எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடக மாநிலத்தில் செயல்பட்டுவரும் ராஜீவ் காந்தி மருத்துவம் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி யுள்ளது.

தேர்வின் போது மாணவர்கள் விடைத்தாளின் மேல் பகுதியில் பிள்ளையார் சுழி இடுவது, நாமம் போடுவது, சிலுவைக் குறிகள் இடுவது மிகவும் மோசமான மூடநம்பிக்கைத் தனமாகும்.  படிக்கும் மாணவர்கள் தங்களின் உழைப்பு, தன்னம்பிக்கை மீது நம்பிக்கை வைக்கவேண்டும்; அதைவிட்டுவிட்டு தேர்வில் கடவுள் காப்பாற்றுவார் என்றும், தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தவராக காட்டிக்கொண்டால் திருத்தும் ஆசிரியர் மதிப்பெண்கள் அதிகம் போடுவார் என்றும் சில மாணவர்கள் நினைக்கின்றனர்.

சமீப காலமாக இந்தப் பழக்கம்  மிகவும் அதிகரித்துள்ளது, அதுமட்டுமல்லாமல் சில பள்ளிகள் இதை ஊக்குவிக்கவும் செய்வது மகா மகா கொடுமையும், அறிவிலித் தன்மையும் ஆகும்.

சென்னை மற்றும் மதுரையில் உள்ள சில பள்ளிகள் 12 ஆம்வகுப்பு மற்றும் 10 ஆம்வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டை கோவிலில் வைத்து பூஜைகள் செய்து அந்த நுழைவுச் சீட்டில் குங்குமம், சந்தனம் போன்றவற்றை வைத்துக் கொடுத்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள ஒரு மதம் சார்ந்த கல்வி நிறுவனம் பாதபூஜை என்ற பெயரில் மாணவர்கள் ஆசிரியர்களின் காலைக்கழுவும் நிகழ்ச்சியை நடத்தி அதை ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை இதுவரை தமிழகக் கல்வி அமைச்சரோ, பள்ளிக்கல்வித்துறை நிர்வாகமோ கண்டிக்கவில்லை. இவை சுயமரியாதைக்கு இழுக்கான ஒரு செயல் என்று யாரும் அறிவுறுத்தாத நிலையில், கருநாடகாவில் ராஜீவ்காந்தி சுகாதாரம் மற்றும்  பொறியியல் பல்கலைக்கழகம் இனி தேர்வு களின்போது மதச்சின்னங்களை எடுத்து வருவது மற்றும் விடைத்தாளில் மதக்குறியீடுகளைப் பயன் படுத்துவது கூடாது என்று புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை கடந்த  அக்டோபர் 1ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஒருவேளை மாணவர்களின் விடைத்தாளில் கடவுள் பெயர் அல்லது குறியீடு, வேறு ஏதாவது வகையில்மதம் தொடர் பான சின்னங்கள் இடம்பெற்றால் அந்த விடைத்தாளைத் திருத்த ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளமாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது விவேகம் மணக்கும் வரலாற்றுத் தகவல் என்பதில் அய்யமில்லை.

இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் எம்.கே.ரகேஷ் என்பவர்  "விடைத்தாளில் ஓம், உள்ளிட்ட குறியீடுகள் அதிகம் இடம் பெறுகின்றன. இது தேவையற்ற ஒன்றே!  விடைத்தாள் பல்கலைக்கழகம் கொடுக்கும் ஒன்று, அதில் தேர்வெழுதும் மாணவர்கள் தங்களின் நம்பிக்கையைக் கொண்டுவரக்கூடாது" என்று கூறினார்.   மேலும் தேர்வு மேற்பார்வையாளர் சந்தியா அத்வானி, "மதக் குறியிடுவது போன்ற செயல்கள் மிகவும் தவறானதாகும், இது விடைத்தாளைத் திருத்தும் பணியை மேற்கொள்பவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும், இப்படி மதக்குறிகள் இடுவது தவறு என்று நாங்கள் ஒவ்வொரு தேர்விலும் மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் மாணவர்கள் எங்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி விடுகின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும். விடைத்தாளை திருத்தம் செய்பவர்களும் இனி எவ்விதமன நெருடலுமின்றி பணியாற்றுவார்கள்" என்று கூறினார். ராஜீவ் காந்தி சுகாதார பல்கலைக்கழகத்தின் கீழ் 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் வருகின்றன. இவை அனைத்திற்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கருநாடக மாநிலத்தில் இயங்கும் ராஜீவ்காந்தி சுகாதார பல்கலைக் கழகத்தின் இந்த முடிவு ஏதோ ஒரு பல்கலைக் கழகத்திற்கானது என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இந்தியா முழுவதும் தேர்வு எழுதும் ஒவ்வொரு இருபால் மாணவர்களும் கண்டிப்பாகக் கடைபிடிக்கச் செய்ய வேண்டிய அகர முதலி என்பதில் அய்யமில்லை. முதலில் ஆசிரியர்கள் தெளிவு பெற வேண்டியதும் முக்கியமானதாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner