எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சபரிமலை கோவில் பிரச்சினையை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லோரும் நம்மிடம் சரண் அடையும் நிலைக்கு ஆளாகிவிட்டனர் என்று கேரள பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை  பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.  சபரிமலை கோவில் பிரச்சினையை எப்படி அரசியலாக்க வேண்டும் என்று அவர் பேசியதும் இதில் பதிவாகி உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சபரிமலை கோவில் மீண்டும் திறக்கப்படும் சூழலில் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் திறந்த போது நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் கேரளா பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை பேசி இருக்கிறார். பாஜக உறுப்பினர்கள் முன்னிலையில் பேசியுள்ளார் என்பதுதான் முக்கியம். இதில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது கசிந்து இருக்கிறது. மலையாள அலை வரிசைகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளன. அதில் கேரளா பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை, "இந்த சபரிமலை பிரச்சினைதான் கேரள பாஜகவிற்கு பொன்னான வாய்ப்பு. இதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இந்துக்கள் எல்லோரும் நம்மிடம் சரண் அடையும் நிலைக்கு வந்துள்ளனர். அரசால் இந்தப் பிரச்சினையை எளிதாகத் தீர்க்க முடியாது.

நாம் சபரிமலைக்குச் சென்றோம். அங்கு நாம் செய்ய வேண்டியதை செய்து வருகிறோம். நாம் இதில் பெரிய வெற்றி அடைந்து இருக்கிறோம். சிறீஜித் அய்பிஎஸ் அந்த கோவிலுக்குள் பெண்களை அழைத்துச் செல்ல முயன்ற போது, மக்களை அழைத்து வந்து அதை தடுத்து நிறுத்தியது நாம்தான். வெளி உலகத்திற்கு இது தெரியாது. இன்னும் நாம் இதில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.  சபரிமலை தலைமை தந்திரி என்னிடம் பேசினார்.  அவர் முதலில் பெண்கள் உள்ளே நுழைந்தால் கோவிலை மூடிவிட முடிவெடுத்து இருக்கிறார். அதன்பின் நீதிமன்றத்திற்குப் பயந்துள்ளார். நான்தான்  கோவிலை மூடுங்கள் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர்களுக்கு பாஜகவை தவிர வேறு யாருமில்லை. அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குப் பயந்தார். ஆனால் நான்தான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் எங்கள் மீதுதான் வரும், நீங்கள் துணிந்து நடவடிக்கை எடுங்கள் என்று கூறினேன்" என்று அந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.

இந்த வீடியோதான் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்த வீடியோவில் பேசப்பட்டு இருப்பது உண்மைதான் என்று கேரளா பாஜக தலைவர் சிறீதரன் பிள்ளை ஒப்புக் கொண்டுள்ளார். கோவில் தந்திரிக்கும் சட்ட ரீதியான ஆலோசனைதான் வழங்கினேன் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் கூறியது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். இந்த வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

பாரதிய ஜனதாவைப் பொறுத்த வரையில் அத னிடம் கை வசம் இருப்பது எல்லாமே மதவாதம்தான். மக்கள் மத்தியில் பரம்பரைப் பரம்பரையாக ஊறியுள்ள கடவுள், மத சம்பிரதாய நம்பிக்கைகளைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடுவது ஒன்றுதான் அவர்களிடம் உள்ள ஒரே கைச் சரக்கு.

பிஜேபியை எதிர்க்கும் கட்சிகள் இதனை மனதிற் கொண்டு செயல்பட வேண்டும்.

அதற்கு மாறாக பா.ஜ.க.வை காப்பியடித்து, போட்டிப் போட்டுக் கொண்டு மத அடையாளங்களைக் காட்டிக் கொள்வது எல்லாம் (ராகுல்காந்தி பூணூல் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் செல்லுவது உட்பட) பா.ஜ.க.வுக்கே சாதகமாக முடியும்.

மதம் தனி மனிதனைச் சார்ந்தது; மதச் சார்பின்மைதான் ஆட்சியின் கொள்கை, அரசமைப்புச் சட்டத்தின் சாரமும் அதுதான் என்கிற வகையில் பிரச்சாரத்தை முடுக்கி விட்டால் நல்ல பலனைத் தரும். இளைஞர் களாகிய புதிய வாக்காளர்கள் மத்தியிலும் வேர்ப் பிடிக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner