எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழா நேற்று (10.3.2019) அவர்கள் பிறந்த வேலூரில், வேலூர் மண்டல திராவிடர் கழகம், மகளிர் அணி, மகளிர்ப் பாசறை சார்பாக வெகு நேர்த்தியாக - என்றென்றும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பெரு விழாவாக நடைபெற்றது.

விழாவுக்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டது போல - கழகத்தின் மாநில மாநாடுகள் நடைபெற்று இரு வாரங்களின் இடை வெளியில் இப்படியொரு விழா ஏற்பாடு என்றால் இது ஒன்றும் சாதாரணமானதல்ல.

மாநில அமைப்பாளர் உரத்தநாடு மானமிகு இரா. குணசே கரன், மாநில அமைப்புச் செயலாளர் மானமிகு ஊமை. ஜெய ராமன் உள்ளிட்ட மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களின் சளைக்காத உழைப்பும், முயற்சியும் இத்தகைய வெற்றி விளைச்சலுக்குக் காரணமாகும்.

பசி நோக்கார், கண் துஞ்சார், கருமமே கண்ணாயிருப்பார் என்றால், அது திராவிடர் கழகத் தோழர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பாகும். அந்த வகையில் விழா வெற்றிக்கு உழைத்த இருபால் தோழர்களுக்கும், புன்சிரிப்போடு நன்கொடை களை வழங்கிய பெரு மக்களுக்கும் நமது பாராட்டும், நன்றியும் உரித்தாகட்டும்!

அன்னையார் பிறந்த ஊர் என்பதால் வேலூர் வாழ் பொது மக்களுக்குத் தனி அக்கறையும், ஆர்வமும் கொப்பளித்துக் கிளம்பியதும் மேலும் ஒரு முக்கியமான காரணமாகும்.

வேலூருக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு என்றாலும், உலகிலேயே ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய வீரவேங்கையாக அன்னையைப் பெற்றுப் புறந்தந்தது இந்த வேலூர் மண்தானே; இந்தப் பெருமை வேறு எந்தப் பெருமை யையும் புறந்தள்ளக் கூடியதே!

அன்னையார் பிறந்த ஊர் வேலூர் என்றால், அறிவு ஆசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மறைந்த ஊராகவும் இந்த வேலூர் அமைந்து விட்டது. அந்த வகையில் வரலாற்றின் முக்கிய குறிப்பினை வேலூர் தன்னகத்தே பதித்துக் கொண்டு விட்டது.

ஒருங்கிணைந்த வடாற்காடு மாவட்டம் என்பது இயக்கத் துக்கு மிகப் பெரிய வலுவான கொள்கைப் பாசறையாகும். இங்கு வாழ்ந்து அரும் பணியாற்றி முத்திரை பொறித்த பெரு மக்களை எல்லாம் கழகத் தலைவர் நினைவு கூர்ந்தார். எங்கு சென்றாலும் இயக்கத்திற்காக உழைத்த இலட்சியவாதிகளை மறவாமல் பசுமையாக நினைவூட்டுவது என்பது நமது தலைவருக்கே உரித்தான தனித்தன்மையாகும்.

86 வயதில் 75 ஆண்டுகளுக்குமேல் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் முதற்கொண்டு எல்லாம் சுற்றிச் சுற்றி வந்த மானமிகு தலைவர் அல்லவா! இந்த அனுபவம் என்பது இவருக்கே உரித்தான தனி ஆளுமையாகும்.

அதேபோல இயக்கத்திற்காக இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கும் இலட்சிய கருஞ்சட்டைத் தொண்டர்களான பெரியார் பெருந்தொண்டர்களைப் பெயரிட்டு அழைத்து மேடையில் ஏற்றி, அவர்களுக்கெல்லாம் பயனாடை அணிவித்து அரவணைத்து, கைக்குலுக்கி மகிழ்ந்த அந்தக் காட்சி அபூர்வ மானது. தங்களின் இயக்கப் பணிக்குக் கிடைத்திட்ட  மிகப் பெரிய அங்கீகாரம் என்பதால் அவர்களுக்கெல்லாம் அளவு கடந்த ஆனந்தக் குளியல் - குவியல்!

பதவி அரசியல் பக்கம் தலை வைத்துப் படுக்காமல், இன இழிவை ஒழித்து - பகுத்தறிவு வளர்த்து, தன்மான உணர்வினை ஊட்டி, ஓர் இனத்தை உயர்த்தும் பணியில் தங்களை அழித்துக் கொண்டு உழைக்கும் கருப்பு மெழுகுவர்த்திகளாம் திராவிடர் கழகத் தொண்டர்களுக்கு, தோழர்களுக்கு ஈடு ஏது, இணை ஏது இவ்வையத்தில்?

விழாத் தலைவரான நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டது போல - நாட்டில் நடக்கும் அரசியல் போக்குகளைக் கவனிக்கும்போது, இந்தப் படுகுழியில் விழாமல் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் நமது  சமூகப் புரட்சிப் பணிக்காக நம் முதுகை நாமே தட்டிக் கொள்ளலாம் என்று சொன்னது - ஏதோ அழகு வார்த்தையோ, வக்கணை வருணனையோ அல்ல, அல்ல! உண்மையின் துல்லியமான முழு வடிவமேயாகும்.

பிரச்சாரம், போராட்டம் என்ற இரு வகையான அணுகு முறைதான் நாம் மேற்கொண்டிருக்கும் இயக்க வாழ்வியல் அணுகுமுறையாகும்.

இதற்கெல்லாம் நமக்கு வழி காட்டியாக இருந்து வாழ்ந்து மறைந்தவர் நமது தலைவர் அன்னை மணியம்மையார்.

இவ்வளவுப் பெரிய இயக்கத்திற்குத் தான் தலைவர் என்கிற தறுக்கு இல்லாமல், அய்யாவிடம் வரித்துக் கொண்ட அந்த எளிமை, சிக்கனம், தொண்டறம், அரவணைப்பு, சகிப்புத் தன்மை,  போராட்டக் குணம் - இவைதான் நம் அன்னை மணி யம்மையாரின் விலை மதிக்க இயலா அணிகலன்கள், வேறு எந்த அணிகலனும் அணியாதவர் ஆயிற்றே!

தந்தை பெரியார் எனும் மாமலை வீழ்ந்ததற்குப் பிறகும் இந்த இயக்கத்தை வீறு கொண்டு எழச் செய்தாரே - எழுச்சி நடை போடச் செய்தாரே  - இந்த ஒன்றுக்காகவே இந்த இனம் நமது அம்மாவுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக் கண்ணீர் உகுக்கக் கடமைப்பட்டுள்ளது.

அய்யாவின் கொள்கையில், அம்மா நடத்திய வழியில் தமிழர் தலைவர் தலைமையில் நமது  பயணம் தொடரட்டும் - அதுவே அம்மா  அவர்களுக்கு, அவர்தம் நூற்றாண்டில் நாம் சூட்டும் மரியாதை கலந்த நன்றி மணக்கும் புகழ் மாலையாகும்.

வாழ்க பெரியார்! வாழ்க அன்னையார்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner