எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியை மீண்டும் மேற்கொள்ளவேண்டும் என்று முத்தாலங்குறிச்சி காமராசு, வழக்குரைஞர் சுந்தர் போன்றோர் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து விசாரித்துவரும் நீதிமன்றம் 11.4.2019 (வியாழன்) அன்று  நடந்த விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப தொல்லியல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ் வாய்வு அறிக்கைகளை தயார் செய்ய மேலும் 8 மாதங்கள் அவகாசம் தேவை என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப் பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான், அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

ஆனால், ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு ஆய்வு நடத்தவில்லை எனில் மாநில அரசு ஆய்வு நடத்த அனுமதி வழங்குவீர்களா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த, மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர், மாநில அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டால், அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, அகழாய்வு நடத்த மாநில அரசுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கும் என்பதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்து, ஏப்ரல் 25ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. முன்னதாக, தொல்லியல் துறை பணியிடங்களுக்கு சமஸ்கிருதத்தில் பட்டம் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தொல்லியல் துறை பணியிடங்களுக்கான அறிவிப் பாணையில் இவ்வாறு ஒரு நிபந்தனை இடம்பெற்றிருந்த நிலையில், இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.

"தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் அதிக அளவில் தமிழ் பிராமி எழுத்துக்களே உள்ளன" என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் இருப்ப தால் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது என்று திட்ட வட்டமாகத் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பு மூலம் ஓர் உண்மை வெளியில் வந்துள்ளது. தொல்லியல் துறை சம்பந்தமாகப் படிக்க வேண்டுமானால், சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்திருக்கிறது என்பது! இதன்மூலம் பூனைக் குட்டி வெளியில் வந்துள்ளது. ஒரு கால கட்டத்தில் மருத்துவக்  கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் தெரிந் திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் பனகல் அரசர் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது ஒழிக்கப்பட்டது.

இப்பொழுது என்னவென்றால் தொல்லியல் துறை தொடர்பான படிப்புக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலையிருந்தது இப்பொழுதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந் தனையிருப்பதின் நோக்கம் என்ன என்பது வெளிப் படையே! பார்ப்பனர்களுக்கு மட்டுமே கதவை முழுவதும் திறந்து விடும் திட்டமிட்ட சூழ்ச்சி - ஏற்பாடு என்பது விளங்க வில்லையா?

தமிழக தொல்லியல் துறை என்ற பிரிவு 1964-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது, தமிழகத்தில் அதிகம் கிடைத்துக் கொண்டு இருக்கும் பழங்கால நினைவுச் சின்னங்களை ஆய்வு செய்யவும், அதைப் பாதுகாக்கவும், ஆவணப் படுத்தவும் மற்றும் அருங்காட்சியகத்தை நிறுவி அதைப் பராமரிப்பதும், ஏற்கெனவே அகழாய்வு செய்யப்பட்ட பகுதி மற்றும் நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதும் இதன் பணிகளாக வரையறுக்கப்பட்டது.

இந்த நிலையில் 1966-ஆம் ஆண்டு ஓலைச்சுவடி, செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் பதிவு செய்வதும் இந்தத் துறையின் கீழ் வந்தன. இதனை அடுத்து இரண்டாவது இயக்குநராக பதவியேற்ற ஆர்.நாகசாமி செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள், கல்வெட்டுக்களை ஆய்வு செய்யும் பணிக்கு சமஸ்கிருதம் முதுகலை கட்டாயம் என்ற விதி முறையைக் கொண்டு வந்தார்.

அது இன்றுவரை தொடர்கிறது.   இவர் பதவியில் இருக்கும் போதுதான் தொல்லியல் துறை நூலகம் மற்றும் தொல்லியல் துறைகுறித்த பட்டயப்படிப்புகள் 1973-ஆம் ஆண்டு துவங்கப்பட்டன. இதிலும் சமஸ்கிருதம் தேவை என்று விதிவகுக்கப்பட்டது,

நாகசாமி என்ற இந்தப் பார்ப்பனர் மனு தர்மத்தி லிருந்துதான் திருக்குறளே வந்தது என்று சொல்லப் போய் தமிழ்நாட்டில் கடும் புயல் வீசியது. இவர் எங்கே இருந்தாலும் தன் பூணூல் தனத்தைக் கைவிட மாட்டார் என்பதற்கு அடையாளம்தான் இவர் தொல்லியல்துறை இயக்குநராக இருந்தபோதுதான் தொல்லியல் துறைப் படிப்புக்கு சமஸ் கிருதம் படித்திருக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்தார் என்பது இப்பொழுது தெரிய வருகிறது. பார்ப்பனர் தமிழரா? தாய்மொழி அவர்களுக்குத் தமிழா என்பதைத் தமிழர்கள் சிந்திக்கட்டும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner