எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் உள்ள தன் முனைப்புகளை (ஈகோ) மறந்து ஒன்றிணைந்து மத்திய மதவாத அரசை வீழ்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (3.11.2018)

அதற்கான காரணங்களை எண்ணிப் பார்ப்போம்.

2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்போது ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்களித்தது பாஜக. ஆனால் ஆட்சியமைத்து நான்காண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில் சில லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன என்பது மட்டுமல்லாமல், பலர் வேலை இழக்கும் நிலையும் அதிகரித்துவருகிறது. நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் திட்டமிடல் துறையின் இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், நாட்டில் வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவதை ஒப்புக் கொண்டுள்ளார். 2016-ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 5 விழுக்காட்டில்  இருந்து 5.2 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

1990-களில் இந்தியாவின் மக்கள்தொகை மிகவும் அதிகரிக்கத் தொடங்கியது. 1990-களில் பிறந்தவர்கள் இப்போது கல்வி முடித்து வேலைச் சந்தைக்குள் நுழையும் இளைஞர்களாகியிருக்கிறார்கள். அதன்படி ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு கோடியே 20 லட்சம் புதியவர்கள் வேலைச் சந்தைக்குள் நுழைகிறார்கள். ஆனால் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 2015-இல் ஒரு லட்சத்து 50 ஆயிரம்; 2016-இல் இரண்டு லட்சத்து 30 ஆயிரம். இதோடு தகவல் தொழில்நுட்பத் துறையில் (அய்டி) ஆட்குறைப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. இதனால் இந்தத் துறையைச் சார்ந்துள்ள வேலைகளும் இல்லாமல் போகும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேலைவாய்ப்பின்மை எப்போதும் மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்துவந்துள்ளது. 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த அய்டி துறை புரட்சியால் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தன.

புறநகர்கள், சிற்றூர்கள், கிராமப் புறங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அய்டி வேலையும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பான வாழ்க்கையும் கிடைத்தது. ஆனால் அதுவும் கடந்த சில ஆண்டுகளாகத் தொய்வடைந்துவருகிறது. நாடெங் கும் பல அய்டி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கப்படும் அதிர்ச்சிகரமான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே உள்ளன. குறிப்பாக மூத்த (சீனியர்) பணியாளர்களை வெளியில் அனுப்புகிறார்கள்.

இதே போன்று விவசாயிகளின் தற்கொலை வரலாறு காணாத அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, விவசாயிகள் போராட்டம் தலைநகர் டில்லியில் தொடர்ந்து நடந்துவருகிறது, மிகவும் மோசமான ஒரு காலகட்டத்தை தாங்கள் சந்தித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துவருகின்றனர். உரிமைக்காகப் போராடும் மக்களை கொலை செய்வதும், கைதுசெய்து சிறையில் தள்ளுவதும் தொடர்கதையாகிவிட்டது. தான் ஆட்சிக்கு வந்தால் ரூ.15 லட்சம் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் செலுத்துவேன் என்று கூறியது தேர்தல் வரலாற்றில் மிகப் பெரிய பொய் ஆகும். இதை சமீபத்திலும் பா.ஜ.க. மத்திய அமைச்சர் நிதின்கட்கரியே, "எங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று நினைத்து உலகில் யாராலும் செய்ய முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். நாங்களே எதிர்பார்க்காத நிலையில் மக்கள் எங்களைத் தேர்தெடுத்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளாரே!

* இந்திய கலாச்சாரத்தின் புராதன சின்னமாக ராமர் பாலம் திகழ்கிறது. அப்பகுதியில் ஏராளமான தோரிய கனிம வளம் உள்ளது. எனவே, இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

* உள்ளூர்த் தொழில்கள் பாதிக்காத வகையில், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வருமான வரி விதிப்பு எளி மைப்படுத்தப்படும்.

* தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். புல்லட் ரயில்கள் இயங்கும் வகையில் நகரங்களுக்கு இடையே வைர நாற்கரத் திட்டம் கொண்டு வரப்படும்.

* தேசிய அளவிலான பதுக்கல், கள்ளச் சந்தை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். விலை வாசியை நிலைப்படுத்தி கண்காணிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும். விவசாய தேசிய சந்தை அமைக்கப்படும்.

* ஊழலை ஒழிக்கவும், வெளி நாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* மத்திய, மாநில அரசுகளிடையே இணக்கமான உறவை பராமரிக்கவும், மாநிலங்களுக்கிடையே பிராந்திய கவுன்சிலை உருவாக்கி பொதுவான பிரச்சினைகளை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீதிபதிகளை நியமிக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண் களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு செய்ய சட்ட மியற்றப்படும். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறைக்கு முடிவு கட்டப்படும். குறைந்த விலை வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

* முஸ்லிம் மதத்தினரின் மதரஸாக்களை நவீனப்படுத்தவும், வக்பு வாரியத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். உருது வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம், மத நல்லிணக்கத்துக்கான ஆலேசனை அமைப்பு ஆகியவை கொண்டு வரப்படும். மதரஸாக்களில் கணிதம், அறிவியல் பாடங்கள் அறிமுகப் படுத்தப்படும். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துதல், நிர்வாக முடக்கத்துக்கு முடிவு கட்டுதல், தொழில்துறை ஒப்புதல்களுக்கு ஒற்றைச் சாளர முறையைக் கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

* இந்தியாவுக்கு முதலிடம் என்பதே அரசின் கொள்கை யாகவும், மதமாகவும் இருக்கும்.

* மக்களின் நலனே அரசின் பிரார்த்தனையாக இருக்கும். ஒரே இந்தியா, வளமான இந்தியா என்பதே பாஜகவின் கோஷம் - என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை நிலை என்ன?

எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு  விரோதமாக மதவாத கண்ணோட்டம் தலை விரித்து ஆடுகிறதே!

வாக்குறுதிகள் என்னாயிற்று? 2019 தேர்தலுக்கு முன்பாக எடை போட்டுப் பாருங்கள். இறுதி முடிவுக்கு வாருங்கள் - இன்றைய மத்திய ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner