எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"தெற்கு ரயில்வே மண்டலத்தில் பணியாளர் பயிற்சிக்காக 1,765 இடங்களில் 1,600 இடங்களுக்கு வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு பதவிகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை சேர்த்து வருகின்றனர்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருப்பது மிகவும் உண்மையே!

இது தொடர்பாக திராவிடர் கழகம் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.  முக்கியமாக கருநாடகம், மகாராட்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தங்கள் மாநிலத்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று தீர்மானம் போட்டு அங்கு உள்ள அரசுகள் அதை செயல்படுத்தி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி அமைந்த மத்தியப்பிரதேசத்தில் சமீபத்தில் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்த கமல்நாத் ஆட்சிக்கு வந்த உடனேயே தமது மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் என்ற புதிய அரசாணையைப் பிறப்பித்தார், விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டி அதை சட்டமாக நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கு 21 பேர், இயந்திரவியல் பொறியாளர் பணிக்கு 9 பேர், மின்னியல் பொறியாளர் பணிக்கு 5 பேர் உட்பட மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 42 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை கடந்த 11.11.2018-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 21-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக வேதியியல் பொறியாளர் பணிக்கான நேர்காணலுக்கு ஒரு பணிக்கு மூவர் வீதம் 65 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்லர்.

சென்னை பெட்ரோலிய நிறுவனத்திற்கான பணி யாளர்களும், அதிகாரிகளும் நீண்ட ஆண்டுகளாக தமிழக அளவில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். ஆனால் சமீபகாலமாக வட இந்தியர்கள் படிப்படியாக உள்ளே திணிக்கப் பட்டு வருகின்றனர். இப்போக்கு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இப்போது முழுக்க முழுக்க வட இந்தியர்கள் மட்டுமே அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர்.

அதற்கு ஏற்ற வகையில் தேர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக போட்டித்தேர்வுகள் என்ற பெயரில் தேர்வுகள் வைத்து பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மும்பை மற்றும் அகமதாபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை செய்து தான் முழுக்க முழுக்க வட இந்தியர்கள் சென்னை பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். 2017-ஆம் ஆண்டு அஞ்சல்துறை பணிக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில், தமிழே தெரியாத அரியானா மாணவர்கள்  தமிழில் 96 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தனர். அதேபோல் தான் சென்னை பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் பணிக்கான தேர்வுகளிலும் வட இந்தியர்களளை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து முறைகேடுகளும் செய்யப்படுகின்றன. இதற்கு சென்னை பெட்ரோலிய நிறுவன நிர்வாகமும் துணை போகிறது.

அதிகாரிகள் நிலையிலான நியமனங்களில் மட்டுமே வட இந்தியர் திணிக்கப்பட்ட நிலை மாறி இப்போது தொழில் பழகுநர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணிகளிலும் வட இந்தியர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றனர்.

அதே போல் ரயில்வே தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுதான் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியில் சேர்கிறார்கள். தமிழகத்தில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் அப்படித் தேர்வெழுதி பணிக்கு வந்தவர்கள்தான். தென்னக ரயில்வே மண்டலத்துக்காக நடத்தப்படும் தேர்வில் மட்டுமே தமிழில் எழுதும் வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதனால்தான் இங்கு குறைந்தபட்சமாகவேனும் ரயில்வே துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனால், மற்ற மண்டலங்களுக்கு நடக்கும் தேர்வுகளைத் தமிழில் எழுத முடிவதில்லை. இந்தி பேசுபவர்கள் தங்களது மண்டலத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் பணிபுரியும் வாய்ப்பைப் பெறும்போது தமிழர்களின் வேலைவாய்ப்பு தமிழகத்துக்குள்ளேயே சுருங்கிப் போய் விடுகிறது.

2014-ல் குரூப் 'டி' பணிகளுக்கான அறிவிப்பிலேயே குளறுபடிகளைச் செய்து இரண்டரை லட்சம் தமிழ் இளைஞர்களின் விண்ணப்பங்களை ரயில்வே துறையினர் நிராகரித்திருந்தனர். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் செயல்படும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் இருந்து சாரை சாரையாக வட இந்தியர்கள்  வரவழைக்கப்படுகின்றனர்.

தேசியம் என்றால் பிற மாநில ஆதிக்கத்தைக் கண் மூடி ஏற்றுக் கொள்வதுதானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner