காவில் நடைபெற்றுள்ள உலக இந்து மாநாட்டில் பச்சையாகக் கலந்து கொள்கிறார் என்றால், இதன் தகமையை பட்டவர்த்தனமாகப் புரிந்து கொள்ள முடியுமே!

குருகுலக் கல்வி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தத் துடிப்பதன் உண்மைத் தன்மை என்ன? சமஸ்கிருதத்தை எல்லா மட்டத்திலும் கொண்டு வர வேண்டும் என்ற வேகத்தில் காய்கள் நகர்த்தப்படுவதன் தாத்பரியம் என்ன? கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க இருக்கிறோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஸ்மா ஸ்வராஜ் டில்லியில் நடைபெற்ற விழாவில் வெளிப்படையாகப் பேசினாரே!

கீதை என்பது வருணாசிரமத்தை வலியுறுத்தும் நூல் அல்லவா? நானே உண்டாக்கிய இந்த நால் வருணத்தை, அதைப் படைத்த நான் நினைத்தாலேகூட மாற்றி அமைத்திட முடியாது என்று கீதாசிரியன் என்று கூறப்படும் கிருஷ்ணனே கூறுவதாகக் கீதை சொல்லுகிறதே!

இந்து மதத்தில் மாட்டுக் கறி உணவு, பசு உணவு அனுமதிக்கப் பட்டவை என்றாலும் புத்த மார்க்கத்தின் எழுச்சியினால் வீழ்ச்சியுற்ற ஆரிய மதமான இந்து மதம், தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள கொல்லாமையை - மாமிச உணவு உண்ணாமையை வரித்துக் கொண்டது என்பதுதானே வரலாற்று ரீதியான உண்மை.

பசுவைக் கோ மாதாவாக்கிப் புனிதம் என்பதெல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்திக் கொண்டதாகும். இன்றைய நிலை என்ன? பிஜேபி ஆளும் மாநிலங்களில் எல்லாம் மாட்டுக்கறி உணவுக்குத் தடை என்பது சட்டரீதியாக ஆக்கப்பட்டு விட்டதே.

பசு பாதுகாப்பு என்ற பெயரால் வன்முறையை ஏவி - சட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே ஆர்.எஸ்.எஸ். உள்ளடக்கிய சங்பரிவார்கள் எடுத்துக் கொள்ளவில்லையா? செத்த பசு மாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதுண்டே!

சிறுபான்மையினரைப் பற்றி எப்படியெல்லாம் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள்; லவ்-ஜிகாத் என்ற பெயரில் இந்துத் துவாவாதிகள் போடும் ஆட்டம் கொஞ்சமா, நஞ்சமா?

சமூகநீதிக்குக் கல்லறை எழுப்பும் காரியங்கள் வேகவேகமாக நடைபெறவில்லையா?

இந்த நிலையை மய்யப்படுத்தித்தான் நேற்று சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் நூலக வாசகர் வட்ட விழாவில் கருத்துரை ஆற்றும் போது தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னார்கள்.

கொள்கைப் போர், சித்தாந்தப் போர் இரண்டு அணிகளுக்கிடையே வெளிப்படையாக அடையாளத்துடன் தெரியவருவதால், இந்தக் கால கட்டத்தில் திராவிட இயக்க சுயமரியாதைத் தத்துவம் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர் மத்தியில் வேர்ப் பிடிப்பதற்கான நல்வாய்ப்பு மிக அருமை யாகவே கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை நாம் நல்ல வகையிலே பயன்படுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

திமுகவைப் பொருத்த வரையில் கடந்த 25 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நின்று போராட வேண்டி இருந்தது. இப்பொழுது அரசியல் களமும் மதவாதமாகி விட்டதால், கொள்கைப் போர் நடத்தக் கூடிய நல்லதோர் சூழ்நிலை அரும்பி விட்டது. அதைத்தான் திமுக தலைவராகப் பொறுப்பேற்ற தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், தலைமை பொறுப்பேற்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் - காலக் கட்டத்தில் காவிக்கு எதிரான கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டார்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் இல்லாத இந்தக் கால கட்டத்தில் அவர்கள் போற்றிய  அந்தக் கொள்கைக் கோட்பாடுகளை தீவிரமாக எடுத்துச் செல்ல அய்யா, அண்ணா பிறந்த நாளில் உறுதி கொள்வோம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner