எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கறுப்புப் பணம், கள்ளரூபாய் நோட்டு, தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காகஎன்று கூறி, 8.11.2016 - அன்று இரவு எட்டு மணிக்கு, நரேந்திர மோடி, பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். 'பணமதிப்பு நீக்கத்தின்படி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம். பணமில்லாப் பரிவர்த்தனையை இந்தி யாவின் பிரதானமாக்குவோம்'  என்று 'மாயவித்தை' உரைகளை ஆற்றினார்;  மறுநாள் காலையிலிருந்து இந்தியாவே அவசரம் அவசரமாக வங்கி வாசல்களில் நிற்கத் தொடங்கியது - பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக! இன்றுடன், இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தன்னுடைய ஆண்டறிக்கையில், 15.4 லட்சம் கோடி ரூபாய்க்கான அதிக மதிப்புள்ள நோட்டுகளில், 15.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. அதாவது, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய்களில் 99 விழுக்காடு திரும்ப வந்துவிட்டன.

பணமதிப்பிழப்பிற்கு பிறகு 2016-2017ஆம் ஆண்டில்தான் கள்ளநோட்டுகள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் கள்ளநோட்டுகள் 20.4% அதிகம் கண்டறியப்பட்டுள்ளன. அதிக மதிப்புள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றச் சொன்னதுதான் இதற்கு முக்கியக்காரணம் என்கிறது  ரிசர்வ் வங்கி - ஆனால், 2000 ரூபாய் கள்ளநோட்டும் பிடிபட்டுள்ளது. பணமதிப்பிழப்பின் தொடக்கநாள்களில், புதிதாக அச்சடிக்கப்படும் 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு அச்சடிக்க முடியாது என்ற செய்தி பரப்பப்பட்டதே, அதன் அர்த்தம்தான் என்ன? பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட முதல் 10 நாள்களில் மிகப்பெரிய தொகையை மாற்ற முடியாமல் தற்கொலை செய்தும், பணத்தை மாற்ற வரிசையில் நிற்கும்போது மயங்கி விழுந்தும் இறந்தவர்களின் எண்ணிக்கை 150-அய்த் தாண்டியது.. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அறியப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கைதான் இது.  மத்தியில் உள்ள பாஜக ஊடகங்கள் மற்றும் பல திரைப்படப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரைக் கையில் போட்டு பணமதிப்பிழப்பு ஒரு இமாலய சாதனை என்று கூறிவந்தாலும், இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக நடந்த கேடுகள்தான் கண்ணிற்கு தெரிகின்றன. இதனால் விளைந்த நன்மை என அருண் ஜெட்லியால் கூட பட்டியலிட முடியவில்லை.

2000 ரூபாய் நோட்டுகளைப் பெரும்பாலான மக்கள் கண்ணில் பார்க்காதநிலையில், ஒரு நாளைக்கு ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டு அல்லது இரண்டு நோட்டுகளைத்தான் வங்கிகளிலிருந்து மக்களால் பெறமுடியும் என்று கட்டுப்பாடு (ரேஷன்) வைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த, தமிழக மற்றும் அகில இந்திய அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியிடம் மட்டும் கட்டுக்கட்டாக, பெயின்ட் மணம் மாறாத 2000 ரூபாய் நோட்டுகள் பிடிபட்டனவே,  வங்கிகளிலும், ஏடிஎம் மய்யங்களிலும் தினம் தினம் வரிசையாகக் காத்துக் கிடந்த மக்களுக்குச் செய்யப்பட்ட நியாயம் என்ன? பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்ட திருமணங்கள், தடைபட்ட பயணங்கள், இழந்த உயிர்கள் என்று மக்களை வாட்டிவதைத்த பிரச்சினைகளுக்கு யார் பொறுப்பு?

இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்த ரகுராம்ராஜன், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து என்னிடம் கூறியபோது நான் மறுத்தேன் என்கிறார் முன்னாள் பிரதமரும், பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங். ''பணமதிப்பிழப்பு என்னும் தவறை ஒத்துக்கொள்ள வேண்டும். இது பொருளாதாரத்தின் கறுப்பு தினம்'' என்று விமர்சித்துள்ளார்.  பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கொண்டுவரும்போது, நாட்டில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் ரூ.15.41லட்சம் கோடிக்கு புழக்கத்தில் இருந்தன. அவை மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டு புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் தரப்பட்டன.

செல்லாத ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி முற்றிலும் முடிந்துவிட்டநிலையில், ரூ.15.31 லட்சம் கோடி பணம் வங்கி முறைக்குத் திரும்ப வந்துவிட்டன.

வங்கி முறைக்கு மிக, மிகக் குறைந்த அளவாக ரூ.10 ஆயிரத்து 720 கோடி பணம் மட்டுமே திரும்பி வரவில்லை. உண்மையைச் சொன்னால் இதுதான் கறுப்புப் பணம்; மலையைக் கிள்ளி எலியைப் பிடித்த கதை!

பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் வங்கிக்கு வந்த செல்லாத ரூ.500, ரூ1000 தாள்கள் வங்கியில் தீவிர ஆய்வுக்குப் பின்புதான் வைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டன, வழக்கத்துக்கு மாறாக அதிக அளவு வைப்பு செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

மிகப்பெரிய பணியாகக் கருதப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுக்களை ஆய்வு செய்தல், சரிபார்த்தல் பணி, எண்ணுதல், உண்மைத்தன்மை கண்டறிதல் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டன.

புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி  கூடுதலாக ரூ.11 ஆயிரத்து 965 கோடி செலவிட்டுள்ளது.

இது வழக்கமாகச் செலவிடப்படும், முந்தைய ஆண்டில் செலவிட்ட தொகையான ரூ.3 ஆயிரத்து 421 கோடியைக் காட்டிலும் ஒரு மடங்கு அதிகமாகும். முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், ரூ.100 நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள்  எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரூ.50 நோட்டுக்களில் போலியானவை 154.3 விழுக்காடு என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா என மூன்றரை ஆண்டுகளில் பல மாயாஜால வார்த்தைகளை அள்ளித்தெளிக்கும் பிரதமர் மோடி, மக்கள் படும் அவதியை அறிந்தும் கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டு இருக்கிறார். நாட்டை என்றுமில்லாத பொருளாதார சரிவிற்குக் கொண்டுசென்றுவிட்டார். இந்த நான்கு ஆண்டுகளில் நடந்த மொத்த தோல்வியையும் மறைக்கவே தற்போது ராமர் கோவில் பிரச்சினையை கையில் எடுத்துகொண்டு மீண்டும் மக்களைச் சந்திக்க புறப்பட்டுவிட்டார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner