எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூரில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் நூற்றாண்டு பல வகைகளிலும் சிறப்பானதாகும். விழா ஏற்பாடுகள், விழா நிகழ்ச்சிகள், உரைகள் எல்லாம் பாராட்டுக் குரிய வகையில் அமைந்தது ஒரு பக்கம் எனினும் ஆறு அரியதீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அன்னையார் பிறந்த ஊரில் ஒரு நாள் விழா என்பதோடு முடிந்து விடக் கூடியதல்ல - ஓராண்டு முழுவதும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா தமிழ்நாடு விரிந்த அளவில், கொள்கை ரீதியாக கொண்டாடப்பட இருப்பதுபற்றி  முதல் தீர்மானம் கூறுகிறது. பாலின சமத்துவம், பாலின வன்கொடுமை எதிர்ப்புப் பற்றி தீர்மானம் கூறும் இந்தக் கால கட்டத்தில் வெளி வந்துள்ள ஒரு தகவல் அதிர்ச்சிக்கு உரியதாகும்.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் சீரழிக்கப்பட்ட கொடுமையை நினைத்தால் குருதி சூடேறுகிறது - 'சீ' - 'சீ' 'இப்படியும் மனிதப் பதர்களா?' என்று காரி உமிழச் செய்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வன்கொடுமை நடந்திருக்கிறது என்பதுதான் எத்தகைய வெட்கக் கேடு! இதன் பின்னணியில்  அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது வெட்கக் கேடாகும். அன்னை மணியம்மையார் நூற்றாண்டை ஒட்டி மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் - பாலின சமத்துவம், பாலின வன்கொடுமை எதிர்ப்பு முக்கிய இடம் பெறுவது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அன்னையார் நூற்றாண்டு விழா என்பது வெறும் புகழ் மாலை சூட்டுவதல்ல; அவர்கள் எந்த கொள்கைக்காக தன் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்தார்களோ, அந்தக் கொள்கைகளை மேலும் செழிப்பாகக் கொண்டு சேர்ப்பது - புதிய மாற்றத்தை உண்டாக்குவதே அதன் நோக்கமாகும்

ஆண்கள் ஆதிக்க சமூக அமைப்பில் தலைவர்கள் பெயரில் அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒரு பெண்ணின் பெயரில் அத்தகு விருது இல்லையே ஏன்? அந்த வகையில் அன்னை மணியம்மையார் அவர்களைத் தவிர தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மானமிகு  மகளிர் தலைவர் வேறு யாராகத்தானிருக்க முடியும்! அதுவும் ஒரு பகுத்தறிவு நாத்திக இயக்கத்துக்கு உலகிலேயே தலைமை தாங்கிய ஒரே பெண் அன்னை மணியம்மையார் அல்லவா!

அத்தகு ஒரு தலைவரின் பெயராலே அரசு சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். அன்னை யாரின் தொண்டு ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்ததல்ல; அரசியல் நோக்கம் கொண்டதும் அல்ல. அடிப்படை சமுக மாற்றத்துக்கான புரட்சிப் பணியாகும்.

அத்தகு தலைவரின் பெயரால் அரசு விருது வழங்கும் போது - அது தொடர்பான சிந்தனையோட்டம் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவும் வாய்ப்பும் உண்டு. அதனைத் தமிழ்நாடு அரசு செய்ய முன் வரட்டும். அதனைப் போல அன்னையார் தம் சொந்த நிலத்தைப் பள்ளிக்காக வழங்கினார் அல்லவா! அந்தப் பள்ளிக்கு அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பெயரைச் சூட்டுமாறு கோரும் தீர்மானம் நியாயமானதாகும். அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை குறிப்பாகக் கல்வி அமைச்சரை வலியுறுத்துகிறோம். மற்றொரு முக்கிய தீர்மானம் - கொலை வழக்கில் 28 ஆண்டுக் காலம் சிறையில் வாடும் ஏழு தோழர்களை விடுதலை செய்யக் கோருவதாகும் ஒரு குற்றத்திற்கு இரு தண்டனைகள் இருக்க முடியாது.

இவர்களைப் பொறுத்தவரை 28 ஆண்டு காலம் சிறையில் இருந்து வருகின்றனர். இதற்கு மேல் இன்னொரு தண்டனை - தூக்குத் தண்டனை எப்படி இருக்க முடியும்? அதுவும் உச்சநீதிமன்றமே அவர்களை விடுவிக்கலாம் என்று சொன்ன பிறகு, உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி அதன் தொடர்ச்சியாக ஒரு மாநில அரசும் அவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் வழங்கிய பிறகு, ஓர் ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போட அதிகாரம் படைத்தவர் தானா என்பது மிகவும் முக்கியமான வினாவாகும்.

ஓர் ஆளுநரே சட்ட மீறும் செயலில் ஈடுபடலாமா? ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறாரா? அவரை ஆட்டுவிக்கும் கை வேறு இடத்தில் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வியாகும். அந்த முக்கியமான கை என்பது மத்தியில் உள்ள ஆட்சியே! அதனால்தான் மத்திய அரசு ஆளுநருக்கு உரிய வகையில் அழுத்தம் கொடுத்து 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எழுவரையும் விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று வேலூர்த் தீர்மானம் கூறுகிறது.

ஏழு பேர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்த உச்சநீதிமன்ற நீதிபதியும், விசாரணை நடத்திய புலனாய்வுத் துறை அதிகாரியும் இந்தப் பிரச்சினையில் தவறு நேர்ந்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்ட பிறகும், தண்டித்தே தீருவது என்ற முடிவு மனிதத் தன்மை வாய்ந்ததுதானா? மனித உரிமை அத்தியாயத்தில் எந்தப் பகுதி இதனை நியாயப்படுத்த முடியும்?

பன்னாட்டு மனித உரிமை ஆணையம் இதில் தலையிடுவ தற்கான முகந்திரம் இருக்கிறது. ஆறாவது தீர்மானம் வேலூர் நகரில் நகர சுத்தித் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்கு தோட்டி லேன் என்று பெயர் இருக்கும் கீழ்மை பற்றியதாகும்.

இந்த  21ஆம் நூற்றாண்டில் தோட்டி, தொம்பன் என்ற சொல்லாடல்களா! இதுதான் சுதந்திர இந்தியாவின் இலட்சணமா? அதுவும் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது எந்த வீதிக்கும் அல்லது சாலைக்கும் ஜாதி பெயர் சூட்டக் கூடாது என்று திட்டவட்டமாக ஆணை பிறப்பித்த பிறகு அம்மா ஆட்சி என்று தொட்டதற்கெல்லாம் தொகையறாப் பாடும் அஇஅதிமுக ஆட்சி இதனை எப்படி அனுமதிக்கிறது?

நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகும் மாற்றம் வரவில்லை என்றால் இது மன்னிக்கபடவே முடியாத மகத்தான குற்றமாகும். அண்ணா பெயரையும், திராவிட பெயரையும் சூட்டிக் கொள்ள கிஞ்சிற்றும் தகுதியற்ற ஆட்சிதான் அதிமுக அரசு என்று பொருளாகும்!

அரசு சிந்திக்கட்டும் - செயல்படட்டும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner