எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேசம் மீண்டும் கற்காலத்திற்குத் திரும்புகிறது என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு நிகழ்ந்திருக்கிறது. கடந்த வாரம் கடும் குளிர் காரணமாக சாலையில் கவனிப் பாரின்றித் திரியும் பசுமாடுகளை பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார மய்யங்களில் அடைத்துவைக்க சாமியார் முதல்வரிட மிருந்து மறைமுக உத்தரவு வந்ததை அடுத்து, பல மாவட்டங்களின் கிராமப்புறப் பள்ளிகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பசுக்களை அடைத்து வைத்தனர்.

இந்த விவகாரம் வெளியாகி நாடு சிரிக்க ஆரம்பித்தது. உள்ளூர் விவசாயிகளின் பயிர்களைக் காப்பாற்ற மாடுகளை தற்காலிகமாக அதாவது அவை கோசாலைகளுக்குக் கொண்டு செல்லும் முன்பு மூடப்பட்டு இருக்கும் பள்ளிகளில் அடைத்துவைக்கிறோம் என்று மாவட்டநிர்வாகத்தினரால் கூறப்பட்டது.   இதை விட கொடுமை என்னவென்றால் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் ஊடகத் தினரிடம் பேசும் போது "பள்ளிகள் இரவு நேரங்களில் இயங்கு வதில்லையே, ஆகையால் பள்ளிகளை இரவு நேரங்களில் பசுக்களை அடைத்துவைக்கும் கோசாலையாக மாற்றலாமே" என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

பள்ளி மற்றும் சுகாதார நிலையங்களில் பசுக்களை அடைத்து வைப்பது தொடர்பாக சாமியார் முதல்வர் வாயைத்திறக்கவே இல்லை. மேலும் பசுக்களை பள்ளியில் அடைத்துவைத்தவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள பட்டிவர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாடுகளை அடைத்து வைத்துள்ளனர். ஞாயிறு விடுமுறை. அதனால் மறுநாள்  மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் பசுமாடுகள் நின்றுகொண்டு இருந்தன.

ஊரார் பள்ளி முக்கிய நுழைவுப்பாதையை அடைத்து வைத்துவிட்டனர். பள்ளிக்கு வந்த மாணவர்கள் உள்ளே செல்ல வழியில்லாமல் வயல்வெளிகளில் கடும் குளிரில் அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அங்கு வந்தனர். அவர்களை ஊர்க் காரர்கள் உள்ளே விடாமல் அவர்களையும் வயல்வெளியில் போய் உட்காருமாறு கூறியுள்ளனர்.  விவசாயிகளிடம் தலைமை ஆசிரியர் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. இதன் பின்னர் மேல் அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.

இதனை அடுத்து அங்கு வந்த கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சு நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் கூறியதாவது, "கோதுமை மற்றும் கடலைப்பயிர்களைப் பயிரிட்டுள்ளோம், தற்போது அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்களை மாடுகள் மேய்ந்துவிடுகின்றன. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நாங்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் பல முறை கூறிவிட்டோம். ஆனால் எந்தப் பயனும் இல்லை.

ஆகையால் தான் பள்ளிகளில் மாடுகளை அடைத்து வைத்தோம், பள்ளிகளில் மாடுகளை அடைத்துவைத்ததில் எங்கள் மீது தவறு எதுவும் இல்லை, சில நாட்களுக்கு முன்பு மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இரவு நேரங்களில் மாடுகளை அடைத்துவைக்க அரசு உத்தர விட்டுள்ளது, இது குறித்து ஊடகங்களில் செய்திவந்துள்ளது, ஆகவே எங்கள் மீது நீங்கள் குற்றம் கூறக்கூடாது. விடுமுறை நாள்களில் பள்ளிகளில் எந்த ஒரு பணியும் நடைபெறுவதில்லை, ஆகவே மாடுகளை அடைத்து வைத்துள்ளோம். மேலும் எங்கள் ஊரில் கோசாலைகள் இல்லை.

ஆகையால் இரவு நேரங்களில் பள்ளியில் மாடுகளை அடைத்துவைக்க அனுமதிவேண்டும்" என்று கூறியுள்ளனர். அதன் பிறகு அதிகாரிகள் ஊர்க்காரர்களை சமாதானம் செய்து மாடுகளை வெளியில் அனுப்பிவிட்டு மாட்டு மூத்திரம் மற்றும் சாணி நாற்றத்தில் பள்ளி நடந்துள்ளது.

இது புதிது அல்ல; பாஜக ஆளும் மாநிலங்களில் இது போன்று மூடத்தனமான நடைமுறை, நடவடிக்கைகளை  - குஜராத் அரசு மற்றும் அரியானா அரசு முந்தைய வசுந்தரா ராஜே தலைமையில் இருந்த ராஜஸ்தான் அரசுகள் கொண்டு வந்தன.

குஜராத்தில் ஆனந்திபென் படேல் முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் பசுவந்தனம் என்ற முறை ஒன்றை கொண்டுவந்தார். அரியானா அரசு இதைவிட மேலே போய் பசுமூத்திரம் மற்றும் சாணி போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் தெளிப்பான்கள் மற்றும் சோப்புகளை ஆசிரியர்கள் மக்களிடையே கொண்டு சேர்க்கவேண்டும்; அதாவது 'சேல்ஸ் மேன்' வேலை செய்யவேண்டும் என்று உத்தர விட்டிருந்தது. இதனை கடுமையாக ஆசிரியர்கள் எதிர்த்த உடன் 'மாநிலத்தின் வளர்ச்சியைக்கூட விரும்பாத நீங்கள் எப்படி அக்கறையுடன் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பீர்கள்' என்று மாநில கல்வித்துறை அமைச்சர் அணில் விஜ் கூறியிருந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த வசுந்தரா ராஜே பசுமாடுகள் வழிபாடு குறித்த கையேட்டை அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட உத்தரவிட்டார். மேலும் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ப்பூரில் இந்துமத மாநாடு நடத்தி அனைத்து மாணவர்களையும் அதில் காட்டாயம் கலந்துகொள்ளச்செய்து பசுமாட்டு வழிபாடுகள் குறித்து வகுப்பெடுத்த கொடுமைகளும் நடந்தது.

ஆரிய தர்பார் ஆட்சியின் கீழ் இன்னும் என்னென்ன வெல்லாம் நடக்குமோ தெரியவில்லை - வெட்கக்கேடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner