எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சபரிமலை விவகாரத்தில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் வழிபாட்டிற்கு செல்லலாம் என்ற வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கியது உச்சநீதிமன்றம். ஆனால் இதற்கு குறிப்பிடப்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக உறுப்பினரும், மத்திய அமைச்சருமான உமா பாரதி, "சபரிமலை விவ காரத்தில் உச்ச நீதிமன்றத்தை குறை சொல்லக் கூடாது. மக்கள் நியாயம் வேண்டி நீதிமன்றத்தை அணுகினால், நீதிமன்றம் அதற்கான தீர்ப்பினை வழங்குகிறது. இங்கு நான் நீதிமன்றத்தை குறை சொல்லமாட்டேன்" என்று  கூறியிருக்கிறார். பாஜக தலைவர் அமித்ஷா சிறிது நாட்களுக்கு முன்பு, கேரள மாநிலம் கண்ணூரில் "தங்களால் நிறைவேற்ற இயலாத ஒன்றை தீர்ப்பாகவோ உத்தரவாகவோ வழங்காதீர்கள்" என்று நீதிமன்றத்திற்கும், அரசிற்கும் கட்டளைபோல அறிவித்திருந்தார்.

இந்நிலையில் உமா பாரதி சபரிமலை குறித்து பேசியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே! "ஒரு பெண்ணை கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று யாரும் அவளுக்குக் கூற வேண்டிய அவசியம் இல்லை. அது தனி நபர் நம்பிக்கை. அதே போல் ஒரு பெண்ணிற்கு எப்போது கோவிலுக்குச் செல்ல வேண்டும், எப்போது செல்லக் கூடாது என்பதெல்லாம் தெரியும். எனவே ஒருவர் ஒரு பெண்ணை கோவிலுக்குள் செல்லக் கூடாது என்று கூறுவது சரியானதல்ல" என்றும் கூறியுள்ளார்.

ராமர்கோவில் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் அனைத்து மக்களுக்கும் விருப்பம் இருந்தால் அங்கே ஒரு கோவில் உருவாகும். சோமநாத ஆலயம் கட்டுவதில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்தது போலே ஒன்று கூடினால் ராமர் கோவிலும் கட்டப்படும். காங்கிரஸ், இடதுசாரிகள், மற்றும் சோசியலிச கட்சிகள் என அனைவரும் ஒன்று கூடினால் அங்கே ராமர் கோவில் வரப்போகிறது என்று அவர் கூறியிருக்கிறார். மற்ற பாஜகவினர் போல் ராமர் கோவிலைக் கட்டுவதை சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை அவர் விடுக்கவில்லை  ராமர் கோவில் என்பது இடம் தொடர்பான பிரச்சினையே அன்றி நம்பிக்கை தொடர்பான பிரச்சினை இல்லை.

ஒரு கட்டடத்தையும், ராமரின் பிறப்பிடத்தையும் ஒன்று சேர்த்து பார்க்க இயலாது என்று  ஒருபடி மேலே சென்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும், ராகுல் காந்தி, சோனியா காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், மற்றும் மம்தா பானர்ஜி போன்றவர்கள் "ராமர் கோவில் விவகாரத்தை நாங்கள் (பிஜேபி) ஓட்டிற்காக பெரிய விடயமாக்கு கின்றோம் எனக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் கலந்தாலோசித்து இதற்கு ஒரு முடிவினை கொண்டு வரட்டும்" என்று கூறியிருக்கின்றனர்.

தேர்தலுக்காக இதை பெரிய விடயமாக்குகிறதா பாஜக என்ற கேள்விக்கு உமாபாரதி தேர்தல் வருகின்ற நேரத்தில் ராமர் கோவில் பற்றிய பிரச்சினைகளும் எழத் தொடங்கியுள்ளன என்று கூறியிருக்கிறார். ராம் ஜென்மபூமி எனபது வெற்றியா தோல்வியா என்பதற்கான வாதமில்லை என்றும் கூறியுள்ளார். இவ்வளவுக்கும் பாபர் மசூதி இடிப்பில் முக்கிய குற்றவாளி பட்டியலில்  உள்ளவர்தான் இந்த செல்வி உமாபாரதி. சபரிமலை பிரச்சினையிலும், ராமஜென்ம பூமி பிரச்சினையிலும் தனித்தன்மை யுடன் தன் கருத்தைப் பதிவு செய்திருப்பதுதான் ஆச்சரியம்.

பிஜேபி என்பது "பிராமின் பார்ட்டி" என்று சொன்னவரும் இவரே! பிஜேபியில் இருந்து கொண்டு பிற்படுத்தப்பட்டோரின் சமூக நீதிக்காகவும், குரல் கொடுத்து வந்திருக்கிறார். இதன் காரணமாக உமாபாரதி போன்றவர்களுக்கு பிஜேபியில் முக்கிய இடமில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

மத்திய பிரதேச முதல் அமைச்சராகவிருந்த உமாபாரதி ஒரு வழக்கின் காரணமாகப் பதவி விலக நேர்ந்தது; வழக்கில் குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், மத்திய பிரதேச முதல் அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்படவில்லை என்பது எதைக் காட்டுகிறது?

பிஜேபி என்பது "பிராமின் பார்ட்டி" என்று சொன்னாரே உமாபாரதி - அதுதான் நினைவிற்கு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner