எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியதாவது, "இட ஒதுக்கீடு முறை இல்லையென்றால், விளிம்பு நிலையில் இருப்பவர்கள் எப்படி முன்னுக்கு வருவார்கள்? இட ஒதுக்கீடு குறித்து இருக்கும் சட்டத்தை மாற்ற இந்த நாட்டில் யாருக்கும் அதிகாரம் கிடையாது. இட ஒதுக்கீடு முறையைக் காக்க எங்களால் ஆன அனைத்து வித முயற்சியிலும் நாங்கள் இறங்குவோம்; சிலர் அரசியல் ரீதியில் விளம்பரம் தேடவும், ஊடகங்களில் பெயர் வருவதற்கும் இட ஒதுக்கீடு குறித்து எதிர்மறையான தகவலைப் பேசிக்கொண்டு இருக்கின்றனர். இது குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை. இட ஒதுக்கீடு என்பது நாட்டின் முதுகெலும்பு போன்றதாகும். ஆகவே, இட ஒதுக்கீட்டை ஒழிக்கும்  பேச்சிற்கு இங்கே இடமில்லை, ஒழிப்பிற்கும் எக்காலத்திலும் வாய்ப்பில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் இட ஒதுக்கீட்டிற்குப் பாதிப்பு வரும் போது அதற்காக போராட வீரியமுள்ள அரசியல் தலைவர்கள் முன்வருவார்கள்" என்று கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வ ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான விவாதப் பேச்சும் ஒரு காரணம் என்ற கருத்துண்டு. பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு பாஜகவினரே மோகன் பகவத் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசியிருக்கக் கூடாது என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.  இதே போல் நாடாளுமன்ற மக்களவை தலைவர் சுமித்திரா மகாஜன் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவே பேசிக்கொண்டு வருகிறார்.   சமீபத்தில் டில்லியில் இட ஒதுக்கீட்டை ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கம் ஒன்று சில பார்ப்பன அமைப்புகளால் நடத்தப்பட்டது. இந்த அமைப்பின் பின்னால் பாஜக டில்லி மாநில தலைவர் மற்றும் பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் போன்றோர் உள்ளனர் என்றும் கூறப்பட்டது.    பாஜகவின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜவர்தன் ராத்தோட், ஸ்மிருதி இரானி, போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி போன்றோர் சமயம் கிடைக்கும் போதெல்லாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசி இட ஒதுக்கீட்டு எதிர்ப்புத் தீயை ஆற விடாமல் பார்த்துக்கொண்டு வருகின்றனர்.  நிதீஷ்குமார் இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என்று கூறிக் கொண்டே இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்களுடன் உறவுகொண்டாடிவருகிறார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பீகார் முதல் அமைச்சர் நிதீஷ்குமாரும் சரி, மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானும் சரி சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் என்பதில் அய்யமில்லை. அதே நேரத்தில் சமூகநீதிக்கு எதிரான நச்சு வேலைகளை நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு திட்டவட்டமாக செய்து கொண்டு தானே இருக்கிறது.

குறிப்பாக 'நீட்' தேர்வை எடுத்துக் கொள்ளலாமே! இந்தியாவிலேயே தமிழ்நாட்டு மண்ணின் தனிக் குணாம்சத்தின் அடிப்படையில் 'நீட்'டை எதிர்த்து இரு மசோதாக்களை தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டதே - அது என்னாயிற்று?

கிரீமிலேயரில் மாத வருமானத்தைச் சேர்க்கக் கூடாது என்பதை நீக்கி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மிகப் பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதே நிதீஷ்குமார்கள் கண்டு கொள்ளாதது ஏன்?

கூட்டணி தயவில் தானே மோடி அரசு இப்பொழுது நிலை கொண்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் இந்தக் கால கட்டத்தில் சமூகநீதியில் நம்பிக்கையுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடஒதுக்கீட்டை கூட்டணிக்கான முக்கிய நிபந்தனையாக வைக்க வேண்டும். இல்லையெனில் சமூக நீதிபற்றி ஒப்புக்காகப் பேசுவதாகவே கருதப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner