எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். மாநாட்டுத் தீர்மானங்களுள் ஒன்று:

"இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவதற்காக அமைப்பு ரீதியாக திட்டமிட்ட வகைகளில் செயல்கள் நடைபெற்று வருவதாகவும், அதில் ஒன்றுதான் சபரிமலைக் கோயில் விவகாரம்; இறைவனுக்கும், பக்தர்களுக்கும் ஓர் ஒருங்கிணைந்த பந்தம்இருக்குமிடம் சபரிமலை.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் தனது முடிவை எடுப்பதற்கு முன்பாக, பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற சமுகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்தக் கோயில் பாரம்பரியத்தையும், இயல்பையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மதத் தலைவர்களின் கருத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை. பெண் பக்தர்களின் கருத்தைக் கூடக் கேட்கவில்லை. இந்நிலையில் தீர்ப்புக் குறித்த மறு ஆய்வு மனுக்களின் விசாரணையின்போது, இந்த விவகாரங்கள் அனைத்தையும் மாண்புமிகு நீதிமன்றம் விரிவான விசாரணை செய்ய வேண்டும் என்று மாநாட்டு வாயிலாகக் கேட்டுக் கொள்கிறோம்" என்று ஆர்.எஸ்.எஸின் குவாலியர் மாநாட்டுத் தீர்மானம் கூறுகிறது.

மற்ற மற்ற விடயங்களில்  நீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கூறினால் அதைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு 'நீதிமன்றமே சொல்லிவிட்டது!' என்று ஒற்றைக் காலில் நின்று குரல் கொடுப்பவர்கள் சபரிமலைக் கோயில் தொடர்பாக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இல்லை என்றவுடன், நீதிமன்ற தீர்ப்பையே குறை கூறும் வகையில் குரல்மாற்றிப் பேசுவதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

சபரிமலைக் கோயில் பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் தொடக்கத்தில் பெண்கள் அங்கு சென்று வழிபாடு நடத்தி யிருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்களும் வெளி வந்தன. பாரம்பரியம் என்பதற்கு எந்தக் கால கட்டத்தில் எல்லைக் கோட்டைக் கிழித்து வைத்துள்ளனர் என்று சொல்ல வேண்டாமா?

அரி என்ற ஆணுக்கும், அரன் என்ற ஆணுக்கும் பிறந்தவன் அய்யப்பன் என்பதால், பெண்கள் அய்யப்பனை வழிபட செல்லக் கூடாது என்கிறார்களா?

கடவுள் என்று சொல்லும் பொழுது - அதில்கூட பால் உண்டா? கடவுள் என்றால் வெறும் ஆண் மட்டும்தானா? அப்படி என்றால் கடவுளைப் பெண்கள் எந்தக் கண் கொண்டு பாவிப்பது என்ற முடிவு தெரிந்தாக வேண்டும்.

உருவமற்றவன் கடவுள் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே கடவுளுக்கு உருவங்கள் கற்பிப்பதும், கடவுளுக்குக் கணவன், மனைவி, குழந்தைக் குட்டிகள் என்று குடும்பங்களை உற்பத்தி செய்து வைத்திருப்பதும் எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?

இப்படி உருவங்களையும், குடும்பங்களையும் கற்பித்ததன் விளைவு, கடவுள்களை எங்கே கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது?

மனிதர்களிடத்தில் நிலவும் குடும்பச் சிக்கல்கள், ஒழுக்கக் கேடுகள், விபச்சாரங்கள், பஞ்சமா பாதகங்கள் அனைத்தும்  கடவுள்களின் தலைமீது கொண்டு போய் வைக்கப்பட்டி ருக்கவில்லையா?

இவ்வளவையும் செய்தவர்கள் கடவுள் மறுப்பாளர்களான நாத்திகர்களா? இல்லையே! கடவுள் நம்பிக்கையாளர்கள்தானே இவற்றையெல்லாம் வண்டி வண்டியாக எழுதித் தள்ளியுள்ளனர். மறுக்க முடியுமா?

யோக்கியமான முறையில் ஒரு கடவுளைக் கூடக் கற்பிக்க முடியவில்லையே இந்த மனிதர்களால்?

கடவுளைத் திருப்திபடுத்த வேண்டும், படையல் போட வேண்டும், அர்ச்சனைகள் செய்ய வேண்டும், தட்சணைகள் கொடுக்க வேண்டும், நேர்த்திக் கடன் கழிக்க வேண்டும், பொன்னும் பொருளும் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னது போல பிள்ளை விளையாட்டு தானே!

அரசின் கஜானாவில் இருக்க வேண்டியதைவிட அதிகமாக டன் டன்னாகத் தங்கக் கட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு இருக்கிறது என்றால், இது சமுகப் பொருளாதார வாழ்வை பாதிக்கச் செய்யாதா? பண வீக்கத்தை ஏற்படுத்தாதா?

எல்லாம் கடவுளால் கிடைத்தது என்பது உண்மையானால், கடவுளுக்குக் பொன்னும், மணியுமாக காணிக்கைக் கொடுப்பது ஏன்?

பக்தி என்பது ஒரு 'ஃபேஷன்' என்றும், 'பிசின்ஸ்' என்றும் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி விமர்சிக்கும் அளவுக்கு இந்தக் கோயிலும் - கடவுள் சமாச் சாரங்களும் புழு வைத்தப் புண்ணாகி விட்டதே!

இதில் என்ன பாரம்பரியம் வேண்டிக் கிடக்கிறது? எவனோ ஒருவன் எந்தக் காலத்திலோ கிறுக்கி வைத்ததெல்லாம் தெய்வ வாக்கா? கண்டிப்பாகக் கடைபிடித்துத்தான் தீர வேண்டுமா? அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் வழிபடச் செல்லும் பிரச்சினையில்கூட ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் போடுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

பெண்களும், அய்யப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியபோது முதலில் அதனை வரவேற்றது ஆர்.எஸ்.எஸ்.தானே! அய்யப்பன் கோயிலுக்குப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தவர்களே ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்த பெண் வழக் குரைஞர்கள்தானே!

கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சியில் இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காகத்தானே இந்தப் பிரச்சினையை அரசியலாக்குகிறார்கள்;  இல்லையென்று மறுக்க முடியுமா?

பெண் பக்தைகளின் கருத்தைக்கூட உச்சநீதிமன்றம் கேட்கவில்லையாம். பல்லாயிரக்கணக்கில் பெண்கள் திரண்டு நின்று அய்யப்பன் கோயிலில் வழிபடும் உரிமை எங்களுக்கு வேண்டும் என்று குரல் கொடுத்தது எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஞாபக சக்தியிலிருந்து மறைந்து போய் விடுமா?

"காந்தியானாலும், கடவுளானாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படும் வரைதான்" என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் கருத்துதான் நினைவிற்கு வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner