எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) என்கிற அரசு அமைப்புதான் அரசுக்குத் தேவையான பல்வேறு தரவுகளை களத்தில் இறங்கி சர்வேமூலம் களப்பணி ஆற்றி அரசுக்கு புள்ளிவிவரங்களை அளித்து வருகின்ற மத்திய அரசு நிறுவனமாகும். 2017-18இல் தான் அதிக வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்று என்.எஸ்.எஸ்.ஓ. நிறுவனத்தின் ஆய்வுத்தகவல் கூறுகிறது.

1972-73 நிதியாண்டில்தான் இந்த அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் இருந்துள்ளது. 45ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் 8இல் மோடியின் அறிவிப்பால் உயர்மதிப்பிலான பணத்தாள்கள் (பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை) செல்லாது என்று அறிவித்த பிறகு வெளியான வேலைவாய்ப்பு குறித்த முதல் கணக்கீடு இதுவாகும்.

ஜூலை 2017 தொடங்கி ஜூன் 2018 வரையிலான காலக் கட்டத்தில்தான் இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு 6.1 விழுக்காடு அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வுத்தகவல் குறிப்பிட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரித் துள்ளது என்று இந்த சர்வே முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் நகர்புறங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் 7.8 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 5.3 விழுக்காடாகவும் உள்ளது. 2017-2018 நிதியாண்டில் கிராமப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 17.4 விழுக்காடு ஆண்களும், 13.6 விழுக்காடு பெண்களும் வேலையில்லாமல் உள்ளனர். இது 2011-2012 நிதியாண்டில் 2.2 விழுக்காட்டளவில் வேலை வாய்ப்பின்மை இருந்துள்ளது.  முறையே 5 மற்றும் 4.8 விழுக்காடாக இருந்துள்ளது. நகர்ப்புறங்களில் 18.7 விழுக்காடு ஆண்களுக்கும், 27.2 விழுக்காடு பெண்களுக்கும் வேலைவாய்ப்பில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு சுமாராக 7% வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டு வந்தபோதிலும், அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. பொருளாதார வளர்ச்சி சமமாக இல்லை என  பொருளாதார வல்லுநர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்திய பொருளாதாரத்தை கண்காணித்து வரும் ஆலோசனை நிறுவனம், இந்தியாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.1 கோடி இளைஞர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக கடந்த டிசம்பர் 2018இல் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

ஒவ்வொரு ஆண்டிலுல் டிசம்பர் மாதத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறித்த விவரங்களை தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தால் (National Sample Survey Office - NSSO) முறையாக வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு மட்டும் சில அரசியல் அழுத்தங்கள் மற்றும் அரசு அமைப்பு களின் அழுத்தம் காரணமாக தாமதமானது வருத்தத்துக்குரியது என தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) தலைவர் மோகனன் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கும் ஆய்வு முடிவை மத்திய அரசு வெளியிட அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாற்றை முன்வைத்து, மத்திய புள்ளிவர ஆணையத்தின் பொறுப்பிலிருந்து இரு முக்கிய அதிகாரிகள்  விலகியுள்ளனர்.  இந்த ஆய்வு முடிவின்மூலம் மோடியரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட மத்திய அரசின் நிர்வாகத் தோல்வி வெளிப்பட்டுள்ளது.

நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த  மோடி அரசு தவறிவிட்டதையே இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன என்றும், காலந்தாழ்த்தியதன்மூலம் உண்மை நிலையை இருட்டடிப்பு செய்ய முயன்றதாகவும் மத்திய அரசின்மீது எதிர்க்கட்சியினர் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு நாடு செழுமை பெற்று வருகிறது என்பதற்கு அடையாளம், மக்களின் கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்பவை முக்கிய அங்கமாகும்.

ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று 56 அங்குல மார்புப் புடைத்து 'வீராவேசமாக' முழங்கி ஆட்சியைப் பிடித்த நரேந்திரமோடி தலைமையிலான அரசு இந்த முக்கிய விடயத்தில் முகத்திரை கிழிந்து நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவமானப்பட்டு, பல்லிளித்து நிற்கிறது.

எந்த இளைஞர்கள் அவிழ்த்துக் கொட்டப்பட்ட பொய் யான வாக்குறுதிகளை நம்பி, பிஜேபி தலைமையிலான மோடி தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிகாரப் பீடத்தில் அமர வைத்தார்களோ அதே இளைஞர் சேனைதான் பொங்கி எழுந்த வெள்ளத்தில் மோடி - காவி ஆட்சியை மூழ்கடித்து மூச்சை இழக்கச் செய்ய வேண்டும். இளைஞர்கள் வெற்றி பெறுவார்களாக!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner