எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர்.எஸ்.எஸின் அகில இந்திய மாநாடு மத்திய பிரதேசம் குவாலியரில் மூன்று நாள்கள் நடைபெற்றுள்ளது. அதில் ஒரு தீர்மானம் கூறுவதாவது:

ஹிந்து மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரி யங்கள் அமைப்பு ரீதியாகத் திட்டமிட்டுக் கொச்சைப்படுத்தப் படுகின்றனவாம்.

இதைவிட உண்மைக்கு மாறான, பித்தலாட்டமான கருத்து வேறு ஒன்றும் இருக்கவே முடியாது. உண்மையைச் சொல்லப்போனால், ஹிந்து மதம் என்ற பெயரால் பிறப்பின் அடிப்படையிலேயே மக்களைப் பிளவுப்படுத்திக் கொச்சைப்படுத்துவது ஹிந்து மதமே என்பது கலப்படமே இல்லாத அக்மார்க் உண்மையாகும்.

அப்படிப் பேதப்படுத்துவதுதான் ஹிந்து மதத்தின் உன்னத'த் தத்துவம் என்பதைவிட மனிதகுல விரோதக் கீழ்ப்புத்தி வேறு ஒன்று இருக்க முடியுமா?இந்தக் கேள்வியை பிறப்பின் அடிப்படையிலே இழிவுபடுத்தப்பட்ட மக்கள் எழுப்பினால், என்ன பதில் சொல்லுகிறார்கள்? பிறப்பின் அடிப்படையிலான வருண பேதம் என்பது குணத்தின் அடிப்படையிலானது என்று குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்.

ஹிந்து மதம் என்ன கூறுகிறதோ, அதனைக் கூறி, அதனை நியாயப்படுத்த முடியாத திணறலில், இப்படியொரு குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள்.

அதன்மீதும் நாம் விவாதங்களை அடுக்கடுக்காக வைக் கிறோம். பிரம்மாவின் முகத்திலும், தோளிலும், தொடையிலும், பாதங்களிலும் முறையே பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் பிறந்தான் என்று சொல்லிவிட்ட பிறகு, குணத்தின் அடிப்படையில் என்பது எங்கிருந்து வந்தது? அவன்தான் பிரம்மாவின் உடலின் நான்கு பாகங்களிலும் பிறந்தான் என்றாகிவிட்டதே!

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி இவர்கள் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளவில்லை; காரணம், அவர் ஹிந்து மதத்தில் கூறப்படும் அந்த ஏற்றத் தாழ்வை நியாயப்படுத்தக் கூடியவர். அந்த ஏற்றத் தாழ்வில், ஏற்றத்தில் இருப்பவன் பிராமணனாகி விட்ட பிறகு, அதில் விட்டுக் கொடுக்கவோ, கொஞ்சம் கீழே இறக்கி வைக்கவோ கொஞ்சமும் தயாராக இல்லாத பார்ப்பன வெறியர் அவர். அதனால்தான் அவர் அடித்துக் கூறுகிறார்:

எத்தனை வயசுக்குமேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அனுசரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது?'' என்ற கேள்வியைக் கேட்டு பிறவிப் பேதத்தை மறைக்க முட்டுக்கட்டை போடும் பூணூல் திருமேனிகளின் மூக்கினை உடைத்துக் காட்டுகிறார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று, பிரம்மாவால் படைக்கப்பட்ட சூத்திரன் என்பவன் வேசி மகன் என்று ஆக்கப்பட்ட நிலையில், அம்மக்கள் தங்கள் இழிவைத் துடைக்கத் திரண்டு எழுந்தால், அது எப்படி அமைப்பு ரீதியாக இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்?

நான்காம் ஜாதியாக்கப்பட்ட மக்களான சூத்திரர்கள்பற்றி மனுதர்மம் எத்தனை எத்தனையோ சுலோகங்கள் சொல்லியிருக்க, இதுவரையிலும், ஏன் இந்த இதழ்வரையிலும் துக்ளக்' மனுதர்மத்தை சும்மா வரிந்து கட்டிக்கொண்டு வக்காலத்து போட்டு எழுதுகிறது என்றால், இதற்கான எதிர் தாக்குதலை இந்து மதம் தாங்கிக் கொண்டுதானே தீரவேண்டும்,

பாதிக்கப்பட்டவர்கள் பத்தாம் பசலியாக இருந்த காலம் ஒன்று உண்டு. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்ற ஒரு சகாப்த தலைவர் தோன்றிய பின், சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி!' என்ற சுலோகம் சுனாமியாகப் பொங்கி எழுந்துவிட்டதே - அந்த ஆத்திரத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ். புண்படுத்துவதாகக் கூறுகிறது போலும்.

வேசி மக்கள் என்று கூறும் அளவுக்குப் புண்படுத்தப்பட்ட மக்கள் பொங்கி எழுந்தால், அதற்குப் பெயர் இவர்களைப் புண்படுத்துவதாகப் பொருளாகுமா?

மனோன்மணியம் சுந்தரனார் கூறியதுபோல ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மம்தானே வெள்ளைக் காரன் வரும்வரை, ஏன் இன்னும் சொல்லப்போனால், வெள்ளைக்காரன் காலத்திலும்கூட இந்துக்கள் தொடர்பான சட்டப் பிரச்சினையில்  மனுதர்மம்தானே ஆதார சுருதியாக இருந்தது - மறுக்க முடியுமா?

மனுதர்மம் மட்டுமல்ல, நான்கு வருணத்தையும் நானே படைத்தேன்; அப்படி படைத்தவனாகிய நானே நினைத்தால்கூட இதனை மாற்றிட முடியாது என்று பகவான் கிருஷ்ணன்' சொல்லுவதாகக் கீதை கூறிடவில்லையா?

நாட்டின் பெரும்பான்மையான மக்களை இழிவுபடுத்த வில்லையா? மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்கள் படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோகத்தை இவற்றினைப் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17) என்று சொல்லியிருக்கிறதே!

எத்தனை ஸ்மிருதிகள் இருந்தாலும், மனுஸ்மிருதி கூற்றுதான் மேலானது என்று ஆக்கப்பட்டுள்ள ஒரு நூல் பார்ப்பனர் அல்லாதாரையும், பெண்களையும் பிறப்பின் அடிப்படையில் இவ்வளவுக் கேவலப்படுத்தியிருக்கும் பொழுது, இந்தக் கேவலத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தால், அது இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவது ஆகுமாம். அமைப்பு ரீதியாக இதனைச் செய்தார்களாம்! என்ன போக்கிரித்தனம், என்ன அயோக்கியத்தனம், என்ன பித்த லாட்டம்!'

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்னதான் கெஜக் குட்டிக் கரணம் போட்டாலும், அவர்களின் இந்து மதத்தைக் காப்பாற்றிட முடியாது என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner